Wednesday, 4 June 2014

கோச்சடையானும் ரஜினி என்ற ஆளுமையும்:


ரஜினி.. தமிழ்சினிமாவின் தவிர்க்கமுடியாத ஆளுமை.. நான் வலைபதிவில் எழுதத் தொடங்கி நூற்றுக்கும் மேற்ப்பட்ட பதிவுகள் எழுதிவிட்டேன்… ஆனால் இன்றுவரை ரஜினியைப் பற்றி எழுதுவதற்கான வாய்ப்புகள் அமையவே இல்லை.. முந்தைய பதிவான கிம் கி டுக் வரிசையில் ஓரிடத்தில் அவருடைய பெயரை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்தது, அவ்வளவே… கோச்சடையான் திரைப்படம் வெளிவந்து பத்து நாட்களுக்கும் மேலான பின்பு இந்தப் பதிவை எழுதுவதற்கான காரணம் கதை விவாதத்திலேயே காலம் கழிந்து கொண்டிருப்பதால், நேரமின்மை என்பது ஒன்று.. மற்றொன்று இந்தப் பதிவை கோச்சடையான் திரைப்படத்தின் பதிவாக மட்டுமே எழுத எனக்கு மனமில்லை… இதை ரஜினிக்கான பதிவாக எழுதவே எனக்கு விருப்பம்… இந்தப் பதிவு முழுக்க நான் அவரை சூப்பர் ஸ்டார் என்றோ…? தலைவர் என்றோ ரஜினிகாந்த் என்றோ பலருக்கும் பழக்கப்பட்ட பூடகமான பெயர்களில் அழைக்கப் போவதில்லை…. அந்தப் பெயர்களை விட ரஜினி என்ற பெயரில் ஏதோ ஒரு இனம் புரியாத கவர்ச்சியும் ஒரு விதமான நெருக்கமும் இருப்பதாக நான் உணர்கிறேன்… அதனால் இந்தப் பதிவு முழுக்க இவர் வெறும் ரஜினி மட்டுமே..


தமிழ் சினிமாவின் கால வரிசையை நியமிக்கும் முக்கியஸ்தர்களில் இந்த ரஜினி மிகமிக முக்கியமானவர்.. ஒரு சாதாரண பேருந்து நடத்துநராக வாழ்க்கையைத் தொடங்கிய இவர், தமிழ் திரைச்சூழலில் நடிப்பு நாயகனான கமலஹாசன் கால்பதிக்கத் தொடங்கியிருந்த அதே சூழலில், சிறுசிறு வேடங்களில் அறிமுகமாகி தன்னுடைய துறுதுறுப்பான நடிப்பாலும் படு வேகமான உடல்மொழியாலும் ரசிகர்களை மெல்ல மெல்ல தன்பால் ஈர்த்தவர்… இன்று அவருடைய திரைப்படங்கள் வெளியாகும் நாட்களில் அவரது அதி தீவிர ரசிகர்கள் நடத்தும் கொலைவெறி கொண்டாட்டங்களை பார்க்கும் போது எரிச்சல்களும் அதிர்ச்சியும் ஏற்பட்டாலும், அதில் ஒரு ஆச்சரியம் கலந்திருப்பதும் உண்மை… அவரது திரைப்படம் எப்போது வெளியாகும் என்று அவரது ரசிகன் காத்திருக்கிறான்.. படம் வெளிவந்தவுடன் காவடி எடுக்கிறான்… அலகு குத்துகிறான்.. முடி காணிக்கை செலுத்துகிறான்.. பன்னீர் அபிஷேகம் பாலபிஷேகம் செய்கிறான்.. இப்படி ஒரு ரசிகன் ஒரு நடிகனை தன் கடவுளாக பூஜிக்கும் அளவுக்கு மாறியிருக்கிறான், என்றால் அந்த மனமாற்றத்தின் பிண்ணனியில் நிகழ்ந்த மர்மம் தான் என்ன என்ற கேள்வி எழுவதை தவிர்க்கமுடியவில்லை… ரஜினியின் திரைப்படங்கள் எத்தனையோ வந்திருந்தாலும் என்னைப் பொருத்தவரை அவரது அத்தனை திரைப்படங்களை விட அற்புதமான திரைக்கதையை கொண்டிருப்பது அவரது வாழ்க்கை தான் என்று எண்ணத் தோன்றுகிறது…
இன்றும் அவருடைய திரைப்படங்கள் வெளிவருகின்ற நாட்களில், அவரை எப்படியாவது அரசியலுக்கு அழைத்துச் சென்றுவிடும் ஆசையில் அணி வகுக்கும் பதாகைகளின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது… இப்படி தன் எதிர்காலத்தையே அவரிடம் ஒப்படைக்கும் அளவுக்கு ஒர் ரசிகன் (அல்லது ஒவ்வொரு ரசிகனும்) உணர்ச்சிவசப்படுகிறான் என்றால், அந்த உணர்ச்சிவசப்படும் மனநிலையை வெறும் மடத்தனம், மூடத்தனம், அறியாமை என்னும் பழமைவாத வார்த்தைகளால் மட்டுமே பார்க்க எனக்கு மனமில்லை… அதன் உட்கூறாக ஏதோ உளவியல் சார்ந்த காரணிகளும் இருக்கக் கூடுமோ என்ற ஐயப்பாடு எனக்கிருக்கிறது…. அந்தக் காரணிகள் என்னவாகவெல்லாம் இருக்கலாம் என்பதைப் பற்றிய விவாதமும், கோச்சடையான் திரைப்படத்தைப் பற்றி கொஞ்சம் வாதமும் தான் இந்த மொத்தப் பதிவும்…

சமீபகாலமாக சில இயக்குநர்கள் தங்கள் திரைப்படம் குறித்த தங்கள் பிரத்யேக பேட்டிகளில் ஒரு வாக்கியத்தை அடிக்கடி பயன்படுத்துவைப் பார்க்கிறேன்… ’அது ”நான் கருத்து சொல்வதற்காக படம் எடுக்கவில்லை… சினிமா அதற்கான களமும் அல்ல” என்பதாக இருக்கிறது அந்த வாக்கியம்..’ எனக்கு இதன் அர்த்தம் விளங்கவே இல்லை… அதுயெப்படி எந்தவொரு கருத்துமே சொல்லாமல் ஒரு திரைப்படம் நீங்கள் எடுக்க முடியும்… ஒரு இரண்டரை மணி நேர திரைப்படத்தில் நீங்கள் எதுவுமே சொல்லப் போவதில்லை என்றால், ஆடியன்ஸ் ஏன் அந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும்.. ஆக உங்கள் திரைப்படம் எந்தக் கருத்தையுமே சொல்லவில்லை என்று நீங்கள் நினைத்துக் கொண்டால் கூட, பலதரப்பட்ட மனநிலையுடன் உங்கள் திரைப்படத்தைப் பார்க்கின்ற ஒவ்வொரு  பார்வையாளனுக்கும் உங்களது திரைப்படம் ஏதோ ஒன்றை சொல்லிக் கொண்டுதான் இருக்கிறது… ஒவ்வொரு பார்வையாளனும் உங்களுக்குத் தெரியாமல், ஏன்..? அவனுக்கே கூட தெரியாமல் ஏதோ ஒன்றை உங்களது திரைப்படங்களில் இருந்து எடுத்துக் கொண்டுதான் இருக்கிறான் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் தான் இந்த ரஜினி…. மற்ற ஊர்களில் எப்படி என்று எனக்குத் தெரியாது.. ஆனால் நமது ஊரில் ஒரு திரைப்படம் என்பது வெறும் திரைப்படம் அல்ல… இன்னும் நம் ஊர்களில் திரைப்படம் என்பது… பல ரசிகர்களுக்கு அவர்களது வாழ்க்கையோடு உறவாடக்கூடியது… அப்படி உறவாடி உறவாடி ஒரு கட்டத்தில் வாழ்க்கையாகவே மாறிப் போவது தான் திரைப்படம்.. நாயகனின் இடத்திலோ அல்லது நாயகியின் இடத்திலோ அவர்களுக்குப் பதிலாக தங்களை பதிலீடு செய்து, படத்தின் காட்சிகளை தங்கள் வாழ்க்கை நினைவுகளின் மீள்பதிவுகளாகவோ அல்லது கனவுகளின் நனவுகளாக எண்ணி எக்கால களிப்படையும் மக்கள் இன்னும் கூட நம் ஊர்களில் அதிகம் தான்… இக்காலத்திலேயே அதிகம் என்றால் ரஜினியின் ஆரம்பகாலத்தில் கேட்கவா வேண்டும்…

சரி… இந்தப் பதிவைப் படித்துக் கொண்டிருக்கிற நீங்கள் ஆணாக இருக்கின்ற பட்சத்தில் உங்களிடம் ஒரு கேள்வி… உங்களுக்கு அனுஷ்காவைப் பிடிக்குமா…? பிடிக்கும் என்றால் நீங்கள் காரணம் சொல்லத் தேவையில்லை.. ஏனென்றால் நீங்கள் ஒரு ஆண்… சரி.. நீங்கள் ஆணாகவோ பெண்ணாகவோ யாராகவும் இருந்துவிட்டுப் போங்கள்.. உங்களிடம் மற்றொரு கேள்வி. உங்களுக்கு கமல்ஹாசனை பிடிக்குமா…? பிடிக்கும் என்றால் நீங்கள் காரணம் சொல்லத் தேவையில்லை.. ஏனென்றால் அவரது நடிப்பு அப்படிப்பட்டது…. சரி உங்களிடம் கடைசியாக ஒரு கேள்வி. உங்களுக்கு ரஜினியை பிடிக்குமா…? பிடிக்காது என்றால் காரணம் சொல்லத் தேவையில்லை.. ஒரு வேளை நீங்கள் கமலின் ரசிகராகக் கூட இருக்கலாம்…. ஆனால் உங்களுக்கு ரஜினியை பிடிக்கிறது என்றால் நீங்கள் கண்டிப்பாக கண்டிப்பாக காரணம் சொல்லியே தீர வேண்டும்… இப்படியான ஒரு வினா-விடையை எடுத்துக் கொண்டு நம் சக நண்பரை நாம் அணுகினால், பெரும்பாலும் அந்த கடைசி வினாவிற்கான பதில் ”தெரியவில்லை.. ஆனால் பிடிக்கும்…” என்பதாகவோ அல்லது அவரது “ஸ்டைல்” பிடிக்கும் என்பதாகவோ அல்லது “அவரது குணம், பகட்டு இல்லாத வாழ்க்கை, எளிமை இப்படி ஏதேனும் ஒன்று பிடிக்கும்..” என்பதாகவோ தான் பதில்கள் பெரும்பாலும் இருக்கும்..

சரி.. அனுஷ்காவின் அழகுக்கும் சினிமாவுக்கும் சம்பந்தம் இருக்கிறது…. கமலின் நடிப்புக்கும் சினிமாவுக்கும் தொடர்பு இருக்கிறது…. ஆக அனுஷ்காவின் ரசிகர்கள் அவரது அழகைக் காண அவரது திரைப்படத்துக்கு வருகிறார்கள்… கமலின் ரசிகர்கள் அவரது நடிப்பைக் காண அவரது திரைப்படத்துக்கு வருகிறார்கள்…. சரி… ரஜினியின் ஸ்டையிலுக்கும் சினிமாவுக்கும் என்ன தொடர்பு… ஸ்டைல் என்பது சினிமாவின் ஒரு அங்கமாக அங்கீகரிக்கப்படாத ஒன்றாகவே இன்று வரை இருக்கிறது…  ரஜினியின் குணம், பகட்டில்லாத வாழ்க்கை, எளிமை இவற்றுக்கும் ரஜினி நடிக்கும் திரைப்படத்துக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா…? இதில் எதைக் காண ரஜினியின் திரைப்படத்துக்கு இப்படி ஒரு கூட்டம் குமிகிறது…. இவர்கள் இப்படி குமிவதற்க்கு ஒரே ஒரு காரணம் தான்… இவர்கள் காண விழைவது ரஜினியை… ரஜினியை மட்டும் தான்… இப்படி மக்கள் ஒரு திரைப்படத்தை பார்க்க குவிவது, அந்த திரைப்படம் சார்ந்த ஏதோவொரு அம்சத்துக்காக அல்லாமல், ரஜினி என்னும் தனிமனிதனின் வாழ்க்கை சார்ந்த ஏதோவொரு அம்சத்துக்காக என்று மாறும் அந்தப் புள்ளியில் தான் திரைப்படங்கள் வெறும் திரைப்படங்களாக இல்லாமல், சாமானிய மனிதனின் வாழ்க்கையாக மாறும் அதிசயப்புள்ளி அமிழ்ந்து இருப்பதாக நான் கருதுகிறேன்..

எம்.ஜி.ஆர் சிவாஜி என்னும் இரு பெரும் ஆளுமைகள் திரையுலகை ஆண்டு சென்றப் பின்னர், ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அந்த இரண்டு இடங்களையும் மிகச் சரியாக ஆக்ரமித்துக் கொண்ட இருவர் ரஜினியும் கமல்ஹாசனும் தான்…. முதல் இருவருக்கும் வெவ்வேறு கட்சிகள் சார்ந்த ஒரு அரசியல் பிண்ணனி இருந்தது என்பதும், அதுவும் கூட ஏதோவொரு வகையில் அவர்கள் மக்கள் மனதில் இடம்பிடிக்க வழி செய்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை.. ஆனால் ரஜினி கமல் விசயத்தில் அப்படி இல்லை.. ஆரம்பகாலத்தில் இருவருமே எந்தவித தீவிரமான அரசியல் நிலைபாடும் இல்லாமல் இருந்தவர்கள் தான்… இதில் கமல் ஒரு நடனக் கலைஞர், சிறுவயதிலேயே திரைத்துறைக்கு அறிமுகம் ஆனவர் இப்படி சில சாதகமான அம்சங்கள் அவரது வாழ்க்கையை முன்னெடுத்ததாகக் கொள்ளலாம்.. ஆனால் ரஜினி விசயத்தில் அப்படி எதுவுமே இல்லை… அவருக்கு தமிழ் மொழி தெரியாது… மிகப்பெரிய பின்புலம் கிடையாது… வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர்; மிகப்பெரிய அழகன் கிடையாது... எனக்குத் தெரிந்து தமிழ் திரையிலகில் பாகவதரின் காலம் தொட்டு எம்.ஜி.ஆர் காலம் வரை செக்கச் செவேல் என்று ஒரு சிவந்த மேனி இல்லாத ஒரு நாயகனையோ அல்லது நாயகியையோ அல்லது காமெடியனையோ ஏன் துணை நடிகரைக் கூட நான் பார்த்ததில்லை…. ஆனால் ரஜின் கமல் காலகட்டங்களில் தான் பாலசந்தர் பாரதிராஜா போன்றோரின் கைவண்ணத்தில் ஒப்பனை இல்லாத சில முகங்கள் சினிமாவின் சட்டகத்துக்குள் தென்படத் தொடங்கின… அதுவரை திரையுலக பிரமுகர்களை ஏதோ தேவலோக இந்திரர்கள், கன்னிகைகள் என்கின்ற ரீதியில் தான் மக்கள் பார்த்திருப்பார்கள் என்று எண்ணுகிறேன்…. ஆனால் தன்னுடைய உருவத்துடன் ஒப்பிடுவதற்கு ஏற்றார் போல் நாயகர்களை காணத் தொடங்கிய பின்னர் தான் நாயகனின் இடத்தில் தன்னைப் பதிலீடு செய்யும் மனோபாவம் தலைதூக்கத் தொடங்கியிருக்கலாம் என்றும் எண்ணுகிறேன்…

மேலும் பெரும்பாலான தமிழ் மக்களுக்கு தான் கருப்பாக இருக்கிறோம் என்பதே ஒரு மிகப்பெரிய மனக்குறையாக இருந்த காலங்களையும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்… (எங்கள் நெருங்கிய சொந்தத்தில் ஒரு பெரியப்பாவுக்கு அந்த மனக்குறை உண்டு.. அவர் ஒரு தீவிர ரஜினி ரசிகரும் கூட…) அவர்களுக்கு அதே ரீதியில் யோசித்து யோசித்து தன்னம்பிக்கை என்பதும் கூட தளர்வாக இருக்கும்… அந்தக் காலகட்டத்தில் தான் கருப்பு என்பதும் ஒரு கலர்தான் என்பதை நமக்கு நினைவுறுத்தும் விதமாக திரையுலகில் ஒரு நட்சத்திரமாக ரஜினி மின்னத் தொடங்குகிறார்… அவரது அதீத தன்னம்பிக்கையுடன் கூடிய நடை உடை பாவனைகள் கூனிக் குருகி அமர்ந்திருந்தவர்களை எல்லாம் நிமிர்ந்து உட்காரச் செய்து புளகாங்கிதம் அடையச் செய்கின்றன… கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் அவரைக் கொண்டாடத் தொடங்குகின்றனர்… அதே நேரத்தில் அவர் கச்சிதமாக எம்.ஜி.ஆர் விட்ட பாதையை பிடித்துக் கொள்கிறார்…. திராவிட சிந்தனைகள், பொதுவுடைமை கோட்பாடுகள், தத்துவங்கள், தாய்ப் பாசம் என கொஞ்சம் கொஞ்சமாக நூல் பிடித்து நூல் பிடித்து இன்று இந்த இமாலய உயரத்தை அடைந்திருக்கிறார்… இவரின் வழித்தோன்றிகளாக கருதப்படும் விஜயோ அஜீத்தோ சிவகார்த்திகேயனோ…? இவரது இடத்தைப் பிடிப்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லவே இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது…

ஏனென்றால் நீங்கள் நன்றாகப் பார்த்தால், ரஜினியின் எந்தத் திரைப்படத்திலுமே சமூகத்தைக் கெடுப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கவே இருக்காது, உதாரணமாக படிக்காமல் சுற்றுவதை தவறில்லை என்று வாதிடுவது போன்ற காட்சிகளோ, குடி கூத்துக்கு வக்காலத்து வாங்குவதான காட்சிகளோ…? இம்மியளவும் இருக்காது… புகை பிடிக்கும் காட்சிகள் பல திரைப்படங்களில் வந்தாலும், அதை நியாயப்படுத்துவதான வசனங்கள் இருக்கவே இருக்காது… இப்படி தன் இமேஜை இம்மியளவும் மக்களிடம் சிதையாமல் பார்த்துக் கொண்டவர் ரஜினி… அதனால் தான் சொல்கிறேன்.. “தண்ணியடிச்சா தப்பாமா…? திட்றாங்க…. அப்பாம்மா…” என்று பீலிங்க் கொட்டும் சிவாவுக்கு அந்த இடமெல்லாம் சாத்தியமேபடாது என்று…

மேலும் மேலே சொன்ன மூவருமே ரசிகர்களாகக் கொண்டிருப்பது இளைஞர்கள் மற்றும் இளைஞிகளையே… இவர்களின் ரசனை நிலையானதாக இருப்பது கேள்விக்குறியே… ஆனால் ரஜினிக்கோ அவரது ரசிகர்கள் என்பவர்கள் பெரும்பாலும் சிறுவயதில் இருந்தே அவரது ரசிகர்களாக பிந்தொடருபவர்களாகவே இருப்பார்கள்… இவர்கள் அவ்வளவு எளிதில் மாறிவிடுவது இல்லை… ஏன் உதாரணத்துக்கு என்னையே எடுத்துக் கொள்ளுங்கள்… எனக்கு விவரம் தெரிந்து நான் முதன்முதலில் பார்த்த ரஜினி திரைப்படம் 1987ல் வெளிவந்த மனிதன் திரைப்படம்… அதைப் பார்த்த அனுபவம் இன்னும் என் மனதில் பசுமையாக இருக்கிறது… எனக்கு சிறுவயதில் மிகவும் பிடித்த இரண்டு விசயங்கள் உண்டு என்றால், ஒன்று தேங்காய் பர்ப்ஃபி… மற்றொன்று ரஜினி… இரண்டின் மீதும் இன்றுவரை கொண்ட ஆசை குறையவே இல்லை… இது எங்கள் குடும்பத்துக்கு மட்டும் தெரிந்த விசயம் இல்லை… எங்கள் உறவினர் வட்டத்தில் பலருக்கும் தெரிந்த விசயம்… என்னை சமாதானம் செய்யவேண்டும் என்றால், ஒரு ரஜினியின் புகைப்படம் கொடுத்தால் போதும்… இல்லை ஒரு ரஜின் திரைப்படத்துக்கு கூட்டிச் செல்கிறேன் என்று வாக்கு கொடுத்தால் போதும்.. சிலர் இதனை மனதில் வைத்துக் கொண்டு என்னைக் கிண்டல் செய்வது போல் என்னை ரஜினி என்றே அழைப்பர்… ரஜினியின் புகைப்படங்கள் எந்த பத்திரிக்கை புத்தகத்தில் வந்தாலும் அதை கத்தரித்து சேகரிப்பது என்பதும் அந்த காலகட்டங்களில் எனக்கு விருப்பமான பொழுதுபோக்கு… என்னைப் போலவே என் மாமன் மகன் ஒருவரும் தீவிர ரஜினி ரசிகர்… ஆனால் அவரது அப்பாவும் என் தாய் மாமாவுமான சந்திரன் மாமாவோ தீவிர கமல் ரசிகர்.. என் மாமன் மகனை சந்தோசப்படுத்துவதற்காக ஒரு கோடை விடுமுறையில் சிவகாசி நோக்கி பயணிக்கும் போது நான் என் தொகுப்பில் இருந்த ஒரு அழகான ரஜினி ஸ்டிக்கரை அவருக்காக எடுத்துச் சென்று, அதை இருவரும் சேர்ந்து அவரது தந்தையை வெறுப்பேற்றும் விதமாக நிலைக்கண்ணாடியில் ஒட்டி வைத்தோம்…. அவரும் சிரித்துக் கொண்டே விட்டுவிட்டார்…. இன்றும் அந்தப் புகைப்படம் அந்தக் கண்ணாடியில் இருக்கிறது… இன்றும் அதைப் பார்க்கும் போதெல்லாம் அப்போது இருந்த அந்த தீவிர ரஜினி மனநிலையை எண்ணி ஒரு புன் முறுவல் பூப்பதை தவிர்க்க முடிவதில்லை…

கோச்சடையான்:

சரி… இனி கோச்சடையான் பற்றி… ஏற்கனவே சொல்லியாயிற்று…. ரஜினியின் திரைப்படங்கள் என்பவை திரைப்பட நுட்பத்துக்காகவோ அல்லது திரைப்பட செறிவுக்காகவோ பார்க்கப்பட வேண்டியவையோ பார்க்கப்படுபவையோ அல்ல… அவை முற்றிலும் ரஜினிக்காக மட்டுமே பார்க்கப்படுபவை… இந்தக் கோச்சடையானும் கிட்டத்தட்ட அப்படித்தான்… மோசன் கேஃப்சரிங்க் என்னும் உடலசைவைப் படம் பிடிக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டு முதன்முதலாக இந்திய மொழிகளில் ஒன்றான தமிழில் உருவாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் என்ற ரீதியில் மட்டும் இது திரையிலகம் சார்ந்தும் பேசப்படும் படமாக இருக்கும்.. அவை தவிர்த்து ஒரு முள்ளும் மலரும் போன்றோ பாட்ஷா போன்றோ ஒரு அற்புதமான கதையாடலுக்காகவோ அல்லது திரைக்கதை உத்திக்காகவோ பாரட்டப்படும் படமாக இருக்குமா என்று கேட்டால் அப்படியெல்லாம் இல்லை என்பதே என் பதிலாக இருக்கும்..

அதற்காக ஒரு மோசமான கதையாடலோ திரைக்கதையோ இதில் இருக்கிறது என்று சொல்லவரவில்லை… புதுமையில்லாத சராசரி சுவாரஸ்யம் உள்ள கதையும் திரைக்கதையும் இருக்கிறது… ஆனால் அந்தக் கதையையும் திரைக்கதையையும் ரஜினி என்னும் பிம்பம் சிதைத்துவிடுவதும் உண்மை என்பதையும் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்… எப்படியும் நம் அனைவருக்குமே தெரியும்.. ரஜினி ஒருவரைக் கொல்ல முயலுகிறார் என்றால் கண்டிப்பாக அந்த ஆள் கெட்டவனாகத்தான் இருப்பான் என்று…. இதுபோன்ற ஒருமை சார்ந்த பிம்பங்கள்தான் திரைக்கதையின் சுவாரஸ்யத்தைக் கொன்றுவிடுகிறது… ஆனாலும் படத்தில் சில சுவாரஸ்யமான இடங்களும் இருக்கின்றன… அதில் எனக்குப் பெரிதும் பிடித்த இடம் கோச்சடையான் தளபதி தன் நாட்டு வீரர்களின் உயிரைக் காப்பாற்ற அவர்களை எதிரி நாட்டு மன்னனின் இடத்தில் பிணைக்கைதியாக விட்டுவிட்டு நாடு திரும்பும் இடம்… அந்த இடத்தில் ஒரு வசனம் வரும்… ”எல்லா போராட்டமும் உயிர் வாழ்வதற்குத்தானே..” என்கின்ற தொனியில் அமைந்த அந்த வசனம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது… அதுபோல் ராணாவை விட கொஞ்ச நேரமே வந்து செல்லும் கோச்சடையான் தான் வெகுவாக கவருகிறார்…

தன் தந்தையை கொன்றவர்களை பழி வாங்கும் பழைய பாணி கதைதான்… அதை கொஞ்சம் விறுவிறுப்பாக தந்திருக்கிறார்கள்…. பெரும்பாலும் குறை என்று சுட்டிக்காட்டப்படுவது தொழில்நுட்ப பிழைகளான மோசன் கேப்சரிங் பிண்ணனியைத்தான்… இதே தொழில்நுட்பத்தில் ஹாலிவுட்டில் படமாக்கப்பட்ட டின் டின் மற்றும் அவதார் போன்ற படங்களை எல்லாம் ஒப்பிட்டுப் பார்த்தால் நம் கோச்சடையான் ஒன்றுமே இல்லைதான்… ஆனால் அவர்களின் பட்ஜெட் 1445 கோடி.. நம்முடையதோ வெறும் 120 கோடி… வித்தியாசம் இருக்கத்தானே செய்யும்…. அப்படி இருந்தும் இதை ஏன் செய்தார்கள் என்று கேட்டால், எதற்கும் ஒரு ஆரம்பம் வேண்டுமே…. அதுதான் இங்கு ஆரம்பித்து இருக்கிறது என்று நான் சொல்லுவேன்…

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை… நாகேஸ் அவர்களை மீண்டும் நம் கண் முன்னே நடமாடவிட்டு அவரது உடல்மொழியை சாத்தியப்படுத்தியது என பாராட்ட பல விசயங்களும் இருக்கத்தான் செய்கின்றது… அதுபோல் குறைகளும் இல்லாமல் இல்லை… அதில் முக்கியமான குறையாகத் தெரிவது.. ரஜினியை முழுமையாக உணர முடியாமல் போவது… அவரது எக்ஸ்பிரஸ் வேகத்திலான எக்ஸ்பிரசன்கள் கூட இதில் ஆடி அசைந்து மெதுவாக வருவதைப் பார்க்கும் போது மோசன் கேஃப்சரிங்க் ரஜினியை வைத்துத்தான் பண்ணினார்களா என்கின்ற அளவுக்கு சந்தேகம் வருகிறது…. அதனாலயே சின்னக் சின்னக் குறைகள் கூட பூதாகரமாகத் தெரிவதையும் தவிர்க்க முடியவில்லை… அதுபோல ரஜினி மற்றும் நாகேஷ் அவர்களின் உருவ ஒற்றுமைக்கு உழைத்த அளவுக்கு மற்ற நடிகர்களின் உருவத்தை கொண்டு வருவதில் சிரத்தை மேற்கொண்டு உழைக்கவில்லை போலும்… நாசர், சண்முகராஜன், ஆதி போன்றவர்களை அவர்களின் குரலை வைத்துத்தான் கண்டுகொள்ள வேண்டியிருக்கிறது… மேலும் மலைக்கு மலை தாவுவது போன்ற அதிசிரத்தையான ஹீரோயிசக் காட்சிகளை எல்லாம் தவிர்த்திருக்கலாம்… இதை ஒரு வேளை பிற நாட்டவர்கள் பார்க்க நேர்ந்தால், இந்தப் படம் போலத்தான் நம் சரித்திரக் குறிப்புகளும் இருக்கும் என்று எண்ணிக் கொள்வார்கள் அல்லவா..?

வசனங்கள் வழக்கம் போல் ரஜினியை மனதில் மையப்படுத்தியே எழுதப்பட்டதாக தெரிகிறது…. அதில் குறிப்பாக தன் சிறுவயது மகன்களான ராணா மற்றும் சேனாவுக்கு உபதேசம் செய்வது போல் சொல்கின்ற தத்துவங்கள் எல்லாம் குறிப்பெடுத்துக் கொள்ளத் தூண்டுபவை… நீ என்பது உன் பேர் அல்ல உன் உடல் அல்ல.. உன் உயிர் அல்ல.. உன் செயல் என்பதாக வரும் வசனம் மேலே நான் சொன்ன அவரது ஆளுமை அடையாளத்துக்கான பதில்… அதுபோல் மிகுந்த பிரமிப்பை ஏற்படுத்தும் மற்றொன்று ஆர்ட் டிபார்ட்மெண்ட்… மிகச் சிறந்த கற்பனை நயத்துடன் கட்டப்பட்டு இருக்கும் கட்டிடங்கள்…. அழகுணர்ச்சி பல இடங்களில் அள்ளுகிறது… அதுபோல ஆங்காங்கே தமிழர் பழக்கவழக்கங்களை பறை சாற்றுவதைப் போல் நம் அடையாளங்களை அள்ளித் தெளித்திருப்பதும் அருமை… அதற்காக செளந்தர்யாவுக்கு ஸ்பெசலான வாழ்த்துக்கள்… ரெஃபரன்ஸ்க்கு கூட எந்த தமிழ்படமும் கிடையாது…. முழுக்க முழுக்க இந்திய திரையுலகுக்கே புதிய தொழில்நுட்பம்… இருந்தும் துணிச்சலாக அதில் இறங்கியிருக்கும் அந்த தைரியமான முயற்சிக்காகவும் இந்த இளம் இயக்குநரைப் பாராட்டலாம்…

வெண் திரையில் ரஜினியைப் பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டது என்ற ஏக்கம் உள்ளவர்கள் கண்டிப்பாகப் பார்க்கலாம்… அவரது அதகளமான பாடிலாங்க்வேஜ் போன்றவற்றை பார்க்கமுடியவில்லையே என்று ஏங்குபவர்கள் லிங்கா வரும் வரை காத்திருக்கலாம்.. மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள்… நானும் மாறித்தான் போயிருக்கிறேன்… ஆனால் ரஜினியோ ரஜினியின் திரைப்படங்களோ எந்தமாற்றமும் அடையவே இல்லை… சிறுவயதில் ரஜினி மீது இருந்ததைப் போலவே தேங்காய் பர்ஃபி மீது தீராத மோகம் உண்டு… பின்பு பல மாற்றங்களுக்கு பின்னர் இன்று அந்த அளவுக்கு அதன் மீது மோகம் இல்லை… அதே நேரத்தில் அதன் மீது வெறுப்பும் இல்லை… அதே போல்தான் ரஜினி படங்கள் மீதும் ரஜினி மீதும்… இவை உன்னதமான திரைப்படங்கள் இல்லை.. இவை காட்டுவது அப்பட்டமான வாழ்க்கை இல்லை… இவை ஒரு மனிதனை சீர்ப்படுத்த உதவாது என்பது நன்றாகவே தெரிகிறது… என்றாலும் ரஜினியின் திரைப்படங்கள் மனிதனை சீரழிக்கவும் செய்யாது என்கின்ற காரணத்தாலும் அவற்றை என்னால் இன்னும் வெறுக்கமுடியவில்லை என்பதாலும், ஒரு காலத்தில் நான் விரும்பிய தேங்காய் பர்ஃபியையும் ரஜினி படத்தையும் இன்றும் ஒரு கூட்டம் விரும்பிக் கொண்டிருக்கிறது என்பதாலும், இது போன்ற திரைப்படங்களை நான் புறக்கணிக்க முடியாத புன்னகையுடன் கடந்து செல்ல விரும்புகிறேன்….




1 comment:

  1. இன்பா, நல்ல பதிவை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்...
    தொடர்ந்து பகிரவும்..

    ReplyDelete