Monday, 1 July 2013

ஜுன் மாதம் - கவிதை போட்டி முடிவுகள்


காற்றின் துணையின்றிப் பெய்கிறது மழை என்ற தலைப்பில் கீழே கொடுக்கப்பட்ட 

கவிதைகள் பங்கேற்றன. அதில் நமது அடைமழை நடுவர் குழு பரிசீலித்து முதல் மற்றும் 

இரண்டாவது இடத்தைப் பிடித்த கவிதைகள் அறிவித்தாகி விட்டது.

முதல் பரிசு - படைப்பு - 2 (இன்பா)

இரண்டாம் பரிசு - படைப்பு - 5 (தீபன்)

இருவருக்கும் வாழ்த்துக்கள். பங்கேற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் மிக்க நன்றி...




படைப்பு - 1

உயிர்க் காற்றாய்
உறவுகள்
மழை ஊற்றாய்
அதன் நினைவுகள்,
இடிகள் இடறினும்
மேகங்கள் உருகினும்
மறையாத
மண் வாசம்
மனமெங்கும்
அது வீசும்


காதோடு கதை பேசி
மனதோடு சாரல் வீசும்
காற்றும்,மழையும்
பெயரளவில் பொய்த்துவிட்டதன்
காரணந்தான் நானறியேன்

காற்றைத்
தழுவிய மழை
காலங்கள் கடக்க
ஏனோ,
காற்றின் துணையின்றி
பெய்யப் பழகிக் கொண்டது 


மேகமில்லா வானமும்
சாரலில்லா மையலும்
காதலில்லா காலங்களும்
காற்றில்லா மழையும்
சிந்திக்கவும் சலிக்குமே !

இன்றளவும்,
காற்றின்றி கரைந்துருகும்
கரு மேகங்கள்
மண் தொடுமே
தவிர
மனங்கள் தொடுவதில்லை


காற்றின் கவிதைக்கு
தலையசைக்கும்
கன மழையும்
பளீர் புன்னகையிடும்
புது மின்னலும்
எள்ளி நகையாடும்
இயல்பான இடியும்
முழுதாய் நனைந்து
நாணத்தால்,
முகம் மறைக்கும்
மலரும்,மண்ணும்
பூரண இன்பம்
புகுத்தாதோ புவியினிலே .. ?

ஏற்ற,இறக்கங்களிலும்
இன்ப துன்பங்களிலும்
வீழ்ச்சியிலும்,எழுச்சியிலும்
இடைவிடாது தொடர்ந்து வரும்
இனிப்பான உறவுகளைப் போன்று ...

-                                                                                                                      - கண்ணம்மா


படைப்பு – 2

என் பால்ய காலத்தில்

நடந்திருக்கலாம்…

காற்றுக்கும் காருக்குமான சுயம்வரம்

இடி இடியென கொட்டியது மேளம்

தாய்வீட்டு சீதனமாய்

மழையோடு வந்தாள் மணப்பெண்

பூமியெனும் புக்ககம் தேடி

தேவர்கள் தூவிய அர்ச்சதை எல்லாம்

பூக்களாய் பூத்திருந்தன பூமியெங்கும்…

பிறந்த வீடு சென்றவள்

மணாளனை நாடி

மறு வருகைக்காய் காத்திருந்தாள்…

கருடனின் தேடலைப் போல்

கார் மேகத்தின் தேடலும்….

வாடையாய் வந்து ஜாடையாய் பேசும்

வாயு பகவான் எங்கென்று……

பச்சையாய் வந்து இச்சையாய் பேசும்

இனிய மணாளன் எங்கென்று……

தேடிப் பொய்த்தவள்

தேடி வருகிறாள்

தீராத வேதனையுடன்….

தாபம் கொண்டவள் கோபம் கொண்டாள்

மாருதம் கொன்ற மரங்களின் மீது

மரங்கள் கொய்த மனிதர்கள் மீது….

ஆண் – டாண்டாய் பொய்த்த மழை

அன்றுமுதல்

அபலைப் பெண்ணின்

அழுகையாக பெய்கிறது மழை

ஆங்காரமாய் பெய்கிறது மழை

பெருவெள்ளமாய் பெய்கிறது மழை

பேரிடியாய் பெய்கிறது மழை

கடைசியாய்….

கடைசியாய்…

காற்றின் துணையின்றி பெய்கிறது மழை
-    
                                        - இன்பா



படைப்பு – 3

காற்றில்லாத மழை

சாத்தியமேயில்லை

சூரியனற்ற ஓளி

கற்பனையே...

நெருப்பற்ற புகை

இவ்வுலகில் நடவாது

ஆனால்

நெஞ்சில் ஈரமற்ற

மனிதன்

என்னுடனும் என்னுள்ளும்

நடந்து கொண்டிருக்கிறான்

-                                                                                                     - சராசரி இந்தியன்


படைப்பு – 4

இன்னும் சில துளிகளில்

துயரின்றி தீர இருக்கிறது

இந்த உயிர்...


விட்டுக் கொடுத்தே

பழகிய மனம்,

தட்டி கழித்தே

இளகிய உடல்

இன்று

உறவுகள் எதுவுமின்றி

தீர இருக்கிறது.


உறவுகள்

ஏதுமற்ற உயிருக்கு

இன்பம் ஏது...

துன்பம் ஏது...


யாருமே இல்லாமல்

யாரிடம் பேச....

ஆகவே பேசிட யாருமே

இல்லாத இடத்திற்கு

போய்க்கொண்டிருக்கிறேன்.


அருகருகே ஆயிரமாயிரம்

கல்லறைகள்

இருந்தென்ன பயன்...

மரித்த பிறகு

பேசிக்கொள்ள முடியாத போது…

ஆகவே

பிசகு ஏதுமில்லை

இப்படி

அனாதைப் பிணமாய்

போவதற்கு....


நெருப்பிலே வெந்து 

கிடக்கும் உடல்  

மீண்டும் நெருப்பிலே

வேக இருக்கிறது…


காற்றின் துணையின்றி

பெய்திடும் மழையின்

மேன்மை போல்

உறவுகளின் அழுகையின்றி

தூறி முடிக்க இருக்கிறது

எனக்கான கடைசி மூச்சு

-                                                                                                                                                                  - விஜய் செ

படைப்பு – 5

அசைவின்றி கிடக்கிறது மரத்தின் இலைகளும் கிளைகளும்
உயிரற்ற சடலத்தைப் போல.

திறக்காமல் காத்திருக்கிறது உனக்கான எனக்கான
ஒரு மொட்டு.

விதைத்தது நானென்றால், வளர்த்தது நீ.

முளையிலேயே கிள்ளியிருந்தால் பூமிக்கு பாரமில்லாமல்
போயிருக்கும்.

இப்போது ஆணி வேர் நீண்டு, துணை வேர்கள் படர்ந்து
மாபெரும் விருட்சமாய் காட்சியளிக்கிறது.

கேட்காத நிழலும் பழமும் தந்து
பூப்பூவாய் சிரித்த அந்த மரம்,

அந்த ஒற்றை மொட்டு பூவாக உன் காற்றுக்கு
காத்திருக்கிறது.

காற்றோடும் மழையோடும் உறவாடிய நம் மரம்
காத்திருந்து காண்கிறது,

காற்றின் துணையின்றி பெய்யும் மழையை,
என் கண்ணீர் மழையை..........

-                                                                                                                                               -தீபன்


படைப்பு – 6

பின்னிரவின்

ஆழ்ந்த அமைதியை

திடிரென கலைத்தது

பதறி படபடத்த

சாளரத்தின் கதவுகள்...


வேகமாய் காற்று

தூரமாய் இடி....

யாருமில்லாத வானத்தில்

மொத்தமாய் குவிகிறது

கருமேகங்கள்...


காற்றில் சிக்கிய தூசிகள்

தெருவெங்கும்

மிதக்க…

மேகத்தை உடைத்து

யோசித்து கொண்டே

தொடங்குகிறது தூறல்...


தரை தொட்ட தூறலால்

வீசத்தொடங்குகிறது

நகரத்து வாசம்...


இரவைப் பகலாக்கும்

பளீரென மின்னல்

அதைத் தொடர்ந்த

மற்றுமொரு பேரிடி

அவ்வளவே

அரைத் தூக்கத்தில்

தெரு விளக்குகள்

அணைந்தது…


கோபமாய் வீசிய

காற்றும் காணமல் போய்

இப்போது

காற்றின் துணையின்றி

பெய்யத் தொடங்குகிறது

ஐப்பசி மழை...


காற்று புயலாகி

புயல் மழையாகி

மழை ஆறாகி

ஆறு குளமாகி

குளம் கடலாகி

வான் மண்ணாகி

இன்னும் நிற்காது

பெய்து கொண்டிருக்கிறது

இந்த காற்றில்லாத

இரவு மழை....


இப்படியே

பெய்யட்டுமே

அதன் ஆருயிர் தீரும் வரை....


-                                                                                                                                                        விஜய் செ

Thursday, 13 June 2013

புகைப்படங்கள்




























பாவ நகரம் - X


பகுதி 8 ஐ நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு சாலை:

மாலை ஆகியிருந்தது. அந்த நகரத்து மனிதர்கள் பிழைப்பை முடித்து விட்டு தமது வீடுகளுக்கு திரும்ப ஆரம்பித்திருந்தார்கள். வாகன நெரிசல் மெல்ல நகரின் கழுத்தை நெரிக்க ஆரம்பித்திருந்த்து. பேருந்தில் நடத்துனர்களுக்கும் பயணிக்களுக்குமான சண்டைகள் உச்சத்தில் இருந்தன. ஸ்ரீதர் இரவுக்காக காத்துக் கொண்டிருந்தான். இருட்ட துவங்கியிருந்தது. முகத்தில் ஒரு கைகுட்டையுடன் ஒரு சாலையின் ஓரத்தில் நின்றுக் கொண்டு, இரு சக்கர வாகனங்களை நோக்கி கை காண்பிக்க ஆரம்பித்தான்.

பகுதி 8 பிரதான சிக்னல்:

மாலை வேலையில் சிக்னல் இயங்காததால், வாகனங்களை வழிநடத்திக் கொண்டிருந்தாரன் போக்குவரத்து காவலர், சுகுமார். ஒரு மூலையில் அவனது உடன் பணிபுரியும் காவலர் அமர்ந்திருந்தார். ஒரு நீண்ட வாகன அணிவரிசையை சிக்னலை கடந்து செல்ல அனுமதித்து விட்டு சுகுமார், அவரது சகாவிடம் வந்தார்.
“என்ன பொழப்புபா இது?”

“என்ன செய்ய?”

சுகுமார் விரக்தியாக சிரித்தான்.
“என் பொழப்பாவது பரவால்ல, நீங்க போலீஸா இருந்து இப்படி ஆயிட்டீங்க. கொஞ்சம் கஷ்டம் தான்"

“சரி, சரி, இன்னிக்கு எவ்வளவு கலக்க்ஷன்."


பகுதி 8 ஐ நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு சாலை:

இன்று காலை வழக்கம் போல்தான் ஹெட் காண்ஸ்டேபிள் சாமிக்கண்ணு தனது வேலைக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார். ஆனால் குடித்து விட்டு ஆட்டோ ஓட்டி அவரது மனைவி மேல் ஒருவன் இடித்து விட, தற்போது அவரது மருத்துவமனையில் இருக்கும் அவரது மனைவிக்கு உணவு கொடுக்க சென்று கொண்டிருக்கிறார். ஹெல்மெட் அவரது முகத்தை மறைத்திருந்தது. அப்போது ஒருவன் அவர் வாகனத்தை நோக்கி லிப்ட் கேட்பது போல் கையசைத்தான்.

“எங்க போகனும்.”

“பகுதி 8 சார்"

“உட்கார்"

பகுதி 8 பிரதான சிக்னல்:

சுகுமார் பேசிக்கொண்டிருந்த சமயம், அந்த விளக்குகளும் சரி செய்யப் பட்டிருந்தன. சுகுமார் யாரை பிடித்து காசு வாங்கலாம் என கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். எதிப் புறமிருந்த சிக்னலில் பச்சை விழ ஒரு சில நொடிகளே இருந்தன. அப்போது ஒரு இரு சக்கர வாகனம், அந்த சாலையின் நடுவே நிறுத்தப் பட்டது. அதை நிறுத்தி விட்டு அதை ஓட்டி வந்தவன், ஓரே பாய்ச்சலாக ஓடி மறைந்து விடவும், பச்சை சிக்னல் விழவும் சரியாக இருந்தது. வாகனங்கள் அனைத்தும் ஒலி எழுப்ப தயாராக இருந்ததே தவிர, குறுக்கே நிற்கும் அந்த வாகனத்தை அகற்ற தயாராக இல்லை. சுகுமார் அதை அகற்றுவதற்க்காக ஓடினான்.

இரு சக்கர வாகனம், மீண்டும் வேகமெடுத்த்து. ஸ்ரீதர் மௌனமாக இருந்தான். இரு சக்கர வாகனம் பகுதி 8 சிக்னலை அடைந்தது. இவர்கள் பக்கம் இப்போதுதான் சிகப்பு விளக்கு ஒளிர ஆரம்பித்தது. சிலர் நடைபாதையின் மேல் தங்கள் வாகனத்தை ஏற்றி முன்னேறி சென்றனர். சாமிக்கண்ணு பச்சைக்காகக் காத்திருந்தார். பின்னால் அமர்ந்திருந்த
ஸ்ரீதர் ஏதோ ஞாபகத்தில், வியர்வையைத் துடைக்க தன் கைகுட்டையை கழற்றினான். அப்போது சாமிக்கண்ணுவிற்கு அவனது முகம் கண்ணாடியில் தெரிந்தது. சுதாரித்துக் கொண்ட சாமிக்கண்ணு,

“தம்பி, ஒரு நிமிஷம், அப்படியே வண்டிய புடிங்க" என்று இறங்கி, அவனது தோளை இறுகப் பற்றினார்.
அதே சமயம், சுகுமார் அந்த வண்டியை உயிர்ப்பித்தான். அந்த வண்டி ஒரு பெரும் சத்தத்துடன் வெடித்தது.

வெடிப்பில் சாமிக்கண்ணு தூக்கி எறியப்பட்டார். சில நிமிடங்களில் கண் விழித்த போது, அவரது வண்டி கிழே விழுந்து கிடந்தது. அதன் சக்கரம் மட்டும், உருண்டு கொண்டிருந்தது.


Friday, 7 June 2013

ஆற்றங்கரை...



ஆழமான அமைதி
அவளின்
அந்தரங்கங்கள் மறைக்கும்
அழகிய நீரலைகள்

கொஞ்சிக் கொஞ்சி
கெஞ்சல் பேசும்  
குருவிகள்

காற்றின் கானத்திற்கு
இசையமைக்கும் குயில்கள்

மண் மணத்தில்
மயங்கித் தள்ளாடும்
மரங்கள்
இவையே ஆற்றங்கரையின்
அப்போதய அடையாளங்கள்

அன்று
காதல் செய்வோர்
களைத்து வருவோர்
கண்ணாமூச்சி
விளையாடும் மழலைகள்
காற்றோடு கானம்
கடத்தும் கன்னியர்கள்
என ,
இவளிடம் அடைக்கலமானவர்
எண்ணிக்கை
அதீதமாகவே இருந்து வந்தது

இன்று,
அழகு தேவதையவள்
அலங்கோலக் காட்சிகளை
அழுது புலம்பும்
அவல நிலை
அறிந்து விட்டோம்
மண்மேடுகள் மாயமாயின
மரங்கள் மறைந்து போயின
குளங்களும்,குட்டைகளுமோ
குன்றியே போயின

அன்றாடம்
கடந்து தான் செல்கின்றோம்
அவளை
நேர்கோட்டில் நிற்கையில்
ஏனோ ஒரு கணம்
விக்கித்தான் நிற்கின்றது நெஞ்சும்

பாவி அவளுக்கு
பாஷை தெரிந்திருந்தால்
பார்ப்போரிடமெல்லாம்
புலம்பியல்லவா தீர்த்திருப்பாள்
நமக்கு விளக்கி வைக்கத்தான்
வீனழித்துக் கொள்கின்றாளோ
தன்னைத் தானே ..?

காற்றை மாசுபடுத்தி
கரைகளைக் காயப்படுத்தி
இயற்க்கையினைத் தீண்டி
வரைமுறைகள் தாண்டி
மார்தட்டிக் கொள்கின்றோம்
நாமும் மனிதரென்று

என்னவளின் அவல நிலை
என்னாலும் உருவானதால்
வெட்கித்
தலை தாழ்த்துகிறேன் இன்று
மனிதனாய்ப் பிறப்பெடுத்ததற்க்காக மட்டும்

துளித் துளியாய் - 11



Sunday, 2 June 2013

புகைப்படங்கள்

                                                                தமிழச்சி..!



புகைப்படங்கள்


                     மும்பை ஜுகு கடற்கரை...கைபேசியில் எடுத்தது