Tuesday, 19 November 2013

துளித் துளியாய் - 35



சச்...சி..ன்...சச்சின்...





அமைதியாய் இருங்கள்
நான் உணர்ச்சியின் உச்சத்தில்
இருக்கிறேன்
என்ற போதே...
என் கண்களில் நீர் துளிர்த்துவிட்டது...

உருக்கத்துடன் நீ
உரையாற்றி கொண்டிருந்தாய்
உரைந்து போய்
நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.

மிந்தடை நேரமாகியும்
மின்சாரம் நிற்கவில்லை
உன் உரை கேட்க
அதுவும் உரைந்துவிட்டதோ..என்னவோ...

உன் ஒரு ரன்னுக்காக
இந்தியாவே பிரார்த்திக்கும்..
இன்று உன் உரைக்காக இந்தியாவே
உரைந்து நிற்கிறது.
இவையனைத்தும் உன்னால்
மட்டுமே முடியும் சச்சின்...

தீராத காதல் தீர்ந்துவிட்டது
என எண்ணி
பிரிந்து செல்கிறாய்..
உன் தடயங்கள் என்றுமே பிரியாது
என்பதை மறந்து விட்டாயே சச்சின்

உன் குடும்பம் உனக்காக
செய்த தியாகங்களை
அடுக்கிக் கொண்டிருந்தாய்
நீ நாட்டுக்காக செய்தவற்றை எல்லாம்
நான் அசை போட்டுக்கொண்டிருந்தேன்..

அசைப் போட்டு அடக்கிவிட முடியுமோ
உன் அற்புதங்களை
அசந்து நிற்கிறேன்..

உன் காதுகளில் என்றும்
கேட்டுக்கொண்டே இருக்கும்
வார்த்தைகளை
மீண்டும் உனக்காக
உரைக்க உரைக்கிறேன்...
சச்..சி..ன்... சச்சின்...
சச்..சி..ன்...சச்சின்...

உனக்கு தெரியும் சச்சின்..
இன்றும் நீ அவுட் இல்லை என்று..
ஆனால் வழக்கம் போலவே
அமைதியாய் வெளியேறி
கொண்டிருக்கிறாய்..

அப்படி நீ வெளியேறிய போதெல்லாம்
அமைதியாவே நானுமிருந்தேன்..
ஆனால் இன்று முடியவில்லை சச்சின்
கண்ணீர் கண்ணை முட்டுகிறது...

கடைசியாய் ஒருமுறை
உன்னை வளர்த்தெடுத்த
மைதானத்திற்கு முத்தம் ஒன்றை
பரிசளித்து வா..
இல்லையேல் நீ மீண்டும் வருவாய்
என காத்துக் கொண்டிருக்கும்...

யாழிக்கு கவிதைகள்





















இலைகளை உதிர்க்கும்
மரத்தினை போல் – நான்
இதயத்தை உதிர்த்தவன்.

பெருங்கோடையை கடக்கும்
மரம் பதுக்கும் நீர்துளிகளை போல்
என்னுள்ளும் கொஞ்சமாய்
மிச்சமிருக்கிறது காதல்.

அது இன்றோ, நாளையோ
அல்லது என்றோ ஒருநாள்
துளிர்விட முயற்சிக்கலாம்.
அன்று நீயும் நானும்
மரபு வேலிகளுக்குள்
சிறைப்பட்டிருக்க நேரிடலாம்.

அன்று எதேச்சையாய்
உன் பார்வை
என்மீது படும்வேளையில்,
உன் வாசம்
என் சுவாசத்தில் நிறைந்திடும் வேளையில் - நீ
சட்டென விலகிசெல்வதை
என்னால் ஏற்கலாகாது. - ஆகையால்
கடைசியாய் ஒருமுறை
ஒரு ஓரமாய் நின்று,
ஒருவாறு உனைக் கண்டு
தெளிவானதோர் முடிவுக்கு
நான் வரவேண்டும்.
ஒன்று மொத்தமாய் நான்
உன்னுள் கலக்க வேண்டும் – இல்லையேல்
உன் நினைவுகளை உதிர்த்துவிட்டு

சுத்தமாய் நான் கருகிட வேண்டும்.

Wednesday, 13 November 2013

வெகு நாள் கழித்து…




எண்ணிலடங்கா இன்பங்களை
எனக்கு கொடுத்து வளர்த்த என்
ஊரை 12 மணி நேர
நெடிய பயணத்திற்கு பிறகு
வந்தடைந்தடைந்திருந்தேன்

முன்பிருந்த அந்த எழில்
இல்லைதான் இப்போது
ஆனாலும்
சில நிகழ்வுகளை
இங்கே காண நேரிடுகையில்
மீண்டும் வயது குறைந்து
அந்த காலத்தை நோக்கி
செல்ல முற்படுகின்றேன்..

அதே செப்பனிடாத கற்கள் நிறைந்த
தெருச்சாலைகளில் நடக்க
ஒவ்வொன்றாய் நினைவில்
எழும்பி மறைகின்றது..
இப்போதெல்லாம்
வீடு கட்டுவதற்காக தெருவில்
தட்டப்பட்டிருக்கும்
மணல் குவியல்களில்
குழந்தைகளின் செங்கல் வண்டிகள்
ஓடுவதில்லை…


அதில் கோபுரங்கள் கட்டி
சுற்றி வழிகள் தோண்டி பின்
யார் முதலில் கைகள் கிள்வது
என்று போட்டிகள் எல்லாம் இல்லை



இரவுகளில் தெருவிளக்குகள்
மொத்தமாய் அணைந்துவிட்டு
பின் மீண்டும்
வரும் நேரத்தில்

சிறுவர்களின் கூச்சல்களுக்கு
பதிலாக பாதியில் விட்டுப்போன
தொலைக்காட்சியின்
நெடுந்தொடர்களின் கூச்சல்களே
காதைக் குடைகின்றன.

5பைசா, 10பைசா, 20பைசா
ஆரஞ்சு, துட்டுமிட்டாய், தேன்மிட்டாய்கள்
எல்லாம் அன்னியசெலாவனிக்கு
அடகுவைக்கப்பட்டுவிட்டன.

மொத்தமாய்
மாறிவிட வில்லை என் ஊர்..

அதிகாலையில்
சேவல்கள் கூவக்கேட்கும்
நேரங்களில் வாசல் தெளித்து
கோலமிடும்
மங்கைகளை இன்றும்
பார்கிறேன்.

ஆங்காங்கே குவிந்து கிடக்கும்
மணல்களில் ஆட்டமிட்டு
ஓடிப்பிடித்து,
புரண்டு சண்டையிட்டு
மண் தலையோடு வீடு சென்று
அடிவாங்கும் சுட்டிகளையும்
பார்க்கிறேன்..

அண்டைவீட்டார்கள்
கூடிப்பேசும் பொல்லாப் புரளிகளை
தொலைக்காட்சித் தொடர்கள்
பறித்துவிட்டு இப்போது இன்னும் ஆழமாய்
நஞ்சை விதைக்கின்றன…

80களில் ஒலித்த அதே
காணங்கள் பட்டி தொட்டிகளில்
தேய்கையில் ஒரு இனம்புரியாத
ஆனந்தம் நெஞ்சில் படிகிறது
அதே பேரிச்சம்பழத்திற்கு போகும்
அளவிற்குதான் என் ஊரின்
முன்பு மீன்சின்னம்
பொறித்த பாண்டியன்
பேருந்துகள் பள்ளங்களில்
குலுங்கி உலா வருகின்றன.
மரங்கள் அடர்ந்திருந்தும்
முன்பு போல்
அவ்வளவாய் மழையில்லை
மின்வெட்டுகளின் நடுநடுவே
கொஞ்சம் கொஞ்சமாய்
உயிர்பிக்கிறேன் என் அலைபேசியை
இலவசமாய் செய்தித்தாள்
படிக்க டீக்கடைகளில்
குவியும் கூட்டத்தில் நானும் அன்று
தோற்றுப்போன இந்திய கிரிக்கெட்
செய்திகளை படித்த
நியாபகம் அலைகிறது.

ஒழுகி
உடைந்து கிடக்கும்
என் பள்ளிக்கூடத்தின்
சாயல்கள் எங்கும்
தென்படவில்லை..
நான் பள்ளிக்கு அனிந்து செல்லும்
வெள்ளைச்சட்டை,
நீலநிற அரைக்கால் டவுசர்களின்
நிறங்கள் மாறிவிட்டன…
உழைத்து சேர்த்த
வேர்வைக்காசுகள்
பெருகிப்போன ஆங்கிலவழி
கல்விக்கூடங்களில்
கட்டணம் கட்டியே கரைகிறது
உடன்படித்த பக்கத்து
இருக்கை நண்பர்கள்
பெயர் மறந்து அடையாளம் தெரியாது
குழந்தைகுட்டிகளுடன் என் எதிரே
கடக்கும் தருணம்
மனம் சற்று வலிக்காமல் வலிக்கிறது

அன்று சுறுசுறுப்பாய் இருந்த ஒரே ஒரு இடம் மட்டும்
இன்றும் சுறுசுறுப்பாய் இருக்கிறது அது
”என் ஊர் கோவில்”
நவீன யுவன்யுவதிகளின்
காதல் கூட்டங்களில் ஒருவனாக
இன்று நான் உண்மையாகவே
என் கோதையை மட்டுமே தரிசிக்க
கோவிலுக்குள் நுழைகிறேன்…
நம்புங்கள்..


Sunday, 10 November 2013

8 காதல் கடிதங்கள் - கடிதம் -6 : கிளைமுறிவு


பிரியமுள்ள பூங்குழலி,
           என்னால் உன் குரல் கேட்காமல் இருக்க முடியவில்லை. பைத்தியம் பிடித்துவிட்டது போல் இங்கு நான் உள்ளேன். எப்போது தான் என்னிடம் நீ மறுபடியும் பேசுவாய்? நாம் இருவரும் பேசாமல் போனதற்கு நான் தான் காரணம். நான் தான் சொன்னேன் எனக்கு வேலை கிடைக்கும் வரை உன்னிடம் பேசமாட்டேன் என்று. இப்போது வேலை கிடைத்துவிட்டதே.

           ஏன் என்னிடம் பேச மறுக்கிறாய்? வேலை கிடைக்காததற்கு நீ தான் காரணம் என்று நீ புரிந்துக்கொண்டது தவறு. உன்னிடம் பேசாமல் இருந்தால் உன்னிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகும். அதனால் நிறைய உழைத்து இன்னும் கடின முயற்சியுடன் வேலைத் தேடுவேன். அப்படியே நடந்தும்விட்டது. இதோ எனக்கு நல்ல வேலை கிடைத்துவிட்டது.

           காதலிக்க ஆரம்பித்த வருடத்தில் இருந்து ஒவ்வொரு புதுவருடத்தின் முதல் நொடி நான் உன்னிடம் பேசுவேன். உன்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் சரியாக 12 மணிக்கு நான் தான் முதலில் வாழ்த்து சொல்லுவேன். பேசாமல் போன இந்த ஐந்து மாத இடைவெளியில் அந்த இரண்டு நிகழ்விலும் நான் பேசவில்லை. நம் காதல் கல்யாணத்தில் அடியெடுத்து வைக்கத்தானே நான் அப்படி நடந்துக்கொண்டேன். கண்டிப்பாக இதனால் நீ காயப்பட்டு இருப்பாய். என்னை மன்னிக்க மாட்டாயா?

           மீண்டும் சொல்கிறேன் பூங்குழலி. நீ என்னிடம் பேசாமல் இருப்பது நரகத்தில் இருப்பது போல் உள்ளது. என்னிடம் இருந்த புன்னகை காணவில்லை. நீ இருந்தால் மட்டுமே அது பூக்கும். உடனே பேசு……

                                     உன் குரல் கேட்க காத்திருக்கும்,

                                                அருள்மொழி.

Friday, 8 November 2013

திரைப் பார்வை - ஆரம்பம்



இயக்குநர் விஷ்ணுவர்த்தனின் சர்வம் படத்திற்கு கிடைத்த தோல்வியும், அஜீத்தின் பில்லா-2 திரைப்படத்தின் தோல்வியும் சேர்ந்து, பில்லா-1ன் வணிகரீதியான வெற்றியை பின்னோக்கிப் பார்க்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க… அதுவே ”ஆரம்பம்” திரைப்படத்திற்கான அச்சாரம் ஆனது. அஜீத், நயன்தாரா, தாப்ஸியோடு நண்பர் என்கின்ற ரீதியில் ஆர்யாவின் கால்ஷீட்டும் சேர்ந்து கொள்ள படத்தின் ஸ்டார் வேல்யூவும் கூடிப் போனது. இதைத் தவிர்த்து, மும்பை தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் பலியான போலீஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரேவின் மரணத்துக்குப் பின் இருந்த மர்மத்தைக் கொண்டு ஒரு நல்ல ஒன் லைனும் கிடைத்துவிட்ட உற்சாகத்தில் களமிறங்கி இருக்கிறது இந்த டீம்.


2008 நவம்பர் 26ல் மும்பை தீவிரவாதிகள் தாக்குதலில் இருந்த அவிழ்க்கப்படாத பல மர்மங்களில், அன்றைய மகாராஷ்டிர அரசில் தீவிரவாத தடுப்புப் பிரிவின் தலைவராக இருந்த ஹேமந்த் கர்கரேவின் மறக்கமுடியாத மரணமும் ஒன்று. குண்டு துளைக்காத உடை அணிந்து தீவிரவாத கும்பலை தன் கைப் பிஸ்டலை மட்டுமே கேடயமாக நம்பி பிடிக்கப் போன இடத்தில், தீவிரவாதிகளின் ஏ.கே.47 ரக துப்பாக்கிகளில் இருந்து சீறிப் பாய்ந்த துப்பாக்கி குண்டுகள், அவரது குண்டு துளைக்காத உடையைத் துளைத்து, உடலையும் துளைத்தது.. அந்த நேரத்தில் கண்டிப்பாக ஒருவித விரக்தியுடன் தான் தன் மரணத்தை அவர் தழுவி இருப்பார்.. விழித்துக் கொண்ட மீடியாவும், அவரது மனைவியும் கர்கரேவின் மரணத்துக்கு காரணமான அந்த குண்டு துளைக்காத உடைப் பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அறிய முற்பட… வழக்கம் போல் அந்த உடை தொடர்பான கொள்முதலில் நடத்தப்பட்ட ஊழலை மறைத்து தன் மானத்தைக் காத்துக் கொண்டது நம் மத்திய அரசு. இந்த சம்பவத்தை கற்பனைக் கதை என்ற ஒப்புதலுடன் கதையாக்கி இருக்கிறார்கள்… அந்த சம்பவத்தை பரவலாக எல்லோரும் அறியும் வகையில் திரைப்படமாக்கிய நல்லெண்ணத்திற்காக இந்த டீமுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்…


ஆனால் மேற்சொன்ன அந்த ஒன்லைனையும், ஸ்டார் வேல்யூவையும் மட்டுமே நம்பி கதை செய்திருக்கிறார்களோ என்று படத்தின் பல காட்சிகளைக் காணும் போது எண்ணத் தோன்றுகிறது. அதிலும் குறிப்பாக அஜீத்தின் ப்ளாஷ்பேக்கை நயன் விவரிக்கும் காட்சியும், அதைக் கேட்டு ஆர்யா மனம் மாறுவதும் ஒளவையார் காலத்துப் பழசு. ஆர்யாவை எல்லா வலைதளங்களிலும் புகுந்து அதன் ரகசியத்தை திருடக் கூடிய, தொழில்நுட்ப திறமை வாய்ந்த ஒரு ஹேக்கர் என்ற செய்தியை நமக்கு கடத்த அவர்கள் கையாண்டிருக்கும் காட்சிகளும், தங்கள் எதிரிகளைக் கொல்வதில் இன்றளவும் மெத்தனம் காட்டி, அவர்களை தப்பவிட்டு, தங்களுக்கே வினை தேடிக் கொள்ளும் சராசரி தமிழ்சினிமா வில்லன்களும், தீவிரவாத தடுப்பு படையின் சாகசத்தைக் காட்டுவதற்காக ஒரு வெளிநாட்டுப் பயணியை தீவிரவாத பிடியில் இருந்து மீட்டுவரும் அந்தக் காட்சியையும், ஒன்றுமில்லாத காலி கண்ணாடி பாட்டிலை உருட்டிவிட்டு தீவிரவாதிகளின் கவனத்தைக் குலைத்து அவர்களை சுடும் காட்சியையும் பார்க்கும் போது, இவர்களின் கற்பனைவளம் ஒன்றுமில்லாத காலி பாட்டிலாகத்தான் பரிமளிக்கிறது.

சுபா இரட்டையர்களின் உதவியோடு எழுதப்பட்ட திரைக்கதையாக இருந்தாலும், ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள். முன்னால் தீவிரவாத தடுப்புப் பிரிவின் தலைவராக இருந்தவரை, ஒரே லிப்டுக்குள் இருந்தும் கண்டுபிடிக்க முடியாமல் தேமே என்று நிற்கும் கிஷோரும், தீவிரவாத கும்பலை பிடிக்க சாதாரணமாக ஒரு நான்கைந்து போலீசாரைக் கூட்டிக் கொண்டு வரும் போலீசும், சர்வ சாதாரணமாக போலீஸ் ஆபிஸரைக் கொன்றுவிட்டு, துபாய்க்கு தப்பிச் செல்லும் காட்சியையும் பார்க்கும் போது போலீஸ் என்னதான் செய்கிறது என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடிவதில்லை. ஹேக்கராக வந்து, க்ளைமாக்ஸ் காட்சிகளில் இரு கரங்களிலும் துப்பாக்கி ஏந்தி ஒர் சூப்பர்மேன் ரேஞ்சுக்கு சண்டையிடும் ஆர்யாவும், எப்போது எதற்காக நயன் கிஷோருடன் இணைந்து க்ளைமாக்ஸ் காட்சியில் வருகிறார் என்பதையும், சகட்டுமேனிக்கு துப்பாக்கியை கையாளும் நயனையும் பார்க்கும் போது இனி லாஜிக்கே பார்க்கமாட்டோம் என்று சத்தியம் செய்து தப்பிக்கத் தோன்றுகிறது….


அநீதி இளைத்த அரசியல் வியாபாரிகளை பழி வாங்குவது தான் நாயகனின் நோக்கமாக இருந்தாலும் அதற்காக நாயகன் எடுத்து வைக்கும் அடிகள் ஒவ்வொன்றும் மிகமிக பலவீனமானவை.. எதிரிகளின் கட்டிடத்தைக் குண்டு வைத்து தகர்ப்பதும், சேட்டிலைட் மூலம் அவர்களது தொலைக்காட்சி சேனலின் அலைவரிசையை முடக்கி எதிரிகளின் தொழிலில் நஷ்டத்தை உண்டாக்குவதுமான காட்சிகள் அதற்கான வீரியத்தோடு இல்லை.. மேலும் அந்த நஷ்டத்தால் எதிரிகள் பாதிக்கப்படுவதான காட்சியுருவும் இல்லாமல் போவதால், நாயகன் பழி வாங்குகிறார் என்கின்ற ரீதியில் இல்லாமல், ஏதோ செயலாற்றுகிறார் என்கின்ற ரீதியில்தான் அவை  நம்மை கடந்து போகின்றன… தன் போலீஸ்கார நண்பனின் சாவுக்கு பழி வாங்க வரும் நாயகன் கொல்லும் போலீசாரின் எண்ணிக்கையோ எப்படியும் முப்பதை தொடும்.. மேலும் திரைக்கதையின் போக்கில் ஆர்யாவின் தேவை என்பது நயன், டாப்ஸி போன்ற கன்னிகளின் கவர்ச்சி படிமத்தின் அளவில் தான் இருப்பதால், அந்த கதாபாத்திரத்தின் பங்கேற்பு என்பது படத்தின் தோல்வியை தவிர்ப்பதற்கான முயற்சியாகத்தான் படுகிறது… அப்படியில்லை என்றால் அதன் தேவையை இன்னும் கொஞ்சம் வலியுறுத்தி இருக்கலாம்..

இப்படி பல ஓட்டைகள் இருந்தாலும்.. அதை உருப்படியான ஒரு சல்லடையாக மாற்றி திரைக்கதையை கொஞ்சமேனும் உயிர்ப்போடு வைத்திருப்பது அஜீத்தின் ஸ்கீரின் ப்ரெஸன்ஸ் மட்டுமே. நல்லவர்களாகவே நடித்துக் கொண்டு இருக்கும் தங்கள் பிம்பத்தை உடைக்கவே விரும்பாத பிற கதாநாயகர்களுக்கு மத்தியில் அஜித் சற்றே வித்தியாசமானவர். அது பல இடங்களில் அவரது பொதுவாழ்விலும் வெளிப்பட்டு இருக்கிறது.. சினிமாவிலும் அதற்கான ஆரம்பம் மங்காத்தாவில் அவர் நடித்த நெகடிவ்வான கதாபாத்திரம் மூலம் அமைந்தது. அந்த ஆரம்பமே இந்த ஆரம்பம் திரைப்படத்தின் ஆரம்ப காட்சிககளான மல்டிபிளக்ஸ் கட்டிடத்துக்கு குண்டு வைப்பது, ஒரு சிறு குழந்தையின் முதுகில் சூடான இஸ்திரிப் பெட்டியைக் கொண்டு தேய்த்து விடுவதாக மிரட்டுவது போன்ற எதிர்வினை காட்சிகளில் அஜீத்தின் கதாபாத்திரத்தை வழக்கமான நாயக கதாபாத்திரமாக எண்ணி பயணிக்காமல் நம்மை தடுத்து திரைக்கதைக்கு சற்று வலு சேர்க்கிறது. பச்சை குழந்தைகளுடனான இது போன்ற காட்சியில் நடிக்க இன்றைய கதாநாயகர்கள் யாருமே துணியமாட்டார்கள் என்பது நிச்சயம். ஆனால் அதற்கு திருஷ்டி வைத்தாற் போல் வருகிறது அஜீத்தின் ப்ளாஸ்பேக் காட்சிகள்…


 இவை தவிர்த்து ஆர்யாவும் டாப்ஸியும் நடிப்பில் சற்றே ஸ்கோர் செய்திருக்கின்றனர்… சமீபகாலமாக நடிப்பில் சொதப்பி வரும் ஆர்யா இதில் ஏதோ கொஞ்சம் நடித்திருக்கிறார். டாப்ஸிக்கு வழக்கமான தமிழ்சினிமாவின் லூஸுப் பெண் கதாபாத்திரம்.. ஆங்காங்கே மண்டியிட்டு தன் காதலைச் சொல்லும் ஆர்யாவை கொஞ்சிவிட்டு செல்லும் இடங்களிலும், கறாராக தன் காதலைச் சொல்ல வரும் ஆர்யாவைக் கண்டு மிரண்டு ஓடுவதும் அழகு. ராஜா ராணியில் நடிப்பில் ஆட்சி செலுத்திய நயனுக்கு, இதில் வழக்கமான நயன கதாபாத்திரம். மற்ற கதாபாத்திரங்களையும் ரசிகர்களையும் கிறங்கடிக்கும் வேலை மட்டுமே அவருக்கு… செவ்வனே செய்திருக்கிறார்..



இசை ரொம்பவே சுமார். பிண்ணனியிலும் சரி, பாடல்களிலும் சரி யுவன் ஏனோ ஈர்க்கவே இல்லை.. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு கதையோடு பயணிக்கிறது.. மொத்தத்தில் முதல்பாதியில் இருக்கும் அஜீத்தின் சின்ன சின்ன மேனரிஸங்கள், திரைக்கதையின் சின்ன சின்ன சுவாரஸ்யங்களும், அவர்கள் எடுத்துக் கொண்ட கதைக்களம் இவையெல்லாம் சேர்ந்து ஒரு முறையாவது பார்ப்பதற்கான தகுதியை படத்திற்க்கு கொடுத்துவிடுகின்றன… அஜீத்தின் ரசிகர்களை வழக்கம் போல் பெரிதும் ஈர்க்கும்… பொதுவான ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவும் செய்யாது; அதே நேரத்தில் வதைக்கவும் செய்யாது என்பதே ஆரம்பத்தின் ஸ்பெசல் ட்ரீட்மெண்ட்..

கனவு திருடன்


Sunday, 3 November 2013

8 காதல் கடிதங்கள் - கடிதம் -5 : இலையுதிர்

பிரியமுள்ள பூங்குழலி,
           என்ன செய்வதென்று அறியாமல் துன்பத்தில் துவண்டுப் போயிருக்கிறேன். சற்று அமர்ந்து யோசிக்கக் கூட மனமில்லாமல் அமைதியின்றி அலைகிறேன். இது தான் என் உலகத்தின் இறுதியா என்று தோன்றுகிறது.
           கல்லூரி படிப்பு முடியப்போகிறது. மாணவன் என்று சொல்லி அனுபவித்த சலுகையெல்லாம் பறிக்கப்படப் போகிறது. இனி பிறரை காப்பாற்ற வேண்டாவிட்டாலும் நான் என்னை காப்பாற்றிக் கொள்ளவாவது எனக்கு ஒரு வேலை வேண்டும். இதுவரை நான் கலந்துக்கொண்ட அனைத்து வேலைவாய்ப்பு முகாமிலும் தோல்வியை மட்டுமே சந்திக்கிறேன். பயமாகயிருக்கிறது பூங்குழலி.
           இதோ இன்னும் ஒரு மாதம் தான். அதன் பின் நான் ஒரு முழு பட்டதாரி. இதற்கு மேல் எனக்கு மாதம் மாதம் பணம் அனுப்ப மாட்டார்கள். படிக்கிற பிள்ளை என கரிசனம் கிடையாது. எனக்கு வேலை கிடைத்துவிட்டால் தான் படுகிற கஷ்டத்தில் சிறிதாவது குறையுமென நம்பும் என் தந்தைக்கு என்ன செய்யப்போகிறேன் என தெரியவில்லை. இதை விட உன் பெற்றோர் ‘நீ காதலிக்கும் பையனுக்கு ஒரு வேலையில்லை’ என்று சொல்லிவிட்டால் எந்த விதத்தில் உனக்கு நான் பதிலளிப்பேன்.
           எத்தனை முறை நீ என்னிடம் சொல்லியிருக்கிறாய் வேலை கிடைத்தால் ஓழிய வேறு எந்த வழியிலும் என் வீட்டில் நம் காதலை ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என. இதில் நம் இருவருக்கும் சாதியில், பொருளாதாரத்தில், மொழியில் வேற்றுமை இருக்கும் போது எனக்கு வேலையும் இல்லையென்றால் எப்படி நான் உன் முன் நிற்பேன். மிகவும் அச்சமாயிருக்கிறது பூங்குழலி.
           பிறரிடம் பேசுவதற்கே வெட்கமாயிருக்கிறது. உலகத்தின் கண்கள் என்னைப் பார்த்து கேள்வி கேட்டு கொண்டிருப்பதாய் தோன்றுகிறது. எந்தவொரு யோசனையும் வரவில்லை. ஒரு முடிவு எடுத்துள்ளேன். இனி உன்னிடம் எனக்கு வேலை கிடைக்கும் வரை நான் பேசப்போவதில்லை. வேலை கிடைத்த பின்னரே பேசுவேன். உன்னிடம் பேசுவதால் தான் நான் கவனமிழந்து வேலைத்தேர்வில் தோல்வி அடைகிறேன் என்று நீ நினைக்க வேண்டாம். உன்னிடமும், நானே என்னிடமும், என்னை நிரூபிக்க நான் எனக்கு கொடுத்துக்கொண்ட தண்டனை. எடுத்துக்கொண்ட ஒரு சபதம்.

                                           விரைவில் பேசுவேன்,

                                                அருள்மொழி.

துளித் துளியாய் - 34