இயக்குநர் விஷ்ணுவர்த்தனின் சர்வம் படத்திற்கு கிடைத்த தோல்வியும்,
அஜீத்தின் பில்லா-2 திரைப்படத்தின் தோல்வியும் சேர்ந்து, பில்லா-1ன் வணிகரீதியான
வெற்றியை பின்னோக்கிப் பார்க்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க… அதுவே
”ஆரம்பம்” திரைப்படத்திற்கான அச்சாரம் ஆனது. அஜீத், நயன்தாரா, தாப்ஸியோடு நண்பர்
என்கின்ற ரீதியில் ஆர்யாவின் கால்ஷீட்டும் சேர்ந்து கொள்ள படத்தின் ஸ்டார்
வேல்யூவும் கூடிப் போனது. இதைத் தவிர்த்து, மும்பை தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகளால்
நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் பலியான போலீஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரேவின்
மரணத்துக்குப் பின் இருந்த மர்மத்தைக் கொண்டு ஒரு நல்ல ஒன் லைனும் கிடைத்துவிட்ட
உற்சாகத்தில் களமிறங்கி இருக்கிறது இந்த டீம்.
ஆனால் மேற்சொன்ன அந்த ஒன்லைனையும், ஸ்டார் வேல்யூவையும் மட்டுமே
நம்பி கதை செய்திருக்கிறார்களோ என்று படத்தின் பல காட்சிகளைக் காணும் போது எண்ணத்
தோன்றுகிறது. அதிலும் குறிப்பாக அஜீத்தின் ப்ளாஷ்பேக்கை நயன் விவரிக்கும்
காட்சியும், அதைக் கேட்டு ஆர்யா மனம் மாறுவதும் ஒளவையார் காலத்துப் பழசு. ஆர்யாவை
எல்லா வலைதளங்களிலும் புகுந்து அதன் ரகசியத்தை திருடக் கூடிய, தொழில்நுட்ப திறமை
வாய்ந்த ஒரு ஹேக்கர் என்ற செய்தியை நமக்கு கடத்த அவர்கள் கையாண்டிருக்கும்
காட்சிகளும், தங்கள் எதிரிகளைக் கொல்வதில் இன்றளவும் மெத்தனம் காட்டி, அவர்களை
தப்பவிட்டு, தங்களுக்கே வினை தேடிக் கொள்ளும் சராசரி தமிழ்சினிமா வில்லன்களும்,
தீவிரவாத தடுப்பு படையின் சாகசத்தைக் காட்டுவதற்காக ஒரு வெளிநாட்டுப் பயணியை
தீவிரவாத பிடியில் இருந்து மீட்டுவரும் அந்தக் காட்சியையும், ஒன்றுமில்லாத காலி
கண்ணாடி பாட்டிலை உருட்டிவிட்டு தீவிரவாதிகளின் கவனத்தைக் குலைத்து அவர்களை சுடும்
காட்சியையும் பார்க்கும் போது, இவர்களின் கற்பனைவளம் ஒன்றுமில்லாத காலி
பாட்டிலாகத்தான் பரிமளிக்கிறது.
சுபா இரட்டையர்களின் உதவியோடு எழுதப்பட்ட திரைக்கதையாக
இருந்தாலும், ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள். முன்னால் தீவிரவாத தடுப்புப் பிரிவின்
தலைவராக இருந்தவரை, ஒரே லிப்டுக்குள் இருந்தும் கண்டுபிடிக்க முடியாமல் தேமே என்று
நிற்கும் கிஷோரும், தீவிரவாத கும்பலை பிடிக்க சாதாரணமாக ஒரு நான்கைந்து போலீசாரைக்
கூட்டிக் கொண்டு வரும் போலீசும், சர்வ சாதாரணமாக போலீஸ் ஆபிஸரைக் கொன்றுவிட்டு,
துபாய்க்கு தப்பிச் செல்லும் காட்சியையும் பார்க்கும் போது போலீஸ் என்னதான்
செய்கிறது என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடிவதில்லை. ஹேக்கராக வந்து, க்ளைமாக்ஸ்
காட்சிகளில் இரு கரங்களிலும் துப்பாக்கி ஏந்தி ஒர் சூப்பர்மேன் ரேஞ்சுக்கு
சண்டையிடும் ஆர்யாவும், எப்போது எதற்காக நயன் கிஷோருடன் இணைந்து க்ளைமாக்ஸ்
காட்சியில் வருகிறார் என்பதையும், சகட்டுமேனிக்கு துப்பாக்கியை கையாளும் நயனையும்
பார்க்கும் போது இனி லாஜிக்கே பார்க்கமாட்டோம் என்று சத்தியம் செய்து தப்பிக்கத்
தோன்றுகிறது….
அநீதி இளைத்த அரசியல் வியாபாரிகளை பழி வாங்குவது தான் நாயகனின்
நோக்கமாக இருந்தாலும் அதற்காக நாயகன் எடுத்து வைக்கும் அடிகள் ஒவ்வொன்றும் மிகமிக
பலவீனமானவை.. எதிரிகளின் கட்டிடத்தைக் குண்டு வைத்து தகர்ப்பதும், சேட்டிலைட்
மூலம் அவர்களது தொலைக்காட்சி சேனலின் அலைவரிசையை முடக்கி எதிரிகளின் தொழிலில்
நஷ்டத்தை உண்டாக்குவதுமான காட்சிகள் அதற்கான வீரியத்தோடு இல்லை.. மேலும் அந்த
நஷ்டத்தால் எதிரிகள் பாதிக்கப்படுவதான காட்சியுருவும் இல்லாமல் போவதால், நாயகன்
பழி வாங்குகிறார் என்கின்ற ரீதியில் இல்லாமல், ஏதோ செயலாற்றுகிறார் என்கின்ற
ரீதியில்தான் அவை நம்மை கடந்து போகின்றன… தன் போலீஸ்கார நண்பனின் சாவுக்கு
பழி வாங்க வரும் நாயகன் கொல்லும் போலீசாரின் எண்ணிக்கையோ எப்படியும் முப்பதை
தொடும்.. மேலும் திரைக்கதையின் போக்கில் ஆர்யாவின் தேவை என்பது நயன், டாப்ஸி போன்ற
கன்னிகளின் கவர்ச்சி படிமத்தின் அளவில் தான் இருப்பதால், அந்த கதாபாத்திரத்தின்
பங்கேற்பு என்பது படத்தின் தோல்வியை தவிர்ப்பதற்கான முயற்சியாகத்தான் படுகிறது…
அப்படியில்லை என்றால் அதன் தேவையை இன்னும் கொஞ்சம் வலியுறுத்தி இருக்கலாம்..
இப்படி பல ஓட்டைகள் இருந்தாலும்.. அதை உருப்படியான ஒரு சல்லடையாக
மாற்றி திரைக்கதையை கொஞ்சமேனும் உயிர்ப்போடு வைத்திருப்பது அஜீத்தின் ஸ்கீரின்
ப்ரெஸன்ஸ் மட்டுமே. நல்லவர்களாகவே நடித்துக் கொண்டு இருக்கும் தங்கள் பிம்பத்தை
உடைக்கவே விரும்பாத பிற கதாநாயகர்களுக்கு மத்தியில் அஜித் சற்றே வித்தியாசமானவர்.
அது பல இடங்களில் அவரது பொதுவாழ்விலும் வெளிப்பட்டு இருக்கிறது.. சினிமாவிலும்
அதற்கான ஆரம்பம் மங்காத்தாவில் அவர் நடித்த நெகடிவ்வான கதாபாத்திரம் மூலம்
அமைந்தது. அந்த ஆரம்பமே இந்த ஆரம்பம் திரைப்படத்தின் ஆரம்ப காட்சிககளான
மல்டிபிளக்ஸ் கட்டிடத்துக்கு குண்டு வைப்பது, ஒரு சிறு குழந்தையின் முதுகில் சூடான
இஸ்திரிப் பெட்டியைக் கொண்டு தேய்த்து விடுவதாக மிரட்டுவது போன்ற எதிர்வினை
காட்சிகளில் அஜீத்தின் கதாபாத்திரத்தை வழக்கமான நாயக கதாபாத்திரமாக எண்ணி
பயணிக்காமல் நம்மை தடுத்து திரைக்கதைக்கு சற்று வலு சேர்க்கிறது. பச்சை
குழந்தைகளுடனான இது போன்ற காட்சியில் நடிக்க இன்றைய கதாநாயகர்கள் யாருமே
துணியமாட்டார்கள் என்பது நிச்சயம். ஆனால் அதற்கு திருஷ்டி வைத்தாற் போல் வருகிறது
அஜீத்தின் ப்ளாஸ்பேக் காட்சிகள்…
இவை தவிர்த்து ஆர்யாவும்
டாப்ஸியும் நடிப்பில் சற்றே ஸ்கோர் செய்திருக்கின்றனர்… சமீபகாலமாக நடிப்பில் சொதப்பி
வரும் ஆர்யா இதில் ஏதோ கொஞ்சம் நடித்திருக்கிறார். டாப்ஸிக்கு வழக்கமான தமிழ்சினிமாவின்
லூஸுப் பெண் கதாபாத்திரம்.. ஆங்காங்கே மண்டியிட்டு தன் காதலைச் சொல்லும் ஆர்யாவை
கொஞ்சிவிட்டு செல்லும் இடங்களிலும், கறாராக தன் காதலைச் சொல்ல வரும் ஆர்யாவைக்
கண்டு மிரண்டு ஓடுவதும் அழகு. ராஜா ராணியில் நடிப்பில் ஆட்சி செலுத்திய நயனுக்கு,
இதில் வழக்கமான நயன கதாபாத்திரம். மற்ற கதாபாத்திரங்களையும் ரசிகர்களையும்
கிறங்கடிக்கும் வேலை மட்டுமே அவருக்கு… செவ்வனே செய்திருக்கிறார்..
இசை ரொம்பவே சுமார். பிண்ணனியிலும் சரி, பாடல்களிலும் சரி யுவன்
ஏனோ ஈர்க்கவே இல்லை.. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு கதையோடு பயணிக்கிறது.. மொத்தத்தில்
முதல்பாதியில் இருக்கும் அஜீத்தின் சின்ன சின்ன மேனரிஸங்கள், திரைக்கதையின் சின்ன
சின்ன சுவாரஸ்யங்களும், அவர்கள் எடுத்துக் கொண்ட கதைக்களம் இவையெல்லாம் சேர்ந்து
ஒரு முறையாவது பார்ப்பதற்கான தகுதியை படத்திற்க்கு கொடுத்துவிடுகின்றன… அஜீத்தின்
ரசிகர்களை வழக்கம் போல் பெரிதும் ஈர்க்கும்… பொதுவான ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவும்
செய்யாது; அதே நேரத்தில் வதைக்கவும் செய்யாது என்பதே ஆரம்பத்தின் ஸ்பெசல்
ட்ரீட்மெண்ட்..
கனவு திருடன்
No comments:
Post a Comment