Sunday, 3 November 2013

8 காதல் கடிதங்கள் - கடிதம் -5 : இலையுதிர்

பிரியமுள்ள பூங்குழலி,
           என்ன செய்வதென்று அறியாமல் துன்பத்தில் துவண்டுப் போயிருக்கிறேன். சற்று அமர்ந்து யோசிக்கக் கூட மனமில்லாமல் அமைதியின்றி அலைகிறேன். இது தான் என் உலகத்தின் இறுதியா என்று தோன்றுகிறது.
           கல்லூரி படிப்பு முடியப்போகிறது. மாணவன் என்று சொல்லி அனுபவித்த சலுகையெல்லாம் பறிக்கப்படப் போகிறது. இனி பிறரை காப்பாற்ற வேண்டாவிட்டாலும் நான் என்னை காப்பாற்றிக் கொள்ளவாவது எனக்கு ஒரு வேலை வேண்டும். இதுவரை நான் கலந்துக்கொண்ட அனைத்து வேலைவாய்ப்பு முகாமிலும் தோல்வியை மட்டுமே சந்திக்கிறேன். பயமாகயிருக்கிறது பூங்குழலி.
           இதோ இன்னும் ஒரு மாதம் தான். அதன் பின் நான் ஒரு முழு பட்டதாரி. இதற்கு மேல் எனக்கு மாதம் மாதம் பணம் அனுப்ப மாட்டார்கள். படிக்கிற பிள்ளை என கரிசனம் கிடையாது. எனக்கு வேலை கிடைத்துவிட்டால் தான் படுகிற கஷ்டத்தில் சிறிதாவது குறையுமென நம்பும் என் தந்தைக்கு என்ன செய்யப்போகிறேன் என தெரியவில்லை. இதை விட உன் பெற்றோர் ‘நீ காதலிக்கும் பையனுக்கு ஒரு வேலையில்லை’ என்று சொல்லிவிட்டால் எந்த விதத்தில் உனக்கு நான் பதிலளிப்பேன்.
           எத்தனை முறை நீ என்னிடம் சொல்லியிருக்கிறாய் வேலை கிடைத்தால் ஓழிய வேறு எந்த வழியிலும் என் வீட்டில் நம் காதலை ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என. இதில் நம் இருவருக்கும் சாதியில், பொருளாதாரத்தில், மொழியில் வேற்றுமை இருக்கும் போது எனக்கு வேலையும் இல்லையென்றால் எப்படி நான் உன் முன் நிற்பேன். மிகவும் அச்சமாயிருக்கிறது பூங்குழலி.
           பிறரிடம் பேசுவதற்கே வெட்கமாயிருக்கிறது. உலகத்தின் கண்கள் என்னைப் பார்த்து கேள்வி கேட்டு கொண்டிருப்பதாய் தோன்றுகிறது. எந்தவொரு யோசனையும் வரவில்லை. ஒரு முடிவு எடுத்துள்ளேன். இனி உன்னிடம் எனக்கு வேலை கிடைக்கும் வரை நான் பேசப்போவதில்லை. வேலை கிடைத்த பின்னரே பேசுவேன். உன்னிடம் பேசுவதால் தான் நான் கவனமிழந்து வேலைத்தேர்வில் தோல்வி அடைகிறேன் என்று நீ நினைக்க வேண்டாம். உன்னிடமும், நானே என்னிடமும், என்னை நிரூபிக்க நான் எனக்கு கொடுத்துக்கொண்ட தண்டனை. எடுத்துக்கொண்ட ஒரு சபதம்.

                                           விரைவில் பேசுவேன்,

                                                அருள்மொழி.

No comments:

Post a Comment