Sunday 10 November 2013

8 காதல் கடிதங்கள் - கடிதம் -6 : கிளைமுறிவு


பிரியமுள்ள பூங்குழலி,
           என்னால் உன் குரல் கேட்காமல் இருக்க முடியவில்லை. பைத்தியம் பிடித்துவிட்டது போல் இங்கு நான் உள்ளேன். எப்போது தான் என்னிடம் நீ மறுபடியும் பேசுவாய்? நாம் இருவரும் பேசாமல் போனதற்கு நான் தான் காரணம். நான் தான் சொன்னேன் எனக்கு வேலை கிடைக்கும் வரை உன்னிடம் பேசமாட்டேன் என்று. இப்போது வேலை கிடைத்துவிட்டதே.

           ஏன் என்னிடம் பேச மறுக்கிறாய்? வேலை கிடைக்காததற்கு நீ தான் காரணம் என்று நீ புரிந்துக்கொண்டது தவறு. உன்னிடம் பேசாமல் இருந்தால் உன்னிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகும். அதனால் நிறைய உழைத்து இன்னும் கடின முயற்சியுடன் வேலைத் தேடுவேன். அப்படியே நடந்தும்விட்டது. இதோ எனக்கு நல்ல வேலை கிடைத்துவிட்டது.

           காதலிக்க ஆரம்பித்த வருடத்தில் இருந்து ஒவ்வொரு புதுவருடத்தின் முதல் நொடி நான் உன்னிடம் பேசுவேன். உன்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் சரியாக 12 மணிக்கு நான் தான் முதலில் வாழ்த்து சொல்லுவேன். பேசாமல் போன இந்த ஐந்து மாத இடைவெளியில் அந்த இரண்டு நிகழ்விலும் நான் பேசவில்லை. நம் காதல் கல்யாணத்தில் அடியெடுத்து வைக்கத்தானே நான் அப்படி நடந்துக்கொண்டேன். கண்டிப்பாக இதனால் நீ காயப்பட்டு இருப்பாய். என்னை மன்னிக்க மாட்டாயா?

           மீண்டும் சொல்கிறேன் பூங்குழலி. நீ என்னிடம் பேசாமல் இருப்பது நரகத்தில் இருப்பது போல் உள்ளது. என்னிடம் இருந்த புன்னகை காணவில்லை. நீ இருந்தால் மட்டுமே அது பூக்கும். உடனே பேசு……

                                     உன் குரல் கேட்க காத்திருக்கும்,

                                                அருள்மொழி.

1 comment:

  1. யாராவது பிறந்த நாளுக்கு வாழ்த்தாம இருப்பாங்களா? அதான் கோச்சிக்கிட்டாங்க

    ReplyDelete