Wednesday, 13 November 2013

வெகு நாள் கழித்து…




எண்ணிலடங்கா இன்பங்களை
எனக்கு கொடுத்து வளர்த்த என்
ஊரை 12 மணி நேர
நெடிய பயணத்திற்கு பிறகு
வந்தடைந்தடைந்திருந்தேன்

முன்பிருந்த அந்த எழில்
இல்லைதான் இப்போது
ஆனாலும்
சில நிகழ்வுகளை
இங்கே காண நேரிடுகையில்
மீண்டும் வயது குறைந்து
அந்த காலத்தை நோக்கி
செல்ல முற்படுகின்றேன்..

அதே செப்பனிடாத கற்கள் நிறைந்த
தெருச்சாலைகளில் நடக்க
ஒவ்வொன்றாய் நினைவில்
எழும்பி மறைகின்றது..
இப்போதெல்லாம்
வீடு கட்டுவதற்காக தெருவில்
தட்டப்பட்டிருக்கும்
மணல் குவியல்களில்
குழந்தைகளின் செங்கல் வண்டிகள்
ஓடுவதில்லை…


அதில் கோபுரங்கள் கட்டி
சுற்றி வழிகள் தோண்டி பின்
யார் முதலில் கைகள் கிள்வது
என்று போட்டிகள் எல்லாம் இல்லை



இரவுகளில் தெருவிளக்குகள்
மொத்தமாய் அணைந்துவிட்டு
பின் மீண்டும்
வரும் நேரத்தில்

சிறுவர்களின் கூச்சல்களுக்கு
பதிலாக பாதியில் விட்டுப்போன
தொலைக்காட்சியின்
நெடுந்தொடர்களின் கூச்சல்களே
காதைக் குடைகின்றன.

5பைசா, 10பைசா, 20பைசா
ஆரஞ்சு, துட்டுமிட்டாய், தேன்மிட்டாய்கள்
எல்லாம் அன்னியசெலாவனிக்கு
அடகுவைக்கப்பட்டுவிட்டன.

மொத்தமாய்
மாறிவிட வில்லை என் ஊர்..

அதிகாலையில்
சேவல்கள் கூவக்கேட்கும்
நேரங்களில் வாசல் தெளித்து
கோலமிடும்
மங்கைகளை இன்றும்
பார்கிறேன்.

ஆங்காங்கே குவிந்து கிடக்கும்
மணல்களில் ஆட்டமிட்டு
ஓடிப்பிடித்து,
புரண்டு சண்டையிட்டு
மண் தலையோடு வீடு சென்று
அடிவாங்கும் சுட்டிகளையும்
பார்க்கிறேன்..

அண்டைவீட்டார்கள்
கூடிப்பேசும் பொல்லாப் புரளிகளை
தொலைக்காட்சித் தொடர்கள்
பறித்துவிட்டு இப்போது இன்னும் ஆழமாய்
நஞ்சை விதைக்கின்றன…

80களில் ஒலித்த அதே
காணங்கள் பட்டி தொட்டிகளில்
தேய்கையில் ஒரு இனம்புரியாத
ஆனந்தம் நெஞ்சில் படிகிறது
அதே பேரிச்சம்பழத்திற்கு போகும்
அளவிற்குதான் என் ஊரின்
முன்பு மீன்சின்னம்
பொறித்த பாண்டியன்
பேருந்துகள் பள்ளங்களில்
குலுங்கி உலா வருகின்றன.
மரங்கள் அடர்ந்திருந்தும்
முன்பு போல்
அவ்வளவாய் மழையில்லை
மின்வெட்டுகளின் நடுநடுவே
கொஞ்சம் கொஞ்சமாய்
உயிர்பிக்கிறேன் என் அலைபேசியை
இலவசமாய் செய்தித்தாள்
படிக்க டீக்கடைகளில்
குவியும் கூட்டத்தில் நானும் அன்று
தோற்றுப்போன இந்திய கிரிக்கெட்
செய்திகளை படித்த
நியாபகம் அலைகிறது.

ஒழுகி
உடைந்து கிடக்கும்
என் பள்ளிக்கூடத்தின்
சாயல்கள் எங்கும்
தென்படவில்லை..
நான் பள்ளிக்கு அனிந்து செல்லும்
வெள்ளைச்சட்டை,
நீலநிற அரைக்கால் டவுசர்களின்
நிறங்கள் மாறிவிட்டன…
உழைத்து சேர்த்த
வேர்வைக்காசுகள்
பெருகிப்போன ஆங்கிலவழி
கல்விக்கூடங்களில்
கட்டணம் கட்டியே கரைகிறது
உடன்படித்த பக்கத்து
இருக்கை நண்பர்கள்
பெயர் மறந்து அடையாளம் தெரியாது
குழந்தைகுட்டிகளுடன் என் எதிரே
கடக்கும் தருணம்
மனம் சற்று வலிக்காமல் வலிக்கிறது

அன்று சுறுசுறுப்பாய் இருந்த ஒரே ஒரு இடம் மட்டும்
இன்றும் சுறுசுறுப்பாய் இருக்கிறது அது
”என் ஊர் கோவில்”
நவீன யுவன்யுவதிகளின்
காதல் கூட்டங்களில் ஒருவனாக
இன்று நான் உண்மையாகவே
என் கோதையை மட்டுமே தரிசிக்க
கோவிலுக்குள் நுழைகிறேன்…
நம்புங்கள்..


1 comment:

  1. enaku migavum piditha kadaisi pathiyudan , alagaana oru padam sernthu , atharkku alagu kootti vittathu ..

    ReplyDelete