Friday 18 April 2014

கிராமத்துக் காதல்




அடங்காம மனசு  அலபாயுது
மாமா,
ஆகாசம் தொடும் உன் ஒசரத்துல!


கண் பார்வையா, இல்ல கத்தி வீச்சா
மாமா,
கெரங்கிக் கெடக்குறேன் உன் பார்வையில!


முத்துப்பல்லா இல்ல ஒத்த சொல்லா
மாமா,
ஊசி தைக்கிதே என் உசுருக்குள்ள!


கழுத்து மச்சம் அத பாத்தே நித்தம்
மாமா,
கரைஞ்சு போறேன் கற்பூரம் போல!


விரிஞ்ச மார்புக்குள்ள, பரந்த உன் மனசுக்கே
மாமா,
பம்பரமா சுத்துறேன் உன் பின்னால!


சொடுக்கு போட்டு நீ முறுக்கும் மீசைக்கு
மாமா,
சொக்கித் தவிக்கிறேன் மனசுக்குள்ள!


சண்டையில வந்து உன் சண்டித்தனம் பாத்து
மாமா,
சலனப்பட்ட நெஞ்சுக்குள்ள சத்தமேயில்ல!


சாஞ்ச நடை சண்டியரே, வெள்ள வேட்டி மம்முதரே
மாமா,
வெக்கத்துல வேகுது இந்த வெடலப்புள்ள!


எட்டு வச்சு நீ மடிச்சுக் கட்டுற வேட்டிக்கு
மாமா,
மவுசு இன்னும் கொறையவேயில்ல ஊருக்குள்ள!


அய்யனாரு சாமி போல, அஞ்ச வைக்கிற தோரண
மாமா,
அசந்து போயி நின்ன இமை சேரவே இல்ல!


தூணு துரும்பெல்லாம் உன் மொகமாம், தும்மும்போதும் உன் நெனப்பாம்
மாமா,
தூக்கங்கெட்டு துடிக்கிறேன் தூண்டிப்புழுவப்போல !


வானமளவு ஆச வளத்து, வண்ண வண்ணமா தோரணம் கட்டி
மாமா,
ஒனக்கான என் ஏக்கத்த நான் எப்புடிச் சொல்ல!


மண்ணுக்குள்ள நான் போகுமுன்ன, உன் எண்ணத்த தான் சொல்லு
மாமா,
மூனு முடிச்சுக்குதான் நிக்குது என் உசுரு பூமியில!!!!  

3 comments:

  1. Amutha, Really Nice Feelings in your words...
    Hats off...

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Adiyae Rasathi un mama koduthu vachavan di....

    ReplyDelete