Saturday, 31 August 2013

நீயும் நானும்

நான்
பொது இடங்களில் அசுத்தம் மட்டுமே செய்வேன்!
நீ
பொது இடங்களில் போராடவும் செய்கிறாய்!
நான்
பெண்கள் இருக்கையில் அமர்ந்து தூங்கி விடுவேன்!
நீ
பெண் உரிமைக்காக குரல் கொடுக்கின்றாய்!
நான்
முதலாளியின் பணத்தையே பொய் கணக்கில் திருடிவிடுவேன்!
நீ
உழலுக்கு எதிராக நிற்கிறாய்!
நான்
செய்வது குற்றமெனினும் பணத்தைக் கொண்டு
அதனை அழித்து விடுவேன்!
நீ
செய்தது நன்மையெனினும் உன் மீது
குற்றம் சுமத்தப்படும்!
அடுக்கிக் கொண்டே போகலாம்
எனினும் உனக்கும் எனக்குமான
வேற்றுமைகளை
ஒரே வரியில் சொல்வதானால்
நான்
குனிந்து நெளிந்து ஊர்ந்து விடும்
குடிமகனாக வாழ்ந்துவிடுகிறேன்!
நீ
குனியவே மறுத்து மனிதனாக வாழ்கிறாய்!
இதற்காக
எனக்கு ஒரு வீடும், வண்டியும் சொந்தமாகலாம்
நீ
நடுரோட்டில் வெட்டுப் படலாம்
ஏனெனில் நமக்குள் ஒரு ஒற்றுமையும் உள்ளது
நீயும் நானும்
ஒரே ஜனநாயக நாட்டின் இரு பிரஜைகள்!!!

- சராசரி இந்தியன்

Saturday, 24 August 2013

ஓடிக்கொண்டிருக்கிறேன்

எங்கேயோ ஓடிக்கொண்டிருக்கிறேன்.
என்னை போல பலரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
அதில் சில எங்கேயோ பார்த்த முகங்கள்
சட்டென நினைவில் வரவில்லை.
அவர்களின் பார்வையின் அர்த்தமும் புரியவில்லை,
நீயுமா… என்பது போலவேயிருக்கிறது.
சலனத்துடனே அந்த பார்வைகளை கடந்து செல்கிறேன்.


என்னை சிலர் முந்தி செல்கின்றனர்.
எனக்கு தெரியும்
என் அதிகப்பட்ச வேகத்தில்
நான் சென்றுக் கொண்டிருக்கிறேன்.
இலக்கு எதுவென்று புரியவில்லை.
எல்லோரும் செல்லும் பாதையிலேயே
நானும் சென்றுக்கொண்டிருக்கிறேன்.
வெற்றி பெற்றவர்கள் எல்லாம்
உங்கள் தனித்த பாதையில் செல்லுங்கள்
என்று அறிவுறுத்துகிறார்கள்.
பலன் இல்லை.
அதை கேட்பதற்குக்கூட எனக்கு நேரமில்லை
ஓடிக்கொண்டிருக்கிறேன்.
புன்னகைத்தப்படியே
என்னை கடந்துசெல்கிறான் ஒருவன்.
எங்கேயோ பார்த்த முகம்.
கண்டிப்பாக அவன்
என் தொடர்பு எல்லைக்கு வெளியே சென்ற
நண்பனாகத்தான் இருக்க வேண்டும்.
மன்னித்துவிடு நண்பா…
என் நினைவில் எதுவுமில்லை.
நான் ஓடிக்கொண்டிருக்கிறேன்.
நண்பனுக்கே இந்நிலை என்றால்
உறவினர்களுக்கு…
சொல்லவே தேவையில்லை,
நான் ஓடிக்கொண்டிருக்கிறேன்.


அதிவேகம்…
கட்டுப்படுத்தும் திராணியில்லாமல்
என் கண்ணெதிரிலேயே சரிந்து விழுகிறான் ஒருவன்.
நான் பதைப்பதைக்கிறேன்.
அதற்குள்ளாகவே
அவனை மிதித்தே,
அவனின் தடயத்தை அழித்தே ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
நானும் ஓடிக்கொண்டிருக்கிறேன்,
என் அதிகப்பட்ச வேகத்தைக் கடந்து…
இதேநிலை நாளை எனக்கும் ஏற்படலாம்.
அதையெல்லாம் யோசிக்க நேரமில்லை
ஓடிக்கொண்டிருக்கிறேன்.


சட்டென எதுவோவொன்று
என்னை பின்னால் இழுக்கிறது.
அது யாழியின் நினைவாகக்கூட இருக்கலாம்
என நீங்கள் நினைத்தால்,
ஒரு சலனமற்ற
வெறுமைக் கலந்த மௌணம் ஒன்றே
என்னிடமிருந்து பதிலாய் கிடைக்கிறது.
உங்களுக்கு புரிந்திருக்கும்
நான் ஓடிக்கொண்டிருக்கிறேன்.

ஓடிக்கொண்டேயிருக்கிறேன்….

                                                 -யோகி

Wednesday, 21 August 2013

ரகசிய சிநேகிதனே

பூங்குழலி எங்கயிருக்க?’
சமையக்கட்டுல இருக்கேண்டா’
உடனே இங்க வா’
ஏன்?’
வான்னா வா’
வேலயா இருக்கேண்டா’
பூங்குழலி, நம்ம பாட்டு போடுறான் டி.வில’
நம்ம பாட்டா? ஆகா!’
ஆமாம். உடனே வா’
டேய் ப்ளீஸ்டா, சமைச்சு முடிச்சுட்டு வரேண்டா’
அதெல்லாம் முடியாது. இப்பவே வரனும்’
ஏண்டா இப்படி தொல்ல பன்ற?’
நான் பன்றது தொல்லயா?’
தொல்ல தான். காதல் தொல்ல, தாங்க முடியல’
வாடி, என் செல்லம்ல’
இப்பவே வரனும்னா நீ தான் மீதி சமையல் பண்ணனும், சரியா?’
பண்றேன் டீ’




அப்படியே பாதியில் சமையலை நிறுத்திவிட்டு பூங்குழலி, அருள்மொழி
உட்கார்ந்திருக்கும் இடத்திற்கு சென்றாள். தொலைகாட்சிப் பெட்டியில்
அலைபாயுதே’விலிருந்து ’சிநேகிதனே சிநேகிதனே’ பாடிக்கொண்டிருந்தது.


ம்ம்ம். சின்ன சின்ன அத்துமீறல் ஆரம்பி.’
கண்ண மூடு. அப்பத்தான் ஆரம்பிப்பேன்.’
சரி, மூடுட்டேன்.’


அருள்மொழி அவள் பின்னால் சென்று அவள் கைகளை பிடித்தபடி அவள் தோள் மீது தலை சாய்த்தவாறு மிகவும் மெல்லிய குரலில் அவன் நெஞ்சத்தின்று அவள் காதில் ‘ஐ லவ் யூ பூங்குழலி’ என்றான். அவளுக்கு அவர்கள் முதன் முதலில் பார்த்த போதெழுந்த அதே சிலிர்ப்பு இப்போது எழுந்தது.


அவளை திருப்பி இதழோடு இதழ் பதித்து முத்தம் கொடுத்தான். மூடிய கண்களை இன்னும் இறுக்கமாய் மூடிக்கொண்டாள் பூங்குழலி. இவன் இதயத்தில் எழுந்த ‘லப்’ அவள் இதயத்தில் ‘டப்’ என்று சேர்ந்துக்கொண்டது.
முத்தம் நீண்டது மணிக்கணக்காய்.


பூங்குழலியின் செல்களெல்லாம் பூக்கள் பூத்து குலுங்கியது. வெட்கத்தில் அவை சிவந்து, கதிரவன் அந்தி சாயும் அடிவானமாய் காட்சியளித்தால் பூங்குழலி. பேரழகு பதுமையாய் ஒளிவீசினாள் பூங்குழலி.


ம்ம். அடுத்து டா அருள்மொழி’
அடுத்தது என்ன? முத்தம் கொடுத்ததுல மறந்துப்போச்சு குட்டி’
எப்படித்தான் உனக்கு ஒவ்வொரு தடவையும் முத்தம் கொடுத்தோனே மறக்குமோ? இப்ப நீங்க எனக்கு நகம் வெட்டி விடனும் கண்ணு’
அப்ப போய் மெத்தையில படு’
பூங்குழலி மெத்தையில் படுத்துக்கொண்டு தூங்குவதுப் போல் நடித்தாள்.
அருள்மொழி அவளருகில் சென்று அமர்ந்து மலரின் இதழில் ஒர் இதழை மெதுவாக எடுப்பதுப்போல் அவள் கையை எடுத்து தன் ஒரு கையில் வைத்து மற்றொரு கையினால் அவள் நகத்தை களைந்தான்.
களைந்த நகத்தையெல்லாம் எடுத்து எப்போதும் அதனை சேமிக்கும் பெட்டியில் வைத்தான். பின் அவளருகில் படுத்துக்கொண்டான். அவள் அவன் மீது கை படர்த்தி நெஞ்சை முகம் புதைத்தாள். மேகம், பூமி இவர்கள் காதலில் நனைய மழை பொழிந்து மகிழ்வூட்டியது.


மெல்ல எழுந்து அவன் ஆலிவ் எண்ணெய் எடுத்து வந்தான். அவளின் மிருதுவான வயிற்றில் கிச்சு கிச்சு மூட்டி எழுப்பி விட்டான். அவள் மெத்தையில் கையும் காலும் நீட்டி அமர்ந்துக் கொண்டாள். அருள்மொழி அவளின் விரல்களில் ஆலிவ் எண்ணெயை பூசினான். அவள் உடல் வலிகள் அனைத்தும் பறந்துப்போயின. சுகத்தில் அவள் சொக்கிப்போனாள். அப்படியே அவளின் ஒவ்வொரு விரலுக்கும் சொடுக்கு எடுத்துவிட்டான். அவள் பூரித்துப்போனாள்.


சொர்கம் டா. உன் கூட இருக்குறது தான் எனக்கு சொர்கம். இப்பவே நான் செத்தாலும் எனக்கு முழு நிம்மதி டா.’
அடியே, அப்படி சொல்லாத. நூறு வருசம் உன் கூட வாழ்ந்து, வீடு முழுக்க குழந்தைகளா நிரம்பி, அதுகளோட குழந்தைகளுக்கு கதை சொல்லிட்டு, இப்ப போலவே எப்பவும் இருந்து நாம சாகனும்’
விழிகளில் நீர் வழிந்தது அவளுக்கு. துடைத்திட்ட இவன் கைகளை எடுத்து நெஞ்சோடு சேர்த்து சாய்ந்துக் கொண்டாள்.


சரிடா. அடுத்து என்ன?’
தெரியலடி’
டேய், சொன்னதெல்லாம் புரிஞ்சாச்சு, இப்ப சொல்லாத புரியனும். சொல்லாத இரவுல புரியலாம். இப்ப காதுல கூந்தல நுழைக்கப் போறேனே’
வேணாம் பூங்குழலி, வேணாம்’
உக்காருடா மடையா. கைகளால் காதைப் பொத்தி உட்கார்ந்தான். அவள் விட்ட உதையில் கைகளை விடுத்து பல்லை கடித்துக் கொண்டு உட்கார்ந்தான். அவள் தன் கூந்தலை அவன் காதினில் நுழைத்து இம்சித்தாள்.
பொறுத்து பொறுத்து பார்த்து தாங்கமுடியாமல் கத்திக்கொண்டே ஓடினான். அவள் பின்னால் துரத்திக்கொண்டே ஓடினாள்.


அவன் ஓடி குளியறையில் ஒளிந்துக் கொண்டான். அவள் அவனுக்கு பிடித்த நீல நிற சட்டையும் வெள்ளை பேண்ட்டும் போட்டுக்கொண்டு குளியறையின் வெளியிலிருந்து அவனை அழைத்தாள்.
டேய், கதவ திற’
மாட்டேன்’
இப்ப திறக்கப் போறியா இல்லாயா?’
போ, நான் மாட்டேன்’
திறக்க மாட்டதானே. அடுத்த தடவ பாட்டு போட்டா…’
சரி திறக்கறேன்’
அவன் சவரில் தலை நனைத்துக் கொண்டிருந்தான். இவள் அவனை கட்டிப்பிடித்துக்கொண்டாள். தோளிலும் மார்பிலும் கடித்தாள். தரையில் அவனை தள்ளிவிட்டு காலால் உதைத்து தள்ளினாள். அவன் வலியில் ஐயோ அம்மா என்று அலறினான். ஓய்ந்து முடித்தவள் அவனை அள்ளி உப்புமூட்டை தூக்கிக்கொண்டு வெளியே இறக்கி விட்டாள். அவன் அவளின் கூந்தலை துவட்டிவிட்டான்.
உன்னயெல்லாம் என் கைகுட்டையில மடிக்க முடியாது. சேலையில தான் சுத்தனும்.
அவனுக்கு பிடித்த மஞ்சள் நிற சேலையில் அவனை சுற்றி கட்டிலில் தள்ளிவிட்டாள். அவளும் அவன் மீது விழுந்தாள். அவன் வலியில் கத்தினான்.


அருள்மொழி, எனக்கு ஒரு வரம் வேணும்’
கேளுடி. என்ன வேணும்’
டேய் கணவா, இப்ப போலவே என்ன எப்பவும் பாத்துக்கோடா. நீ இல்லாத ஒரு நொடி கூட என்னால யோசிச்சு பாக்க முடியல. நான் சுயநலவாதினு நினைகாத, உனக்கு முன்னாடி நான் போய் சேரனும். அது மட்டும் தான் நான் உனக்கு தர ஒரே கஷ்டமா இருக்கனும். சொர்கமோ நரகமோ நான் அங்க போரத்துகுள்ள நீ எனக்கு முன்னாடி அங்க நிக்கனும். உன்ன விட்டு என்னால எங்கயும் இருக்க முடியாது டா.’
ச்சீ போடி. உன் குட இங்கவே இருக்க முடியல. இந்த அடி அடிக்கிற. அங்க வந்தும் என்னால வாங்க முடியாதுப்பா.’
அப்படியா. அப்ப அதுக்கும் சேத்து இப்பவே தரேன்’
போதும், இதோட நிறுத்திக்கோ. அப்புறம் அழுதுறுவேன். ஆமாம் அழுதுறுவேன்.’


அவளின் கண் பார்த்து சொன்னான்,
இந்த ஒரு வாழ்கை மட்டும் இல்ல, என்னுடைய எல்லா வாழ்க்கையுலும் நீ தான் எனக்கு பொண்டாட்டி, நான் தான் உனக்கு புருஷன். உன்னோட சுகம், துக்கம், கஷ்டம், இஷ்டம், இன்பம், துன்பம் எல்லாத்துலயும் நான் உன்கூடவே இருப்பேன். இது நம்ம விதி பூங்குழலி!’


காதல் அங்கு நிறைந்து இருந்தது.


அப்போது யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டது.
யாருனு நான் பாக்றேன். நீ சமைக்க போ. நான் பின்னாடியே வரேன்’
சரிடா. நீ சேலைய கழட்டிட்டு வேற மாத்திட்டு போ’


இவன் போய் கதவை திறந்தான். இவனின் அம்மா வெளியே நின்றாள்.
என்னடா இவ்வளவு நேரமா கதவ திறக்காம என்ன பண்ணிக்கிட்டு இருந்த?’
இவன் ஏதும் பேசாமல் கட்டிலில் அமர்ந்துக் கொண்டான். டி.வி பார்ப்பதை தொடர்ந்தான்.
அம்மா சமையலறையை கடந்து சென்றாள். குளியறையில் சவரில் இருந்து தண்ணீர் வழிந்தோடியது. அப்படியே அதனை நிறுத்திவிட்டு படுக்கையறைக்கு சென்றாள். அங்கே ஆலிவ் எண்ணெய் கீழே கொட்டி கிடந்தது.


அம்மா அழுதுக்கொண்டே அவனை நோக்கி பதறி வந்தாள்.
மவனே, ஏண்டா இன்னமும் பைத்தியகாரத்தனமா நடந்துட்டு இருக்க?
இல்லமா. டி.வில அந்த பாட்டு போட்டாங்களா, அதான் நானும் பூங்குழலியும் அப்படியே பண்ண ஆரம்பிச்சுட்டோம். பூங்குழலி! பூங்குழலி! அம்மா கூப்பிடறாங்க. இங்க வா. அவ சமைச்சுட்டு இருக்கா. அவகிட்ட வேணும்னா கேளுங்க.’
அவ உள்ள இருக்காளா? வந்து பாருடா. அவ இருக்காளா? டேய் அருள்மொழி, அவ உன்ன விட்டுட்டு வேற யாரையோ கல்யாணம் பண்ணிகிட்டா டா. அவ இங்க இல்லடா’
மா, பொய் சொல்லாத. பூங்குழலி இங்க வா. அம்மா என்ன ஏமாத்த பாக்குறாங்க. வந்து அம்மாகிட்ட நீ இங்க தான் இருக்கேனு சொல்லு’
இன்னும் எத்தன நாளைக்கு அவ இங்க இருக்குற மாறி கற்பனையில நினைச்சுட்டு வாழப் போறியோ. எப்பத்தான் நான் என் பழைய அருள்மொழிய பாக்கப்போறேனோ’ என்று மாரிலும் தலையிலும் அடித்துக் கொண்டாள் அம்மா.


அம்மா, பூங்குழலி உன்கிட்ட பேசிட்டு இருக்கா நீ பதில் சொல்லாம ஏன் அழுதுட்டு இருக்க. பாரு நீ அழறத பாத்து எப்படி துடிக்கிறா பாரு அவ’
ம்மா, அழாதமா. அவ உன்னயும் என்னயும் நல்லா பாத்துப்பா’


மீண்டும் கதவின் சத்தம் கேட்டது. கதவை திறந்துக்கொண்டு குமுதாவும் மூர்த்தியும் உள்ளே நுழைந்தார்கள்.


ஏங்க, ரோட்ல எட்டாம் ஆண்டு அஞ்சலினு போஸ்டர் ஒட்டியிருந்தாங்களே அத பாத்திங்களா?’
இல்ல, ஏன்?’
ஒரு அம்மாவும் புள்ளையும் ஒரே நாள்ல செத்துட்டாங்களாம். அந்த பையன் ஒரு பொண்ண காதலிச்சுருக்கான். அந்த பொண்ணு வீட்ல ஒத்துக்கல. இவன் அந்த பொண்னு நினைப்பிலேயே பைத்தியமா ஆகிட்டான். அவ இருக்குற மாறி நினைச்சுட்டு தானா பேசுவானாம், ஆடுவானாம். கொஞ்ச நாளைக்கு அப்புறம் அவன் தூக்கு மாட்டி செத்துட்டானாம். அந்த அம்மாவும் அவன புடிச்சுகிட்டே செத்துட்டாங்களாம்.’
அட பாவமே. என்னா பசங்க இவங்க? காதல் தோத்தா தற்கொலையா பண்ணறது. எவ்வளவு இருக்கு வாழ்க்கை. ச்சே. இவன மாறி பசங்கள நினைச்சாவே கோவம் தான் வருது’


ஏங்க வெளிய போறத்துக்கு முன்னாடி பாத்ரூம்க்கு நீங்க தானே போனீங்க?’
ஆமாம். பாத்ரூம் போக கூடாதா?’
போங்க. அதுக்கு யாரு என்ன சொல்ல போறா? போனா வரும் போது சவர நிறுத்திட்டு வரனும். பாருங்க எவ்வளவு தண்ணி வீணா போயிருக்கு.’
இல்லடி, நான் நிறுத்திட்டு தானே வந்தேன். எப்படி மறந்தேன்? ம்ம்ம்’
யே, நீ மட்டும் என்னவாம். இங்க பாரு பெட்ரூம்ல இப்படி. ஏண்டி ஆலிவ் எண்ணெய எடுத்தா ஒழுங்க வைக்க தெரியாதா? பாரு கீழ எப்படி கொட்டிகிடக்கனு’
இல்லங்க, நான் சரியா மூடி தானே வச்சேன். ஒரு வேல மறந்திருப்பேங்க’


ஒரு முக்கியமான விசயத்த சொல்ல மறந்துட்டேன்’
என்ன? வேற என்ன கொட்டி வச்சிருக்க?’
இல்ல, அந்த அம்மாவும் புள்ளையும் இந்த வீட்ல தான் செத்தாங்களாம். நான் என்ன இருந்தாலும் பரவாயில்ல. எங்களுக்கு அதுலயெல்லாம் நம்பிக்கையில்லனு சொல்லிட்டேன்’
டி.வியை போட்டார் மூர்த்தி. அதில் ‘சிநேகிதனே சிநேகிதனே’ பாடல்.
ஏங்க இந்த பாத்ரூம் சவர்ல ஏதோ கோளாறு போல, அதுவா திறந்துக்குது.
இங்க வந்து பாருங்களேன்’



ஏன் செத்த பின்னாடி காதல் தொடர கூடாதா?
                           -கோழி       

நட்பாட்டம்







தான் ரசித்த அழகிகளை
எனக்கு காட்டுபவனும் அவனே…
அதில் மிக அழகியை
எனக்கு தங்கையாக்குபவனும் அவனே…




உன் படுக்கையறையில்
நம் இரவை
பகிர்ந்துக்கொள்ள அனுமதித்த
உன் தந்தையின் கண்களில் உணர்ந்தேன்
நம் நட்பின் தன்மையை.




நட்பிற்கும் காதலுக்குமிடையே
மிகமெல்லிய இடைவெளிதான் இருக்கிறது.
ஆனால் அந்த இடைவெளியை கடக்காமலேயே
பயணித்துக் கொண்டிருக்கிறோம்
நெடுநாட்களாய்…




அகிரா முதல் அனுராக் வரை,
பாலசந்தர் முதல் பாலா வரை,
நித்தம் ஒரு உலகத்தை
என் மடிகணிணியில் திரையிட்டு
என் ரசனையை சீர்திருத்தியவன் நீ…
பாரதியையும், பாவேந்தனையும்
கல்கியையும், கள்ளிக்காட்டு இதிகாசத்தையும்,
உனக்கு பரிசளித்து
உன்னை உருவாக்கியவன் நான்.


    -யோகி.


Tuesday, 20 August 2013

கோடை மேகம்



நீண்ட நெடிய கோடைக்குப் பிறகு
பருவம் தவறிய
பற்றாக்குறை மேகம் ஒன்று
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
துளிகளை பொழிய,
பாலைவன சிறுபூச்சிகளாய்
பரபரத்து போகிறது
முகநூலின் பக்கங்களெல்லாம்.


தவறான நேரத்தில்
ஜனித்துவிட்டதாய் எண்ணி
தன் துளிகளை தனக்குள்ளேயே
சுருக்கிக் கொள்கிறது அந்த சிறுமேகம்.
பாவம் முதல் முத்தத்திலேயே
முடிந்துவிட்டததன் மோகம்.


அது பருவ மழையுமில்லை,
வெப்பச்சலன பெரு மழையுமில்லை,
மேகத்தின் நிலக்கவர்ச்சி,
காதலாய் மலர்ந்துவிடாத
பதின்பருவத்து இனக்கவர்ச்சி.


ஆழியில் ஜனிப்பாய்,
வானில் வளர்வாய்,
மலையில் பருவம் எய்வாய்,
வனத்தில் காதல் கொள்வாய்,
தரையில் நீராய் கரைவாய்,
என அதன் முன்னோர்கள்
அதற்கு சொல்லியிருக்கிறார்கள்.


அடர்ந்த வனத்தையும்,
அதன் வாலிப்பையும்,
பகலா இரவா என்றறியா அடர்த்தியையும்
அதன் இலக்கியங்கள்
அதற்கு காட்டியிருக்கின்றன.


அந்த முகவரிகளையெல்லாம்
தொலைத்துவிட்ட அந்த முகில்,
கானல் நீரை
ஊற்று வெள்ளம் என்றெண்ணி
ஓடும் ஒரு ஆட்டுக்குட்டியின் திசையினை
திருப்பிட முயற்சிக்கும்
வாழ்க்கை சுருங்கிய முதியவரிடம்
வனத்தின் முகவரியை வினவ
தூரத்தில் இலைகள் உதிர்ந்த
ஒரு மரத்தினை வெறித்தன
அவரின் விழிகள்.
அந்த மரத்தின்
கடைசி பெருமூச்சில்
முற்றாய் கலைந்தது அந்த மேகம்.

                                                 
-யோகி.


Sunday, 18 August 2013

பாவ நகரம் - XII

       அந்த டைரியின் வரிகளை அவன் கண்கள் விழுங்க ஆரம்பித்தன. ஜோசப்பின் கையெழுத்தில் அவன் வாழ்வின் மர்மம் விளங்க ஆரம்பித்தது.
         “கடவுள் எல்லாரையும் ஒரு காரணத்துக்காகதான் படைக்கிறார்னு நான் முழுசா நம்புனேன். என்னோட படைப்பு இந்த குக்கிராமத்துல இருக்குற பாவபட்ட ஜனங்களுக்கு கடவுளோட பேர்ல வாழறதுக்கு நம்பிக்கை விதைக்கிறதுனதுதான் நினைச்சுக்கிட்டிருந்தேன், அந்த கர்ப்பிணி பொண்ணு சர்ச் படிக்கட்டுல வந்து மயங்கிக் கிடந்த அன்னிக்கு வரைக்கும். “

இருபது வருடங்களுக்கு முன் காரை என்னும் குக்கிராமம்

      ஜோசப் வழக்கம் போல் ஜபத்தை முடித்து விட்டு, பாவ மன்னிப்புகளை வழங்கி விட்டு தனது அறைக்கு திரும்பும் போது அந்த கர்ப்பினி பெண் சர்ச் வாசலில் வருவதைக் கண்டார். அவள் உருவம அருகே நெருங்க நெருங்க அவள் வலியால் துடிப்பது தெரிந்தது. அவள் முகத்தில் அழுததற்கான அடையாளங்கள் தென்பட்டன. மிகவும் அழுதிருந்தாள்.
யாரும்மா நீ?”
வலி அதிகமாருக்கு பாதர்"
ஜோசப் அவளை அருகிலிருந்த ஒரு பெஞ்சில் அமர செய்து விட்டு, மருத்துவச்சிகாக ஓடினார்.
சில நிமிடங்களில் ஒரு வயதான மூதாட்டி வர, அவளுடன் உதவிக்கு சில கிராமத்து பெண்களும் வந்திருந்தனர். அவளை ஒரு அறைக்குள் கூட்டிச் சென்றனர். அப்போது அவள் ஜோசப்பை பார்த்தாள். ஜோசப்புக்கு அப்பார்வை அவளுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் என்பது போல் இருந்தது. ஜோசப் இறைவன் முன் மண்டியிட்டு வேண்ட ஆரம்பித்தார். ஒரு சில மணித் துளிகள் அந்தப் பெண்ணிண் அலறல் ஜோசப்பின் காதுகளில் விழுந்துக் கொண்டே இருந்தது.
கடவுள் எல்லாரையும் ஒரு காரணத்துக்காக தான் படைக்கிறார்.ஆனால் பெண்கள்தான் தன் வலியையும், கஷ்டத்தையும் பொறுத்துக்கிட்டு கடவுளோட படைப்புகள இந்த உலகத்துக்கு கொண்டு வராங்க" அவர் மனதில் இது போன்ற எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்க, ஆண் குழந்தை பிறந்துள்ளது என அந்த மருத்துவச்சி வந்து சொன்னாள்.
ஒரு சில நாட்கள் கழித்து அவள் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. அவள் அந்தக் குழந்தையின் முகத்தில் இருந்து ஒரு புத்துணர்ச்சி அவளைத் தொற்றியிருந்தது. சில தினங்களுக்குள் நடந்த கொடூர சம்பவம் அவள் மனதை குடைந்து கொண்டிருந்தன. சரியாக சொல்ல வேண்டுமென்றால் கல்லாக்கிக் கொண்டிருந்தன. அப்போது ஜோசப் உள்ளே வந்தார். அவரைப் பார்த்ததும் உள்ளே துனைக்கு இருந்த இரண்டு பெண்கள் வெளியே சென்றனர். ஜோசப் அந்தக் குழந்தையைப் பார்த்தார். அது பாதி உறக்கத்திலிருந்தது. மௌனத்தை முதலில் அந்தப் பெண் கலைத்தாள்.
ரொம்ப நன்றி பாதர்"
நீ யாருமா?”
என் குழந்தைக்காக முதல ஒரு ஜபம் பண்ணுங்க பாதர்"
ஜோசப் அந்தக் குழந்தையின் மேல் பைபிளை வைந்து ஜபிக்க ஆரம்பித்தார்.

இன்று

பிரார்த்தனை முடிந்து கூட்டம் கலைய ஆரம்பித்த பின்புதான் ஸ்ரீதர் மணியைப் பார்த்தான். அந்த டைரியிலேயே அவன் தங்குவதற்கான இடத்தையும் ஜோசப் குறிப்பிட்டிருந்தார். மைதானத்திலிருந்து நடந்தே ஸ்ரீதர் அந்த இடத்தை அடைந்தான். அந்த வீட்டின் கதவை தட்டினான். நள்ளிரவிலும் உடனே கதவு திறக்கப் பட்டது. ஒரு வயதானவரோடு சேர்ந்து அந்த வீடு அவனை உள்வாங்கிக் கொண்டது.
உள்ளே அவனிடம் ஒரு கடிதம் தரப் பட்டது. மீண்டும் ஜோசப்.

கமிஷனர் அலுவலகம் அதிகாலை 4 மணி

தரண் அந்த பைகள்களைப் பற்றி விவாதித்து விட்டு வெளியே வந்த போது காக்கிச் சட்டையில் ஒருவனை விசாரணைக்காக அழைத்து வந்திருந்தனர்.
யார் இது?”
பஸ் டெப்போல திருட பாத்திருக்கான்" என்று கண்ணன் பதிலளித்தான்.
தரண் அவனை அருகில் அழைத்தான்.
திருட புகுந்தது சரி, டிரஸ் எப்படி அதே கலர்ல"
அவன் விழிக்க ஆரம்பித்தான். மாட்டி கொள்வோம் என்ற எண்ணம் அவனை யோசிக்க விடாமல் தடுத்தது.
என்ன வேலை செய்யற"
சட்டென சுதாரித்துக் கொண்ட அவன் "வாட்ச்மேன் சார்"
வேலதான் இருக்கில்ல அப்புறம் ஏண்டா திருடுறே"
வாங்கற தெல்லாம் வீட்டுக்கே போயிடுது சார், குடிக்க...” அவன் சொல்லி முடிப்பதற்குள் ஒரு அறை அவன் முகத்தில் விழுந்தது. தரண் வேகமாக அவன் அறைக்கு சென்று விட்டான்.
போய் உக்கார்ரா?” என கண்ணன் அவனைப் பணித்து விட்டு தரணின் அறைக்கு வேகமாக சென்றான்.

ஜோசப் நண்பரின் வீடு

              “நீ அந்த டைரியை முழுதாகப் படித்திருப்பாய் என் நம்புகிறேன். அப்படியானால் நீ செய்ய வேண்டியவை உனக்கே புரியும். இல்லையென்றால் உன் மாற்றம் இன்றிலிருந்து துவங்க வேண்டும். உன் அம்மா அவருடைய அறிவையும், இந்திய வளத்தையும் பயன்படுத்தி பல கோடிகள் செலவாகும் ஒரு விஷயத்தை, இரண்டாண்டுளில் கண்டறிந்து, அதை செயல் படுத்தும் விதத்தையும் எளிமையாக்கிவுள்ளார். டைரியை படித்து முடித்தப் பின் இது உனக்கு விளங்கும். இப்போது என் நண்பர் தரும் மருந்தை மட்டும் எடுத்துக் கொண்டு உறங்கு"
ஸ்ரீதர் என்ன நடக்கிறது என கிரக்கதற்குள் அந்த முதியவர் அவன் முன் ஒரு மருந்துடன் நின்றார்.
கமிஷனர் அலுவலகம்

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கழித்து தரணிடம் கண்ணன் அவசரமாக வந்தான்.
இன்னும் ரெண்டு பேர வேற வேற டெப்போல இருந்து அரஸ்ட் பண்ணியிருக்காங்க அவங்க எல்லார்கிட்டயும் அங்க வேல செஞ்சங்களோட ஐ டி கார்ட் இருந்திருக்கு. இதுவரைக்கும் டெப்போல வேலை செஞ்ச நாலு பேரக் கானோம்"
தரண் சிந்திக்கத் துவங்கினான்.
ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட எத்தன பேரு பாவநகர பஸ்ல போவாங்க"
லட்சக்கண்க்குள, பாம் எதாவது"
இல்ல, லட்சக் கணக்கான ஜனங்க ஒரு நாள் அவங்க வேலைக்கு போகலனா இந்த ஊருக்கு எவ்வளவு வருமானம் வராம போகும்"
கோடிக் கணக்குள"
பல்லாயிரம் கோடி. எத்தன பஸ் டெப்போலிருந்து வெளியே போயிருக்கும்”
நிறைய"
"எல்லா டெப்போலயும் சொல்லி தயார இருக்க சொல்லுங்க, நிறைய வேலையிருக்கு அவங்களுக்கு" தரண் தொடர்ந்தான். “இருக்குற எல்லா போலீஸ் காரங்களையும் ரெடி பண்ணுங்க"
எனக்கு புரியல"
சிம்பிள் இன்னிக்கும் நாம வீட்டுக்கு போக முடியாது” தரண் வேகமாக செயல் படத் துவங்கினான்.
                                                                                                                       -சராசரி இந்தியன்