Tuesday, 20 August 2013

கோடை மேகம்



நீண்ட நெடிய கோடைக்குப் பிறகு
பருவம் தவறிய
பற்றாக்குறை மேகம் ஒன்று
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
துளிகளை பொழிய,
பாலைவன சிறுபூச்சிகளாய்
பரபரத்து போகிறது
முகநூலின் பக்கங்களெல்லாம்.


தவறான நேரத்தில்
ஜனித்துவிட்டதாய் எண்ணி
தன் துளிகளை தனக்குள்ளேயே
சுருக்கிக் கொள்கிறது அந்த சிறுமேகம்.
பாவம் முதல் முத்தத்திலேயே
முடிந்துவிட்டததன் மோகம்.


அது பருவ மழையுமில்லை,
வெப்பச்சலன பெரு மழையுமில்லை,
மேகத்தின் நிலக்கவர்ச்சி,
காதலாய் மலர்ந்துவிடாத
பதின்பருவத்து இனக்கவர்ச்சி.


ஆழியில் ஜனிப்பாய்,
வானில் வளர்வாய்,
மலையில் பருவம் எய்வாய்,
வனத்தில் காதல் கொள்வாய்,
தரையில் நீராய் கரைவாய்,
என அதன் முன்னோர்கள்
அதற்கு சொல்லியிருக்கிறார்கள்.


அடர்ந்த வனத்தையும்,
அதன் வாலிப்பையும்,
பகலா இரவா என்றறியா அடர்த்தியையும்
அதன் இலக்கியங்கள்
அதற்கு காட்டியிருக்கின்றன.


அந்த முகவரிகளையெல்லாம்
தொலைத்துவிட்ட அந்த முகில்,
கானல் நீரை
ஊற்று வெள்ளம் என்றெண்ணி
ஓடும் ஒரு ஆட்டுக்குட்டியின் திசையினை
திருப்பிட முயற்சிக்கும்
வாழ்க்கை சுருங்கிய முதியவரிடம்
வனத்தின் முகவரியை வினவ
தூரத்தில் இலைகள் உதிர்ந்த
ஒரு மரத்தினை வெறித்தன
அவரின் விழிகள்.
அந்த மரத்தின்
கடைசி பெருமூச்சில்
முற்றாய் கலைந்தது அந்த மேகம்.

                                                 
-யோகி.


No comments:

Post a Comment