உடையுமோ குடியரசு
29வது மாநிலமாக “தெலுங்கானா” என்றொரு மாநிலத்தை தற்போதைய ஆந்திர
தேசத்தில் இருந்து பிரித்து, தனிமாநிலமாக அறிவிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி
உள்ளது. இதன் பிண்ணனியில் உள்ள பிற்போக்குத்தனமான அரசியலைப் பற்றியும், தனி
மாநிலமாக பிரிக்கவேண்டியதன் தேவை குறித்தும், தேவையின்மை குறித்தும், இந்த
அறிவிப்பை வழிமொழிந்து வரவேற்பவர்களின் சிந்தனை மட்டத்தைக் குறித்தும் என்
அறிவுக்கு எட்டியவற்றை இங்கு பகிர்வதன் மூலம், அது ஒரு நல்ல விவாதத்துக்கு
வழிகோலும் என்ற எண்ணத்தில் தான் இதை பதிவேற்றுகிறேன். இங்கு முன்வைக்கப்படும்
தகவல்கள், தீர்வுகள் போன்றவற்றில் இருக்கின்ற சீர்மையற்ற கருத்துக்கள், ஒவ்வாமைகள் தொடர்பான விவாதத்துக்கு விருப்பமுள்ளோரை வரவேற்று வழிவிடுகிறேன்…
தெலுங்கானா தனி மாநிலமாக பிரிவது நல்லது என்பதற்கு
முன்வைக்கப்படும் காரணங்கள், 1) ஆந்திரத்தின் பிற பகுதிகளைப் போல் தெலுங்கானா
பகுதிகளும் அங்கு வாழும் மக்களும் பொருளாதார நிலையிலோ அடிப்படை வசதிகளிலோ
எந்தவிதத்திலும் வளர்ச்சியடையவில்லை. அவர்களுக்கான வாய்ப்புகள் புறக்கணிக்கப்படுவதால்
அவர்கள் பின்தங்கிய நிலையிலேயே வாழ்கிறார்கள். 2) தெலுங்கானா இந்தியா சுதந்திரம்
அடைந்து பல ஆண்டுகள் வரையிலும் கூட ஆந்திர பிரதேசத்துடன் சேராமல் தனியாகவே
இருந்தது. அதனால் இது பல ஆண்டுகால கோரிக்கை.. 3) தெலுங்கானா பகுதியில் வாழ்கின்ற
மக்கள் ஆந்திரப் பிரதேசத்துடன் சேர்ந்து இருக்க விரும்பவில்லை.. தனியாக செல்வதையே
விரும்புகிறார்கள்.. 4) உஸ்தானியா பல்கலைக்கழக மாணவர்கள் முதற்கொண்டு அனைத்து
மாணவர்களும் ஒற்றுமையாக போராடி வருகிறார்கள்.. அவர்களும் வேலைவாய்ப்பு ரீதியில்
முன்னேற்றம் காண தனி தெலுங்கானாவையே விரும்புகிறார்கள்..
இப்படி இன்னும் பல காரணங்கள் உண்டு. இருப்பினும் மேற்சொன்ன
காரணங்கள் மட்டுமே மிக முக்கியமான காரணங்கள். எனவே அதை மட்டும் விவாதப்
பொருளாக்குவோம்.. அதற்கு முன்பு கொஞ்சம் தெலுங்கானாவின் வரலாறு….
தெலுங்கானா பகுதியை தவிர்த்து ஆந்திரத்தின் பிறபகுதிகள் எல்லாம்
ஒருங்கிணைந்த சென்னைபட்டிணத்தின் ஆளுகைக்கு கீழேதான் இருந்தது. ஆனால் இன்றைய
தெலுங்கானா பகுதியானது, இன்னும் சில மராட்டிய பகுதிகளையும் கர்நாடகப் பகுதியையும்
சேர்த்து ஹைதராபாத் சமஸ்தானம் என்னும் பெயரில் நிஜாம் ஆளுகைக்கு கீழ் இருந்தது.
அப்படியென்றால் நிஜாம் ஆட்சியை வெள்ளையர் கண்டுகொள்ளவில்லையா..? என்று கேள்வி
எழும்.. ஆம் அவர்கள் கண்டுகொள்ளவில்லைதான்.. ஏனென்றால் அந்த நிஜாம் மன்னர்
ஆங்கிலேயர்கள் கட்டச் சொன்ன வரிப்பணத்தை எந்தவித மறுப்பும் இன்றி கட்டிவந்தது தான்
காரணம். அதனால் நிஜாம் ஆட்சிக்கு உட்பட்ட எல்லைகளில் அவர்கள் ஆட்சி அதிகாரங்களில்
தலையிடாமல் வெறும் வரிப்பணத்தை மட்டும் கப்பமாக வாங்கிக் கொண்டு நிஜாமை அவரது
தலைமையின் கீழ் ஆட்சி செய்ய அனுமதித்தனர்.
அவர் தன் ஆளுகைக்கு உட்பட்ட வறிய மக்களை கசக்கிப் பிழிந்து,
அவர்கள் மீது அதிகமான வரிச்சுமை விதித்து மக்கள் பணத்தைப் பிடுங்கி,
ஆங்கிலேயருக்கு கப்பம் கட்டி தன் வாழ்க்கையை மிகவும் சுகபோகமாக ஓட்டி வந்தார்.
அந்த காலகட்டத்திலேயே அவர் முதல் இருபது பணக்காரர்களுள் ஒருவராகவும் இருந்தார்
என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு முக்கியமான அம்சம் அவரது ஆட்சியின் கீழ்
வாழ்ந்த அதிகபடியான மக்கள் தெலுங்கு பேசும் மக்களாக இருந்தாலும், மன்னர் முஸ்லீம்
என்பதால் ஆட்சி மொழியாக இருந்தது உருது மொழி. இதனால் உருது பேசத் தெரிந்த மராட்டிய
மக்களே நிஜாம் அரசின் அரசாங்கப் பணிகளை அலங்கரித்தனர்.. மேலும்
பள்ளிக்கூடங்களிலும் ஆட்சிமொழி உருது, ஆங்கிலமும் அங்கு கற்றுக் கொடுக்கப்படவில்லை
என்பதால் தெலுங்கு பேசும் மக்கள் கல்விகற்பதிலும் சிக்கல் ஏற்பட்டது.. படிப்பறிவு
இன்மையாலும், அரசாங்கப் பணிகளில் இல்லாமல் வெறும் விவசாயம் மட்டுமே
செய்துவந்ததாலும், ஜமீந்தாரி முறையின் கொடுமையாலும் அவர்களது வாழ்க்கைதரம் பெரிதாக
ஒன்றும் உயரவே இல்லை..
அதே நேரத்தில் ஆங்கில ஆளுகையின் கீழ் இருந்த ராயல்சீமா,
ஆந்திரத்தின் பிற பகுதிகளில் வசித்துவந்த மக்களுக்கு ஆங்கிலேயரின் வாயிலாக
ஜமீந்தாரி முறை ஒழிக்கப்பட்டதால் எந்தவிதமான வரி நிர்பந்தமும் இன்றி பொதுமக்களும்
விவசாயிகளும் மகிழ்ச்சியுற்றனர். சாதிய அடுக்குகள் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின்
கீழ் புறக்கணிக்கப்பட்டதால் ஓரளவுக்கு தாழ்த்தப்பட்ட மக்களும் ஆங்கில அறிவைப்
பெற்றும், அரசாங்கப் பணிகளிலும் ஓரளவுக்கு பங்கு கொண்டு தங்கள் வாழ்க்கைத்தரத்தை
மேம்படுத்திக் கொண்டனர். இப்படி இருக்கையில் தான் 1946ம் ஆண்டு தெலுங்கானா
பகுதிகளில் கம்யூனிஸ்டு கட்சிகளின் பிரச்சாரத்தால் முதன்முதலாக ஒரு மக்கள்படை
தோற்றுவிக்கப்பட்டு அது நிஜாமின் ராணுவத்தை எதிர்த்துப் போராடி 300க்கும் மேற்பட்ட
கிராமங்களை மீட்டு, மக்களே ஆட்சி செய்யத் தொடங்கினர். சுதந்திரப் போராட்டத்தின்
விளைவாக, ஆங்கிலேயர்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சுதந்திரம் தருவதாக
அறிவித்து நாட்டை விட்டு வெளியேறினார்கள்.
அப்போதும் வரியை ஒழுங்காக கட்டிவந்த நிஜாம் ஆளுகைக்கு உட்பட்ட
பகுதிகளைப் போன்ற சிற்சில பகுதிகள் இந்தியாவுடன் இணைவதும் இணையாமல் இருப்பதும் அவரவர்
விருப்பம் என்று கூறியே வெளியேறினார்கள். அதில் சில பகுதிகள் தாமாக முன்வந்து
இந்தியாவுடன் இணைந்து கொண்டது. நிஜாம் கட்டுப்பாட்டின் ஹைதராபாத் சமஸ்தான
தெலுங்கானாவில் இன்னும் சில பகுதிகளில் மன்னர் ஆட்சியே நடந்துவந்தது.. அப்போதும்
மக்கள் தீராத துன்பத்தில் வாழ்ந்துவந்தனர்… அப்போதுதான் ஏற்கனவே மக்கள்
புரட்சியால் கதிகலங்கிப் போய் இருந்த நிஜாம் தன் நிலப்பரப்பை பாகிஸ்தான் ஆட்சிக்கு
கீழ் கொண்டு செல்லவேண்டும் என்ற எண்ணத்துடன் காய்களை நகர்த்த தொடங்க.. இதைக்
கவனித்த ஜவஹர்லால் நேரு அவர்கள் பிரசித்திப் பெற்ற “போலோ” ஆப்ரேசன் மூலம் இந்திய
ராணுவத்தைப் பயன்படுத்தி நிஜாம் அரசை பணியச் செய்து வெற்றி கொண்டார். இருப்பினும்
மக்கள் புரட்சிப்படை இந்திய ராணுவத்தை எதிர்த்துப் போரிடவே இந்திய அரசாங்கம்
திணறியது. அப்போது கம்யூனிஸ்டு கட்சியினர் எடுத்த ஒரு தவறான நிலைப்பாட்டால் மக்கள்
தங்கள் போராட்டத்தை விடுத்து இந்தியாவுடன் இணைய சம்மதித்தார்கள்.. அப்போது அது
ஹைதராபாத் மாநிலம் என்று அழைக்கப்பட்டது. இதனிடையே, சென்னை மாகாணத்தைப் பிரித்து
ஆந்திரா தனிமாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தெலுங்கு பேசும் மக்களிடையே
வலுப்பெற்றது. தெலுங்கு பேசும் மக்களின் உரிமையைப் பாதுகாக்கும் வகையில், ஆந்திரா
என்ற தனிமாநிலத்தை உருவாக்கி அதற்கு சென்னையை தலைநகராக அறிவிக்க வலியுறுத்தி
பொட்டி ஸ்ரீராமலு என்பவர் அக்டோபர் 19ம் தேதி 1952ம் வருடம் சாகும் வரை
உண்ணாவிரதம் இருந்து 63ம் நாள் உயிர்விட 1952 டிசம்பர் 15ல் அவரது இறுதி
ஊர்வலத்தின் போது சென்னை மவுண்ட் ரோட்டில் பெரிய கலவரம் வெடித்தது. தெலுங்கு
பேசும் பகுதிகளான ராயல் சீமா கடலோர ஆந்திர மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதன்
விளைவாக 1953ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி குர்நூலை தலைநகராகக் கொண்டு தனி ஆந்திர
மாநிலம் உருவாக்கப்பட்டது.
அப்போதும் தெலுங்கானா பகுதி ஹைதராபாத் மாநிலமாகவே இயங்கி வந்தது.
1956 நவம்பர் 1ல் மொழிவாரி மாநிலங்களாக இந்தியா பிரிக்கப்பட்ட போது ஏற்கனவே
தெலுங்கு பேசும் மக்கள் வாழ்ந்துவந்த ஆந்திரப் பகுதியுடன் தெலுங்கானாவை இணைத்தார்
நேரு. ஆனால் தெலுங்கானாவைத் தவிர்த்து பார்த்தால் ராயல்சீமா, கடலோர ஆந்திர மக்கள்
அப்போதே கல்வியறிவிலும் பொருளாதாரத்திலும் மேம்பட்டு இருந்ததால் இருவருக்கும்
இடையே ஒரு வேறுபாடு சமமாக வளரத் தொடங்கியது.. அப்போதே தெலுங்கானா எப்படி தனியாக
இருந்ததோ அதே போல் அதை தனிமாநிலமாக பிரிக்க வேண்டும் என்று சிலர் போராட்டம்
நடத்தத் தொடங்கினர்… இப்படித்தான் தெலுங்கானா தனி மாநிலத்திற்கான முதல் போராட்டம்
தொடங்கியது…. இதுதான் தெலுங்கானாவின் சுருக்கமான வரலாறு.
இப்போது மீண்டும் மேற்கூரிய நான்கு காரணங்களுக்கு வருவோம்.
தெலுங்கானாப் பகுதி மக்கள் பொருளாதார நிலையில் வளர்ச்சி அடையாமல் பின்தங்கி
உள்ளனர் என்பது முழுமுதற்காரணம். இது கண்டிப்பாக வருந்தத்தக்க ஒன்று. ஆனால் சற்று
கூர்ந்து பார்த்தால் தனி தெலுங்கானா மாநிலமாக பிரிவதற்காக போராடிய போராட்டங்களுள்
பாதியளவுக்கு கூட தங்களது பொருளாதாரம் பின்தங்கி உள்ளது. அரசு எங்கள் பகுதி மக்களின்
வளர்ச்சியில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதனை முன்னிருத்தி போராட்டங்கள்
நடத்தப்பட்டதாக எனக்கு நினைவு இல்லை.. ஆக இங்கு பொருளாதார நிலையில் தன்னிறைவு
இல்லை என்பதைக் காட்டிலும் தனித் தெலுங்கான என்பது தான் இவர்களது பிரதானக்
குறிக்கோள் என்பது தெள்ளத் தெளிவாகிறது. இதனை அரசியல் சாயம் பூசி சந்தேகக் கண்
கொண்டு பார்க்காமல் தவிர்த்துவிட முடியாது.
அடுத்து தெலுங்கானா இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னரும் கூட பல
ஆண்டுகளுக்கு தனி மாநிலமாகவும் தனி ராஜ்ஜியமாகவும் விளங்கியது என்ற காரணம். ஆம்
உண்மைதான். மறுக்கவில்லை.. தெலுங்கானா மட்டும்தான் அப்படி இருந்ததா.. வரலாற்றைப்
புரட்டிப் பார்த்தால் இந்தியாவுக்கு சுதந்திரம் அறிவிக்கப்பட்ட போது அதன்
நிலப்பரப்பில் 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் சுயராஜ்ஜியத்துடன் விளங்கியவைதான்.
அதற்காக அந்த 500 ராஜ்ஜியங்களையும் தனித்தனியாக பிரித்துவிட முடியுமா…? அதனால்
மேற்சொன்னக் காரணத்தைக் கணக்கில் கொள்ள முடியாது…
மூன்றாவதாகச் சொல்லப்படும் காரணம், தெலுங்கானா பகுதியில் வாழும்
மக்கள் தனித்திருக்கவே, தனி மாநிலமாக பிரியவே விரும்புகிறார்கள் என்ற
காரணம்… இது ஒரு முக்கியமான உளவியல் சார்ந்த காரணம்.. இதனை வெகு கவனமாக அணுக
வேண்டிய தார்மீக கடமை நம் எல்லாருக்கும் உண்டு. நான் பெங்களூருவில் பணியாற்றிய
காலத்தில் ஆந்திர தேசத்தில் இருந்து எனக்கு ஒரு நெருக்கமான நண்பன் அறிமுகமானான்.
அவனோடு உரையாடும் போது, அவன் விளையாட்டாக, ஆனால் அவனது உள்மனதில் இருந்து கூறிய
ஒரு வார்த்தை “WE DON’T HAVE VERY GOOD NEIGHBOUR’S” அதாவது எங்களுக்கு (ஆந்திர
மக்களுக்கு) ஒரு மிகச் சிறந்த அண்டை வீட்டுக்காரன் (தமிழன், கன்னடன்,மராட்டியன்
மற்றும் ஒரியன்) இல்லவே இல்லை என்றான். சற்று யோசித்துப் பார்த்தால் புரியும். இது
கண்டிப்பாக ஒரு ஆந்திர பிரஜையின் எண்ணமாக மட்டும் இல்லை. இதையேதான் ஒவ்வொரு
மாநிலத்தாரும் அண்டை மாநிலத்தவரைப் பார்த்துக் கூறிக் கொண்டே இருக்கிறோம்.. இந்த
ஒவ்வாமை எப்படி நமக்குள் விதை விட்டு விருட்சமாக மாறியது. இதனை தூண்டிவிட்டு
வளர்த்தெடுத்த அயோக்கியர்கள் யார்…? மனிதத்தன்மையை மறக்கடித்து இப்படி ஒரு
மாநோய்க்கு நம்மை நாமே எப்படி பலிகொடுக்கும் மந்தநிலைக்கு மனித இனம் எப்போது
யாரால் தள்ளப்பட்டது…?
இதைத்தான் நாம் சற்று உளவியல் ரீதியாக அணுக வேண்டியுள்ளது.. அப்படி
என்ன வெறுப்பு ஒவ்வொரு அண்டை மாநிலத்தவன் மீதும்…? அவன் நம் எதிரி.. நம்
போட்டியாளன் என்பதாலா..? எதில் அவன் நம் போட்டியாளன் என்று நம்மை நாமே கேட்டுக்
கொண்டால் நம் மனதிற்குள்ளே பதில் வரும் எல்லாவற்றிலும் தானென்று…! வேலை
பங்கீட்டில், உணவு பங்கீட்டில், நீர் பங்கீட்டில், நிலப் பங்கீட்டில், பொருளாதாரப்
பங்கீட்டில், பெண் பங்கீட்டில்…. இப்படி எத்தனையோ பங்கீடுகளில் அவன் நம்
போட்டியாளன்…? இன்னும் சற்று ஆழமாக யோசித்துப் பாருங்கள்.. அண்டை மாநிலத்தவனை
மட்டும் தான் நாம் விரோதிக்கிறோமா…? தமிழகத்தில் உள்ள அனைவரையுமே நாம்
நேசிக்கிறோமா…? அதுவும் இல்லையே…? நீங்கள் உங்கள் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல்
கூறுங்கள்…? உங்களுக்கு பிடித்த மாநிலம் உங்கள் மாநிலம் தான்.. உங்களுக்கு பிடித்த
ஊர் உங்கள் ஊர்தான்… உங்களுக்கு பிடித்த தெரு உங்கள் தெரு தான்…. உங்களுக்கு
பிடித்த வீடு உங்கள் வீடுதான்.. உங்களுக்கு பிடித்த நபர் “நீங்கள்” தான் நீங்கள்….
நீங்கள் மட்டும் தான்…… இப்படி நாம் எதிலெல்லாம் எங்கள் எங்கள் என்று கூறிக்
கொண்டு அலைகிறோமோ… அதன் அகச்சிந்தையில் அசிங்கமாய் ஒழிந்து கொண்டு இருப்பது நான்..
நான்… நான்.. என்னும் அகந்தை மட்டுமே தான்…
நமக்கு உடன் பிறந்தோரும் போட்டியாளன் தான்.. பக்கத்து
வீட்டுக்காரனும் போட்டியாளன் தான்… பக்கத்து தெருக்காரன், பக்கத்து ஊர்க்காரன்,
பக்கத்து மாவட்டத்துக்காரன், பக்கத்து மாநிலத்துக்காரன், பக்கத்து நாட்டுக்காரன்
என எல்லோருமே போட்டியாளன் தான்.. நமக்கு நான் என்பது மிகமிகமுக்கியம்… பிரிந்து
இருக்க விரும்புகிறார்கள்.. எனவே பிரித்து விடுவோம் என்று சொன்னால்… இங்கு ஒவ்வொரு
மனிதனையும் தனித்தனியாக அல்லவா பிரிக்க வேண்டும்… அதைத்தானே நாம் அப்பட்டமாக
விரும்புகிறோம்….? பிரிக்க வேண்டும் என்று குரம் கொடுப்பவர்களே..? பிரித்து
விடலாமா…? ஒவ்வொரு மனிதனையுமே தனித்தனியாக…? நிச்சயமாக அவன் அதைத்தான்
விரும்புகிறான்…?
ஒவ்வொரு மனிதனும் தனித்தே இருக்க விரும்புகிறான் என்றால் தனித்தே
இருந்துவிடலாமே…? அதில் என்ன மோசம் வந்துவிடும் என்ற கேள்வி எழும்.. ஆனால் அதில்
மோசம் வந்துவிடத்தான் செய்யும்… தனிமை சில நேரங்களில் மனிதனுக்கு நல்லதுதான்…
ஆனால் பல நேரங்களில் தனிமை மனிதனுக்கு தான் ஒரு விலங்கென்பதை உணர்த்திவிடும்…
விலங்கினச் சிந்தனைகளை வீறு கொண்டு எழச்செய்துவிடும் தனிமை… இதனால் தான்
பழங்காலத்தில் நாம் குழுமி வாழும் இனக்கூட்டங்களாக வாழ்க்கை முறையை மாற்றத்
தொடங்கினோம்… மீண்டும் தனிமைப்படுத்துவதென்பது நம்மை பூர்வ ஜென்மங்களுக்கு இட்டுச்
செல்லும் சாத்தியக்கூறுகள் அதிகம் என்பதை மறுப்பதற்கில்லை.. எனவே தனிமை ஆபத்தானது…
அதிலும் சமூகத்தின் தனிமை பேராபத்து… எப்படி தனி மனிதனின் தனிமை பிற மனிதனின் மீது
தன் வஞ்சத்தை உமிழுமோ…! அது போல் ஒரு சமூகத்தின் தனிமையும் பிற சமூகத்தின் மீது
வஞ்சத்தையும் வெறுப்பையும் உமிழ்ந்து கொண்டே இருக்கும்…. இங்கு நம்மைப் பிரித்துக்
கொள்ள நமக்கு சாதி, மதம், இனம், மொழி, ஊர், தெரு, நிறம் என ஆயிரம் காரணங்கள்
உண்டு.. ஆனால் சேர்ந்திருக்க ”இந்திய குடியரசு” என்ற ஒற்றைக் காரணம் மட்டும்
இருப்பது அவலம்தான்… அதனால் தான் சொல்கிறேன் பிரிவினை வேண்டாம் என்று…
நான்காவதாக அவர்கள் சொல்கின்ற காரணம், மாணவர்களும்
தனித்தெலுங்கானவை விரும்புகிறார்கள்.. உணர்ச்சிப் பெருக்குடன் போராட்டத்தில் பங்கு
பெறுகிறார்கள் என்பது… எழுத்தாளர் ஜெயமோகன் அவரது பல பதிவுகளில் குறிப்பிடும் ஒரு
விஷயம் மாணவர்களையும் இளைஞர்களையும் பற்றியது… மிதமிஞ்சிய வன்முறை செயல்களையும்,
போராட்டங்களையுமே வீர்மாக எண்ணுகிறார்கள் இன்றைய மாணவர்கள் என்பது.. அதை எனக்கு
முழுவதுமாக புரிய வைத்த தருணம் தெலுங்கானா போராட்டக் களம். இளம் வயதில் அந்த சூடான
ரத்தத்துக்கு யோசிக்கும் திராணி என்பது சத்தியமாக இருக்காது.. அவர்கள் எளிதில்
உணர்ச்சிவசப்பட்டுவிடுவார்கள்… அவர்களை இந்த பாழும் அரசியல்வாதிகள் தங்களுக்கு
ஏற்றார் போல் வளைத்துக் கொள்கிறார்கள்..
இந்த மாணவர்கள் எதை வெற்றி என்று எண்ணிக் கொண்டு எக்காளம்
இடுகிறார்களோ, அதற்குப் பின்னர் ஒளிந்திருக்கும் தோல்வியை அவர்களது கண்கள்
தரிசிப்பதை சிலர் தடுக்கிறார்கள்… தனித் தெலுங்கானாவாக பிரிப்பதனையே தங்களுக்கு சம
உரிமை கிடைத்ததாக எண்ணி வெற்றி எக்காளம் இடும் இவர்கள், சேர்ந்து இருக்கும் போதே
தங்கள் உரிமைக்காக ஏன் இப்படி போராடவில்லை… சேர்ந்திருந்து எதையுமே சாதிக்க
முடியாததை இவர்கள் தங்கள் தோல்வி என்று அறிந்திருப்பார்களா…. எல்லாமே உயரப்
போகிறது.. முதலமைச்சரின் எண்ணிக்கை, அமைச்சரின் எண்ணிக்கை, எம்.எல்.ஏ மற்றும்
வட்டச் செயலார்களின் எண்ணிக்கை…. இந்த அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை திட்டம் வெற்றி
தான்… மாணவர்களுக்கு என்ன உயரும்…? கல்வி கட்டணத்தைத் தவிர…? பொறுத்திருந்து
பார்ப்போம்…
ஆங்காங்கே இன்னும் சில கூக்குரல்களும் கேட்கத் தொடங்கிவிட்டன…
மகாராஷ்டிராவை விதர்பாவாகப் பிரிப்பது, வங்கத்தை கூர்க்காலாந்தாகப் பிரிப்பது,
தமிழ்நாட்டை மூன்றாகப் பிரிப்பது எனப் பல… கூக்குரல்கள்.. தெலுங்கானாப் பகுதிகளில்
ஜெகன் மோகன் ரெட்டியின் வாக்கு வங்கியை சரியச் செய்யும் எண்ணத்துடன் காய்
நகர்த்திய காங்கிரஸ் தான் வெற்றி பெற்றதாக எண்ணி கட்சிக்கும் நாட்டுக்கும் தோண்டிவிட்டது
ஒரு சவக்குழி…
இந்தப் பிரிவினை செய்திகளைப் படித்துக் கொண்டு இருக்கும் போது
எப்போதோ படித்த கவிக்கோ அப்துல் ரகுமானின் “கோடுகள்” என்னும் கவிதை நினைவுக்கு
வந்தது… அந்த கவிதை வரிகள் இந்த ரணத்தை இன்னும் ஆழமாய் உணர்த்தும் என்பதால் அந்த
கவிதையில் இருந்து சில வரிகள்….
நாம்
கோடுகள் கிழிப்பவர்கள்
கோடுகளால் கிழிக்கப்படுபவர்கள்
கத்தியின் கீரலைப் போல்
நாம் கிழிக்கின்ற கோடுகளிலிருந்து
கசிகிறது ரத்தம்….
ஒவ்வொருவரைச் சுற்றிலும் இருக்கிறது
ஒரு
இலக்குமணக் கோடு..
ஆனால்
அந்தக் கோட்டுக்கு அப்பால்தான்
இராமனும் இருக்கிறான்….
இராவணனும் இருக்கிறான்…
என்பதை நாம் மறந்துவிடுகிறோம்……
nanba... miga arumai... neengal kurippitta naangu mukkiya kaaranangalukkaga telungana pirikka patavillai enbathe nitharsanam. atharku pinnal irukkum kevalamana arasiyale mukkiya karanam. athu neengal arinthathea... athai neengal vimarsikkamal senrathil enakku miguntha mana varutham. enakku thanjai mavattathil ooraluvukku selvakku irukkirathu, nanum muthal amaichar aaga vendum, enna seyyalam... naalaike sarapoji kallori manavargalai vaithu porattam nadathi thanjaiyai thani maanilamaga pirithu muthalvar aagivida vendiyathu than...
ReplyDeleteநீங்கள் சொல்வது உண்மைதான் யோகி... நான் வேண்டுமென்றேதான் அந்த அரசியல் காரணங்களைத் தவிர்த்தேன்.. அதற்கு முழுமுதற்காரணம் நாமும் அதனை பொத்தாம் பொதுவாக அரசியல் நாடகம் என்று சொல்லிவிட்டால், அதைப் படிக்கின்ற நம் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டமாட்டார்கள்.. அதற்கு பதிலாக “நொண்டிக் குதிரைக்கு சறுக்கியது சாக்கு” என்பது போல் அவர்கள் சொல்லிக் கொண்டு இருக்கும் சில அற்பமான காரணங்களை அலசி, அவை உண்மையிலேயே அற்பமான காரணங்கள்தான் என்பதை ஓரளவுக்கு நிருபித்துவிட்டாலே, நம் மக்கள் அதன் உண்மை காரணத்தை தாங்களாக ஊகித்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில்தான் நான் அதனை அப்படி எழுதினேன்.. இருப்பினும் அந்த அரசியல் காரணங்களை நான் முற்றிலும் தவிர்க்காமல் ஆங்காங்கே கோடிட்டி காட்டியிருக்கிறேன் என்றே நம்புகிறேன்... உங்களது பதிலுரைக்கு மிக்க நன்றி நண்பா....
ReplyDeleteungal pathiluraiyai veguvaga rasithen nanba... thangal karuthugalai eatru kolgiren.
ReplyDelete