உடம்பும் உள்ளமும் சுகமா? உன் காதல் இங்கே உள்ளபடியால் நானும் சுகம். என் பெருங்கனவை வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன், பூங்குழலி. இருண்டவன் கண்ணுக்கு கண்டதெல்லாம் பேய் என்பது போல காதலிக்கிறவன் என் கண்ணுக்கு காண்பதெல்லாம் நீயாக தெரிகிறாய் பூங்குழலி. உனக்கும் இதே நிலைமை தானா அங்கே. இப்போதும் எப்போதும் உன்னருகிலே இருக்க வேண்டும் என என் மனது அடம் பண்ணுகிறது. அதற்கு பதில் என்ன சொல்லப் போகிறாய்.
நேற்றைய முன்தினம் முதன்முதலாய் நாம் இருவரும் தனிமையில் சந்தித்த போது ஏற்பட்ட மயக்கம் இன்னும் தெளியாமல் உன் பெயரையே முனுமுனுத்துக் கொண்டிருக்கிறேன். யாருமற்ற சலனமில்லாத இடம். உனக்கும் எனக்கும் துணையாக காற்றும் கதிரவனின் ஒளியும் மரங்களும் மட்டுமே. நீல நிற சுடிதாரில் நீ தேவதையாக மின்னினாய். உன் பாதம் இம்மண்ணில் பட்டு தேர்ப்போல மெள்ள அசைந்து என்னை நோக்கி நடந்து வந்தபோது நான் சொர்கத்தில் தான் நிச்சயம் இருந்திருப்பேன்.
என்ன பேசினோம் நாம்? பேசுவதில் கவனம் இருந்தால் தானே பேசியது நினைவிருக்கும். நாம் பேசியதை ஒட்டுக் கேட்ட அந்த மரத்தின் மஞ்சள் பூக்களை கேட்டுவிட்டேன். அவை வெட்கத்தில் சிவந்துவிட்டது. விடு பேசியது போகட்டும்.
விதைத்து வேர் நீண்டு, துளிராகி, சிறு செடியாக இலை விடும் நேரத்தில் எவ்வளவு அழகு. அந்த அழகைப்போல் நம் காதலும் பேரழகு. மாசற்ற பேரழகு.
இரவுகளின் உறக்கத்தில் உந்தன் கனவு தரும் இம்சைகளை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. உன்னை நினைத்து கொஞ்சம் பாவமாய் தான் இருக்கிறது. ஏன் என்றா கேட்கிறாய்? எப்படி தான் எந்தன் கனவு தரும் இம்சைகளை பொறுத்துக்கொள்கிறாயோ? காதலில், பொறுத்தார் நீடுழி வாழ்வர்.
துளி நேரம் ஒய்வறியாத கடல், கரையினில் தன் அலைகளை அனுப்புவது போல் எப்போதும் என் காதல் உன்னை சேர்ந்துக்கொண்டேயிருக்கும். காதலில் திளைத்த இதயம் கவலை மறந்துப்போனது. சிறகுகள் முளைத்து வானில் பறந்துப்போகிறது. அந்த கடல் அளவு காதலை குடித்தாலும் தாகம் அடங்காது போல, மீண்டும் மீண்டும் உன்னை காண கண்கள் தேடுகிறது.
சந்திக்கும் போது பேசவேண்டும் என ஆயிரம் சங்கதி வைத்திருந்தேன். ஆயிரத்தையும் தூரப்போட்டு வேறு ஏதோ பேசிவிட்டேன். ஆயிரம் லட்சமாகிவிட்டது. லட்சத்தை பேச, வரும் ஞாயிறு உட்சத்தில், நாம் தனியே சந்திக்கும் பட்சத்தில் சொல்கிறேன். மிச்சத்தை நம் பார்வை பரிமாறிக்கொள்ளும்.
உன் வருகைக்கு காத்திருக்கும்.
அருள்மொழி.