Friday 13 September 2013

பயணம்....




இதமான இளம் குளிரில் 
  தொடங்கியது என் பயணம்..
வெளிச்ச நினைவுகளால் இன்று
 இருட்டிலும் சிரிக்கிறேன்..
தள்ளு முல்லுகள் அற்ற 
 ஒற்றையடிப் பாதை..
ஒவ்வோர் அடியிலும் 
 செவி தொடும் நலம் விசாரிப்புகள்..
சீவி முடிந்து பின்னலிட்டும்
 களைத்துப் பார்க்கும் தென்றல்..
சூரியக்கரம் பூமிதொட 
 தடை போடும் மாமரங்கள்..
வந்த சேதி கேள்விப்பட்டால் 
 வரிசையிடும் உறவுகள்..
பலவீட்டுப் பலகாரங்களுடன் 
 பகிர்ந்து கொள்ளும் அன்பு..
உறவு சொல்லி உரிமை கொண்டாடும்
 அண்டை வீடு அன்பர்கள்..
பாதம் தொட்டு சில்லிட்டு பின்
 வயல் வெளி ஓடும் வாய்கால் நீர்..
பூச்சிகளின் இசை மீட்டலில்
 புன்னகைக்கும் பூக்கள்..
அகவை தொண்ணூறு தொட்டும் 
 ஏர் உழும் கால்கள்..
கேசம் வெள்ளையடித்தும்
 நாற்று நடும் கைகள்..
பண்பும், கலாச்சாரமும் கலந்து 
 கட்டபெற்ற வீடுகள்..
அன்பாய் அதிகாரமிடும் தந்தை..
 அதிகாரமாய் அன்பு செய்யும் அன்னை..
சிறுவயது நண்பனாய் 
 சிரித்துப் பேசும் தம்பி..
அத்தை மகள் மாமன் மகனென
 கேலி பேசும் சுற்றத்தார்..
கண்டதும் கட்டித் தழுவி 
 ஆர்ப்பரிக்கும் நண்பர்கள்..
சொல்லிலடங்க சந்தோஷத்தில் 
 சொக்கிப் போன நிமிடங்கள்..
நீண்டு கொண்டே போன என் நினைவுகளுக்கு,
 முற்றுப் புள்ளி வைத்தார் நடத்துனர்..
     ”தாம்பரம் வந்தாச்சு இறங்குங்க”

3 comments:

  1. அன்பாய் அதிகாரமிடும் தந்தை..
    அதிகாரமாய் அன்பு செய்யும் அன்னை..
    Superb Line....Mathivathani

    ReplyDelete
  2. தலைநகரமே முழு மாநிலமாக மாறுவதால் உறவெல்லாம் வெறும் கனவாக போய்க்கொண்டு இருக்கிறது. நல்ல வரிகள். வாழ்த்துகள்...

    ReplyDelete