Friday, 6 September 2013

நட்பின் நினைவில்...




மெல்ல முயன்று
தள்ளி நின்று
கண்ணீரின்றி காண
விழைகிறேன்
உன்னுடனான என்
காலங்களை...

இன்றும் நினைவோடு
உறவாடும்
அன்று உனைக் கண்ட
முதல் நொடி
ஏதுமறியா எட்டு வயதிலே
எட்டிப் பார்த்த என் முதல்
நட்பு உன்னோடு....

விளையாட்டிலும் விட்டுக்
கொடுத்து எனை
வெல்ல வைத்து
சிரித்திருந்தாய் ..
போட்டியென்று
நான் நினைக்க
அப்போதும்
ரசித்திருந்தாய் ...

பகிர்ந்து உண்ணவும்
பகைமை மறக்கவும்
உறவின் அன்பையும்
அன்பின் ஆழமும்
அறிந்தேன் உன்னிடமே...

பொறியியல் படம் வரைகையில்
நீ கற்றுத் தந்த
அறிவியல் படம்
அழகாய் சிரிக்கிறது..
கல்லூரி கட்டுரையின்
முதல் பரிசில்
எழுத்தை நேராக்கிய உன்
பிரயத்தனம் உரைக்கிறது...

ஒருமையில் நான் விளித்த
காலங்கள்
காற்றோடு கலந்திருக்க
இன்று
பன்மையில்
நானழைக்கிறேன்
காலத்தோடு வாழ்ந்திருக்க ...

எத்தனையோ பெற்றிருந்தும்
ஏதோவொன்றை இழந்த
வெறுமையாய்
வெறிச்சோடி நிற்கிறது
பத்தாண்டு தொலைத்திருந்த
பால்ய சிநேகத்தால்


 என்னவோ  முயன்றிருந்தும்
கடைசி வரி முடியுமுன்னே
கண்ணீரின் தூரலில்
கனமாய் கரைகிறது

முற்றுப் புள்ளி...

2 comments: