Wednesday 6 March 2013

குறள் மழை - 4



ஒழுக்கத்திற்கு பெயர் போன முனிவர் தம் பெருமையை அழகாய் சொல்லி இருக்கிறார் வள்ளுவர் அவரது மூன்றாவது அதிகாரத்தில். இதோ அறத்துப்பாலின் பாயிரவியலில் மூன்றாவது அதிகாரமான, 'நீத்தார் பெருமை" , என்னே அருமை.

ஆசைகள் அனைத்தும் துறந்து
நன்னெறி எதுவென அறிந்து
அதன்படி நின்றும் நடந்தும் காட்டும் முனிவர் தம்  அருமை
அதை நூல்கள் தம்முள் ஏற்று கற்பிப்பதே அவைகளின் பெருமை

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
 -
எண்ணிலும் அடங்குமோ
முனிவரின் புகழும் அது
இதுவரை
பிறந்தார் எத்தனைப் பேரோ
இறந்தார் எத்தனைப் பேரோ
அவர் புகழின் எண்ணிக்கையும் அதைப் போன்றது

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து 
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
-
பிறப்பு பேறு என்னும்
இரண்டின் இன்ப துன்பங்களை எண்ணியும்
திண்ணிய நெஞ்சம் கொண்டு துறவறம் ஏற்ற  முனிவரின் பிறப்பு
இவ்வுலகின் சிறப்புகளுளெல்லாம் சிறப்பு!

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
-
அன்குசமாம்  நம் அறிவு
அதைக் கொண்டு புலன்கள் ஐந்தும்
நலன்கள் அற்று துறந்திட்ட
முனிவனுக்கே கிட்டும்
முக்தி அது எட்டும்

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து
-
புலன் ஐந்தும் புதைத்தவன்
தேவாதி தேவனான இந்திரனுக்கு நிகர்
இதனை அறியாதவனே
உன் அறியாமையைத் தகர்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி
-
புலன்களை அடக்கி ஆளுதல்
புவியை அடக்கி ஆளுதலை ஒத்தது
கடினமான இதனை எளிதாய் செய்வர் முனிவராகிய பெரியர்
எளிதானதை கடினமென காண்போர் சிறியர்

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
-
சுவை
ஒளி
தொடு உணர்வு
ஓசை
மணம்
இவை ஐந்தின் வகை அறிவான்
இவ்வுலகையே  தன் வசமாக்கிய துறவன் அவன்

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு
-
தந்திரம் இல்லா மாந்தர் இவரின்
மந்திரம் பூண்ட சொற்கள் அவை
எந்திர வேகத்தில் திக்கெட்டும் தீட்டிவிடும்
இவர்களின் புகழோவியத்தை காட்டிவிடும்!

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்
-
குணமென்னும் மலையின் உச்சியில் நிற்பினும்
தடுத்திடவும் முடியுமோ
நொடிப்பொழுதே ஆயினும்
தடித்தெழுந்த இவரின் சினத்தையும்!

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது
-
உயிர்கள் அனைத்தும் ஒத்தவை என
அருள் அதன் அளவு ஒரேபோல் காண்பித்து
உச்சியில் நிற்கும் முனிவன்
நிச்சயம் ஒரு மேன்மையானவன்

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்


                                                                             ஜெய கீதா

3 comments:

  1. Where you are referring...Awesome explanations.

    தந்திரம் இல்லா மாந்தர் இவரின்
    மந்திரம் பூண்ட சொற்கள் அவை
    எந்திர வேகத்தில் திக்கெட்டும் தீட்டிவிடும்
    இவர்களின் புகழோவியத்தை காட்டிவிடும்!

    ReplyDelete
  2. அருமையான விளக்கவுரை....

    ReplyDelete
  3. குறளுக்கான விளக்கங்களும் குறளே...
    அருமை....

    ReplyDelete