Monday, 18 March 2013

பாவ நகரம் - VI


இக்கதையில் வரும் பாத்திரங்களும் பெயர்களும் கற்பனையே. இப்பாத்திரங்கள் தற்காலத்தில் உயிரோடிருக்கும் யாரையும் குறிப்பிடுபவை அல்ல.

______________________________________________________________________________________________________
34000-ரூபாய் கடனை கட்ட முடியாததால் பள்ளியில் படிக்கும் தனது இரண்டு மகள்களையும் கடனுக்கு ஈடாக தந்து விட்டார் இந்தியாவை சேர்ந்த ஒரு தந்தை.
                                                                                                                                                                                                        -செய்தி
______________________________________________________________________________________________________




பாவ நகரத்தை நோக்கி வரும் ஒரு நெடுஞ்சாலை

          பாவ நகரத்தை நோக்கி ஒரு பேருந்து வேகமாக வந்து கொண்டிருந்தது. அதனுள் இருந்த அனைவரும் சில மணி நேர பயணக் களைப்பில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தனர், ஒருவரைத் தவிர. தலையெல்லாம் நரைத்துப் போய், பார்வைக்காக கண்ணாடி அணிந்திருந்த அந்த நபரின் முகத்தில் கவலை ரேகை படிந்திருந்தது. ஜன்னல் வழியே வெளியே பார்த்த அவர் கண்களுக்கு பெரிது பெரிதாக வைக்கப் பட்டிருந்த
விளம்பர தட்டிகள் நகரின் அருகாமையை உணர்த்தின. ஜோசப் என்ற பெயர் கொண்ட அந்த மனிதரின் கண்ணில் முதலில பட்டது, பாவ நகர தொலைக்காட்சி நடத்தும் 'Super Singer' போட்டிக்கான விளம்பரம். பங்கு கொள்ள விரும்பும் அனைவரும் தங்களது குரலில் ஒரு பாடலைப் பாடி பதிவு செய்து அனுப்புமாறு அதில் விளம்பரம் செய்யப் பட்டிருந்தது. ஆனால் அவர் மனம் ஸ்ரீதரின் கைது பற்றி வந்த செய்தியையே நினைத்துக் கொண்டிருந்தது.

          “20 ஆண்டுகளுக்கு முன் ஒரு உயிர் தியாகத்தின் பலன் இன்னும் பத்து நாட்களில் கிடைக்க ஆரம்பித்துவிடும். 20 ஆண்டு கால பாரத்தையும் ஸ்ரீதரின் கையில் தந்து விடலாம்" என்று எண்ணிக் கொண்டிருந்த சமயத்தில் தான் இந்த செய்தி இடியென இறங்கியிருந்தது. கவலைகளின் ஊடே தனது பையைத் திறந்து அந்த டைரி பத்திரமாக இருக்கிறதா எனப் பார்த்துக் கொண்டார்.

           பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு ஆட்டோ பிடித்து பகுதி 7-ல் அமைந்துள்ள ஸ்ரீதரின் வீட்டுக்கு செல்ல நினைத்து ஒரு ஆட்டோவை நிறுத்தினார்.
பகுதி 7க்கு செல்ல வேண்டும்"

           “200 ரூபா சார்"

           “என்னப்பா போன மாசம் தான் 100 ரூபா கொடுத்து போனன்"

           “சார் பெட்ரோல் வெல டெய்லி ஏறுது, போன மாச கதைய பேசற"

           ஆட்டோவை வேண்டாம் என்று அனுப்பி விட்டு ஒரு மாநகரப் பேருந்தில் ஏறினார். அதிலிருந்த கண்டக்டர் அமைதியாகக் கேட்டார்

           “என்னா பெரிசு, எங்க போகனும்?"

பாவ நகரம் பகுதி 7 ஸ்ரீதரின் வீடு

          அமுதா அழுது கொண்டிருந்தாள். சபேசன் ஜோசப் சாருக்கு போன் செய்து விட்டு கடை முதலாளியை அழைத்துக் கொண்டு ஸ்டேசனுக்கு சென்று விட்டார். அமுதா ஜோசப் சாரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தாள். அவளால் அழுகையை கட்டுப் படுத்தவே முடியவில்லை. 20 ஆண்டு ஊட்டி வளர்த்த மகனை கொலைகாரன் என போலீஸ் அழைத்துப் போய்விட்டது. தனிமை வேறு அவளின் அழுகையின் அளவை அதிகப் படுத்தியது. உள் அறையில் தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்த பாவ நகர செய்திகள் அவளை அதிகம் பாதிக்க வில்லை. ஒருமுறை சபேசனுக்கு போன் செய்து பார்க்கலாம் என்று எண்ணிய போது யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது.

           கதவை திறந்த போது வெளியே ஜோசப் நின்று கொண்டிருந்தார். கதவைத் திறந்தவுடன் வேகமாக உள்ளே வந்தவர்,

           “என்ன அமுதா? என்ன நடக்குது? இன்னும் பத்து நாள்ல வரப் போற ஸ்ரீதரோட பொறந்த நாள் எவ்வளவு முக்கியமானதுனு தெரியுமில்ல"

                           “ஒன்னுமே புரியலை சாமி, காலைல போலீஸ் வந்து கொலை பண்ணிட்டானு கூட்டிக் கிட்டு பொய்டாங்க"

           “20 வருசம் நாம அவன பொத்தி பொத்தி வளத்தது, இதுக்காகவா?” என்று ஜோசப் சார் கேட்ட போது அமுதாவிடம் அழுகையைத் தவிர வேறு பதிலில்லை.

           “சரி, எந்த ஸ்டேசன்"

           “பகுதி - 7 “ என்று சொல்லிக் கொண்டே தலையைத் தொலைக்காட்சிப் பக்கம் திருப்பினாள்.

           “சரி, நான் சென்று பார்த்து வருகிறேன்" என்று திரும்பியவர், அமுதாவின் அலறலைக் கேட்டு அதிர்ந்துத் திரும்பினார்.

பாவ நகரம் பகுதி 7 மோனிகாவின் வீடு

           மோனிகாவிற்கு இரவெல்லாம் தூக்கமே பிடிக்கவில்லை. இன்று மதியம்தான் கல்லூரி என்பதால் காலை பத்து மணிக்கு மேலாகியும் அரை தூக்கத்தில் படுத்துக் கொண்டே தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தாள். என்றாலும் மனதில் ஸ்ரீதரின் நினைப்புதான ஓடிக் கொண்டிருந்தது. அவன் காதலை முதன் முதலில் அவளிடம் சொன்ன அந்த தினத்தை அவளால் மறக்க முடியவில்லை. கல்லூரியில் கலை நிகழ்ச்சிகள் நடந்துக் கொண்டிருந்த அன்று ஸ்ரீதர் கவிதை போட்டி ஒன்றில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றிருந்தான். இருவரும் ஒரே வகுப்பை சேர்ந்தவர்கள். எனவே மோனிகா அவனிடம் சென்று

        “congrats என்றாள்.

          ஸ்ரீதர் பதிலுக்கு "நன்றி" என்றான்.
      
           “எனக்கு ஏன் நன்றி?"

           “இந்த கவிதையே உனக்காக எழுதப்பட்டதுதான். உன்னால் எழுதப்பட்டதுதான்"

          இவள் மூளை இவளுக்கு சட்டென்று எதையோ உணர்த்துவதற்குள் ஸ்ரீதர் அழகான தமிழில் சொன்னான்
          நான் உன்னை காதலிக்கிறேன்!!!”

           எதையோ மனம் சிந்தித்து கொண்டிருக்க தொலைக்காட்சியின் ஒவ்வொரு சேனலாக மாற்றிக் கொண்டிருந்தவள், சட்டென்று தொலைக்காட்சியில் ஒரு உருவத்தைப் பார்த்ததும் அந்த சேனலை தொலைக்காட்சியில் உறைய வைத்தாள். அது மிக பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குனர் பார்த்திபன் கிருஷ்ணசாமி. சென்ற வாரம்தான் அவளுடைய கல்லூரியில் அவர் ஒரு உரையாற்றி இருந்தார். அந்த தொகுப்பாளர் அவரிடம் சில சர்ச்சைக்குரிய கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார்.

பாவ நகரத் தொலைக்காட்சி நிலையம்:

           “சார், உங்க மருந்து கம்பெனியில அசாதாரண சக்தி கொண்ட மனிதர்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும், அதனால சில உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும் ஒரு பேச்சு உலவுகின்றதே?”

           அவர் எதற்கும் அசராதவர் போல் சிரித்துக் கொண்டே "அசாதாரண சக்தினா என்ன super power தானே?”

           தொகுப்பாளர் ஆமாம் என்பது போல் தலையசைத்தார்.

          என்ன தம்பி, இந்த துறையில இருக்கிறீங்க, இது கூட தெரியாதா?” என அந்த 50 வயது நிறுவனர் பொறுமையாகக் கேட்டார்.

          அவர் என்ன சொல்ல வருகிறார் என கூர்மையாக கவனிக்க ஆரம்பித்தார்.

           ஒவ்வொரு நாட்டிலேயும் இலக்கியங்கள் உண்டு. அதுல அவங்க அவங்க கடவுள பத்தியும் அவரோட சக்திகள் பத்தயும் நிறைய இருக்கும். உதாரணமா கிருஷ்ணர், அவர் சின்ன வயசில நிறைய தீய சக்திகள அழிச்சதா படிச்சிருக்கோம். பல கிரேக்க கடவுள்கள் எண்ணிப் பாக்க முடியாத சக்திகளை கொண்டிருந்ததா கிரேக்க நூல்கள் சொல்லுது. இதுல இருந்துதான் super hero நன்ற கருந்தே வந்தது. நம்மால எப்படி கடவுள் ஆக முடியாதோ அதே மாதிரிதான் ஒரு super hero வாவோ இல்ல அசாதாரண சக்தி கொண்ட மனிதனாவோ ஆக முடியாது. இந்த குற்றச்சாட்டு யாரோ ஒரு அசாதாரண கற்பனைத் திறன் கொண்டவரோடதுனு நினைக்கிறேணன்"

          தொகுப்பாளர் "உங்க மேல 20 வருஷத்துக்கு முன்னாடி...” என மற்றுமொரு கேள்வி கேட்க ஆயுத்தம் ஆன போது "போதும் முடிச்சுக்கலாம்" என வெளியே வந்தார். அவருக்காக காத்திருந்த விலை உயர்ந்த காரில் ஏறிக் கொண்டார்.

பாவ நகரம் பகுதி 7 மோனிகாவின் வீடு”
          அந்த உரையாடல் முடிந்தவுடன் நேற்றிரவு நடந்த ஒரு கொலைப் பற்றியும், அந்த குற்றவாளியை பிடித்து விட்டதாகவும் ஒரு செய்தியை ஒளிப்பரப்பினார்கள். சேனலை மாற்றச் சென்ற மோனிகா அந்த கொலையாளியின் புகைப்படத்தைப் பார்த்ததும் உறைந்து விட்டாள். அது ஸ்ரீதரின் புகைப்படம்.

பாவ நகரம் பகுதி 7 ஸ்ரீதரின் வீடு

          தொலைக்க்காட்சியில் ஸ்ரீதரின் புகைப்படத்துடன் Express Avenueவில் வேலை செய்பவர் கொலை செய்யப் பட்ட செய்தி ஓளிப்பரப்பாகிக் கொண்டிருந்தது.

பாவ நகரத் தொலைக்காட்சி நிலையம்: அருகே

           கார் கிளம்பியவுடன் முன்னால் அமர்ந்திருந்த அவரது பி.. வுக்கு நன்றாக அர்ச்சனை நடைபெற ஆரம்பித்தது.

           ஏன்யா! இந்த மாதிரி புரோகிராமுக்கெல்லாம் ஒத்துக்கிறீங்க?" பார்த்திபன் கிருஷ்ணசாமி கத்த ஆரம்பித்தார்.

           சார், நீங்கதான் டி.வி ல வர மாதிரி எதாவது புரோகிராமுக்கு ஏற்பாடு பண்ண சொன்னீங்க" என பயந்துக் கொண்டே சொன்னான் பி..

          சரி, சரி" என்றவரின் கைபேசி ஒலித்தது. எதின் முனை எண்ணைப் பார்த்தவுடன் கோபமடைந்தவர், போனை எடுத்து கத்த ஆரம்பித்தார்.

          என்னயா, பண்றீங்க இருவது வருஷமா? ஒரு கிழவன் கிட்ட இருந்து டைரிய திருட முடியல"

           சார் ஆள் இப்ப இந்த ஊர்லதான் இருக்கான், போறதுக்குல்ல அடிச்சிடலாம்" என எதிர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

          அந்த கார் வேகமாக சாலையில் வழுக்கிக் கொண்டு செல்ல அந்த கேள்வி இன்னும் அவரது மூளையில் ஓடிக் கொண்டிருந்தது “சார், உங்க மருந்து கம்பெனியில அசாதாரண சக்தி கொண்ட மனிதர்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும், அதனால சில உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும் ஒரு பேச்சு உலவுகின்றதே?”

                                                                                                  -பாவங்கள் தொடரும்

7 comments:

  1. Very good karthi ....waiting for 7

    ReplyDelete
  2. Me too waiting for Seven..........

    ReplyDelete
  3. கார்த்தி, எங்க கொண்டு போறீங்க...... சூப்பர்...

    ReplyDelete
    Replies
    1. hope i meet the expectations.. thanks for following

      Delete
  4. nice one. just read all 6 part.very interesting... a bank robbery-a murder-a scientific mytery- and with all this we have Dharan back in action...superb

    ReplyDelete