Monday, 14 October 2013

சிமிட்டல்கள்


 


உரையாடல்களினிடையே,
ஒரு நொடி மௌனம்
காதல் உரைத்து விட
உனக்கு நானளிக்கும் 
இடைவேளை..


நமக்கான இடைவெளியினை 
அதிகம் செய்தது
காலமா
அல்ல,
காலம் கடந்த 
என் காதலா?


அலட்சியத்தால் 
உன் கைகள் கோர்க்காமலேயே
அருகிலிருந்து வந்தேன்
அதிர்ந்து போனேன் 
நம் பாதைகள்
மாறியதை அறிந்த பின்னர்


ஆம் !
உதடுகளை ஊமையாக்கியவள் 
நான் தான்,
எப்படியேனும் நீ ,
உண்மை உதிர்த்துவிடுவாய்
என்ற உறுதியினால்


காதலில்லை என்று 
இதயத்தை 
இறுக்கிக் கொண்டவள்,
கனவுகளில் மட்டும் 
கண்ணீருடன் கலங்குவதேனோ?


நீ இல்லாத நான்,
காற்றில்லாக் குழலென்றால்
மிகைதானோ ?
இல்லை
இனிப்பில்லா விருந்தென்றால் 
குறைதானோ?


லஞ்சம்


தாயின் கருவில்
பிறக்கும் சிசுவில்
வளரும் குழந்தை
வளர்ந்த முதியோர்
அனைவரை கொல்லும்
பணத்தின் வண்ணம்
பிறந்திடும் லஞ்சம்

மருத்துவம் என்னும்
மறு உயிர் தந்திடும்
கடவுளின் தொழிலிலும்
தயக்கம் இன்றி
தலைவிர்த்து ஆடும்
இரத்தம் சுண்ட
உறிஞ்சிடும் லஞ்சம்

திருமணம் என்னும்
இரு உயிர் இணைந்திடும்
சொர்கத்து நிகழ்விலும்
பேராசை பொருட்டு
வரன் தட்சனை வேண்டி
இரு மனம் பிரிய
திருமண வைபோகமாய்
உதித்திடும் லஞ்சம்


நிரந்திர அலுவல்
போதிய ஊதியம்
கனவிலும் இன்பம்
அடங்கிய ஒருவன்
அரசாங்க சேவை
செய்திட வேண்டி
ஏழையின் உழைப்பில்
வளர்ந்திடும் லஞ்சம்

அலுவல் புரிய
அவசரம் காட்டி
தாயின் மடியில்
தூக்கம் மறந்து
உழைக்கும் பெண்ணிடம்
கலவியின் பெயரில்
கலந்திடும் லஞ்சம்

ஊரை கொன்று
உறவை கொன்று
உண்மையை கொன்று
உலகையும் கொன்று
வளர்ந்திடும் லஞ்சம்
ஒருநாள்
உன்னையும் கொல்லும்
மறவாதே.............!!!!
                                                                                             

Sunday, 13 October 2013

துளித் துளியாய் - 25



சிமிட்டல்கள்




நம் இருவருக்கும் நடக்கும்
குஸ்தி போட்டியில்
நீ தோற்று விடுகிறாய்!
சமையல் போட்டியில்,
நான் தோற்று விடுகிறேன்!..
தோற்ப்பது நாமாயினும்,
ஜெயிப்பது மட்டும் காதலாகி விடுகிறது!!
 
 
 
நம் காதல் சேர்ந்திருந்தால்,
நமக்கு குழந்தைகள் பிறந்திருக்கக் கூடும்!
பிரிந்ததினால்,
கவிதைகள் பிறக்கின்றன!!
 
 
 
உன்னை காதல் சொட்ட சொட்ட
பார்த்த கண்களில்
இன்று கண்ணீர் சொட்டுகிறது!
 
 
 
உன் சாயலில் யாரையேனும்
தெருவில் பார்த்துவிட்டால்,
நீயாக இருக்கக் கூடாதா என்று
இதயத் துடிப்பு எகுருகிறது..
நீயில்லை என்று தெரிந்த பின்பு,
மீண்டும் வெறுமனே துடிக்கின்றது!
 
 
 
 
கையில் இருந்த மிட்டாயை தொலைத்த
குழந்தையாய் இன்னும் தேடிக் கொண்டுதானிருக்கிறேன்
நான் செல்லும் சாலைகளில் எல்லாம்.....
உன்னை!

Saturday, 12 October 2013

நிலவுடன் சில நிமிடங்கள் ..

 

கெஞ்சிக் கெஞ்சி
கொஞ்சல் கதை பேசும்
குளிர் காற்று
நீள நிலப்பரப்பாய்
நெடுந்தூர,
நீலப் புல் விரிப்பாய்
வானம்
சுற்றிச் சூழ்ந்திருக்க
தனிமையில் நான்





தோழனுக்குத் தோழியாய்
காதலனுக்குக் காதலியாய்
கன்னியவள்,
கலைந்த மேகங்கள்
நடுவே
காட்சி தந்து
என்
கண்கள் நிறைத்தாள்





அடடா,
அவளை,
கண்டு மகிழாக்
கண்கள் இல்லை
தன்னை மறவா
நெஞ்சம் இல்லை
கசிந்துருகாக் கவிஞன்
தரணியில்,
இல்லவே இல்லை





ஓயாமல் என்னை
உற்று நோக்குமவள்
ஓரிரு கணங்கள்
மட்டும்
ஓடி ஒளிவது
ஏனோ ?
என்னுடன்
விளையாட விழைகின்றாளா?
இல்லை,
என்னை
விந்தை காண
அழைக்கின்றாளா?





மங்கையவள் மயக்கத்தில்
எந்தன் நிலை
நான் மறந்தேன்
இராகமொன்று
நான் இசைக்க
தாளம் தட்டி
அவள்,
தலை அசைக்க
தரணியில் தனித்திருப்போர்
நாங்களென்ற
நாடகமொன்று அரங்கேறியது





கயவனவன்
கருமேகங்கள் வழி
கழகம் செய்ய
என்னவள்,
எங்கோ பறந்தோடினாள்
என்னைத்
தனிமைச் சிறையில்
தத்தளிக்க விட்டு





ஏக்கம் தாக்கியதால்
விடியலை வெறுத்து
வேற்று வீதிகளில்
உலா வருகிறேன்
அவள் துணை நாடி ..

என்ன செய்தாய் என்னை??



உன் முகம், மின்னி, மறையும்போதெல்லாம் ,
நான் மூர்ச்சையுற்று போவது, ஏன் ??

நீ  என்னுடன்  இருக்கும்  வேளையில்,
நான் உருகுலைந்து போவது, ஏன் ??

உன் மலர்ச்சிந்தனைகள், என் மனச்சோலையில்,  மலர்கையில்,
ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடிப்பது, ஏன் ??

உன்னைக்  காணும்போதெல்லாம்,
காற்றினுள்ளும் மூச்சுத் திணறுவது, ஏன் ??

உன் குரல் என் செவி தழுவும்போதெல்லாம்,
உலகிற்கு நான் செவிடாவது, ஏன் ??

உன் பெயரை உச்சரிக்கும்போதெல்லாம் ,
எனை அறியாமலே, உதடுகள் புன்னகைப்பது, ஏன் ??

உன் வரவின்போதெல்லாம்,
எனக்குள் உண்டாகும் மனநடுக்கம், ஏன் ??

உன் நினைவுகள் தாளாமல்,
நள்ளிரவெல்லாம், நிலவிற்கு துணையிருக்கிறேன்,  ஏன் ??

இப்படி,
வினாக்கள் தான் விரிகின்றன….
விடைகள் இன்னும் விளங்கவேயில்லை…..

பெண்மைக்கான நாணம்,
என்னைக் கொல்லுமுன்,  சொல்லிவிடேன்,
“என்ன செய்தாய் என்னை???”

Thursday, 10 October 2013

வரமா? இல்லை சாபமா?, வாழ்க்கை




மொட்டுக்குள் மகரந்தமாய்,
என் தந்தையின் சட்டைப்பைக்குள்,
நான் தவழ்ந்த காலங்களே……..

இரட்டைப் பின்னலுடன்,
என் தாய் கையசைத்து  வழியனுப்ப,
நான் பள்ளி சென்ற காலங்களே…..

நட்பு   என்னும்   ஒற்றைச்சொல்லை,
உலகமாய்  எண்ணி,
நான் அழுது,  சிரித்த  காலங்களே……

கல்லூரிக்குள், கால்  பதித்து ,
புது சிறகு முளைத்த  சிட்டாய்,
நான் சிறகடித்த  காலங்களே…..

யாரை  விட்டது விதி ???
காதல் பாதையின்,
வழியறிந்து,  பின்  வலியறிந்த  காலங்களே……

இப்படியாய்,
கடந்து விட்ட  காலங்களை,
கரைந்து விட்ட  நிஜங்களை,
மீண்டும்  வேண்டுகிறேன்  ஒருமுறை…..

கடந்து போனதில்,
கனவில் நடந்து போயாவது   தெரிந்து கொள்ளலாமென்றுதான்,
“வரமா? இல்லை சாபமா?,  வாழ்க்கை”……….

Tuesday, 8 October 2013

8 காதல் கடிதங்கள் கடிதம் 4 - விருட்சம்


பிரியமுள்ள பூங்குழலி,

          ஆளும் கட்சி எதிர் கட்சியாகி மீண்டும் ஆளும் கட்சியாக வந்தபோது தான் என் நினைவுக்கு வருகிறது நாம் காதலிக்க ஆரம்பித்து ஆகிவிட்டன ஆண்டுகள் ஆறு. இமை மூடி பெருமூச்சு விட்டு கொஞ்சம் பின்னோக்கினால் நானும் நீயும் பள்ளி சீருடையில் செய்முறை வகுப்பில் எதிர் எதிர் மரபலகையில் உட்கார்ந்து படித்தது ஞாபகம் வருகிறது. வேதியல் செய்முறை வகுப்பில் நமக்குள்ளே வேதியல் மாற்றம். ஆகா…..

     ஆண்டுகள் ஆறானாலும் மாறாமல் தான் இருக்கிறது நம் காதல். நாம் எப்போதும் சந்திக்கும் இடத்தில் இருக்கும் மரம் எப்பெரியது? அந்த விருட்சத்தின் அடிமரம் எவ்வளவு அகலம். அதன் கிளைகள் எத்தனை. அது இது நாள் மட்டும் கொடுத்த பூவும் காய்களும் கனிகளும் எத்தனை. அதன் வேரின் நீளம் எவ்வளவு..

       அதுப்போல தான் நம் காதலும். பள்ளியில் ஆரம்பித்து இப்போது கல்லூரி கடைசி ஆண்டில் தொடர்கிறது. இத்தனை காலத்திலும் நம் காதல் தோய்வில்லாமல் வளர்ந்து வருகிறதென்றால் அது நமக்குள் இருக்கும் உண்மையான அன்பு, விட்டு கொடுத்தல் தான்.

      பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கையில்லை. பிரச்சனைகள் இல்லாத காதலும் இல்லை. ஆனால் எந்த சூழ்நிலையிலும் எனக்கு உன் மீதிருந்த நம்பிக்கையும் உனக்கு என் மீதிருந்த நம்பிக்கையும் நம்மை கைவிடவில்லை. காதலில் முக்கியம் நம்பிக்கை. அது தான் காதலின் உயிர்.

       நாம் சண்டைப்போட்டுக் கொள்ளும் நாளிலெல்லாம் நான் ஒன்று நினைப்பதுண்டு. எல்லா சண்டைகளும் இப்போதே வந்துவிடட்டும். பின் நானும் நீயும் கணவன் மனைவியாக வாழும் போது சண்டைகள் தீர்ந்து மகிழ்ச்சி மட்டுமே நமக்குள் இருக்க வேண்டும். என்ன நியாமான எண்ணம் தானே?

       என் மீதி வாழ்வு முழுதும் இவளோடு தான் கழிக்கப்போகிறேன் என்று முடிவெடுத்து அவளோடு இன்ப துன்பகளில் பங்கெடுத்து வாழ்வதே உண்மையான காதலின் அறிகுறி.

         காதலிப்பவர்கள் அனைவருமே உணரவது ஒன்றுள்ளது. அது நம்மை விடச் சிறந்த காதலர்கள் யாரும் இவ்வுலகில் இலர் என்பதே. அது தவறில்லை. காதலில் மட்டும் தான் காதலிப்பவர்கள் அனைவருமே சிறந்தவர்கள் ஆவார்கள். நானும் சொல்கிறேன் நம்மை விட இந்த பூமியில் சிறந்த காதலர்கள் இல்லை.

        அந்த சிறந்த காதல் எப்போது தெரியுமா இன்னும் சிறப்படையும், திருமணத்தில் சேரும் போது தான். எனக்கு உன்னை இப்பொழுதே திருமணம் செய்து பெருவாழ்வு வாழ ஆசை வருகிறது. புத்தனுக்கு வேண்டுமானால் துன்பத்திற்கு காரணம் ஆசையாயிருக்கலாம் ஆனல் எனக்கு ஆசையே இன்பம். உன்னோடு கலந்து உன் உணர்வோடு ஒன்றி அல்லும் பகலும் உனை ஒட்டியே உறவாடுவதே இன்பம். அதற்காய் ஆசைபடுகிறேன்.


பேராசைகளுடன்,

அருள்மொழி.

Monday, 7 October 2013

தீபாவளி - என் நினைவுக்குறிப்பு...


தீபாவளி வரப்போகுது…

அப்போது எனக்கு எட்டு வயது. தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே தேதியை நான்தான் கிழிப்பேன். ஒவ்வொரு நாளும் குறைந்து கொண்டே வரும் தீபாவளியை நோக்கி. புத்தாடை எடுப்பதற்காய் அப்பாவின் அழைப்பிற்காக ஒவ்வொரு நாளும் காத்திருப்பேன். நாட்கள் நெருங்க நெருங்க பொறுமையிழந்து அப்பாவிடம் புதுச் சட்டை எப்போ எடுக்கப் போவோம் என்று அடம் பிடிப்பேன். அப்பா சும்மா சொல்லுவார் "இந்த முறை சட்டை கிடையாது என்று" இரவெல்லாம் யாரிடமும் பேசாது அழுது தீர்த்த பிறகு அம்மா சொல்லுவாள் அப்பா துணி எடுக்க பணம் கொடுத்திருப்பதாக...
மறு நாளே நான் அண்ணா மற்றும் என் தம்பி மூவரும் அம்மா அப்பாவுடன் எங்க ஊரு போத்திஸ் கடைக்கு போவோம். கடைக்குள் நுழைந்தவுடன் ஒருவிதமான புதுத் துணியின் வாடையை நுகர்ந்து கொண்டே நான் அப்பாவுடனும், தம்பி அம்மாவுடனும் அண்ணன் தனியாகவும் என்ன நிறத்தில் எடுக்கலாம் என்று யோசனையில் திணறுவோம். வழக்கம் போல அப்பாவும் அம்மாவும் தங்களுக்கு எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஒரு வழியாக துணி எடுத்தாகி விடும். நான் முழுக்கால் சட்டை எடுத்திருப்பேன் அம்மா திட்டுவாள். இவனுக்கு அரைக்கால் சட்டை போதுமென்று அப்பாவிடம் கேட்க நானா கேட்பேன். கடையில் அழுது புரள்வேன். கடைசியில் நான் எடுத்த துணியுடன் கடையைவிட்டு நகருவோம். அன்றிரவு அந்த சட்டைத் துணியை பிரித்து எடுத்து பக்கத்து வீட்டு பிள்ளைகள் எல்லோரிடமும் காண்பித்து மகிழ்வேன். சரி அதை தையல் காரரிடம் கொடுத்து தைக்கணுமே. அடுத்த எதிர்ப்பார்ப்பு ஆரம்பித்து விடும்.

தையல் காரர் சீக்கிரம் அளவெடுப்பார் ஆனால் சீக்கிரம் தைப்பாரோ!!!
பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமிருக்கும் வேளையில், பலகாரச் சந்தா போட்டு வைத்திருந்த அம்மா அன்று குடம் நிறைய பலகாரங்கள் வாங்கி கைக்கு எட்டாத தூரத்தில் வைத்து விடுவாள். சீக்கிரம் வாயேன் தீபாவளியே என தவமாய்க் கிடப்பேன்.


நாளைக்கு தீபாவளி. சாந்திரம் ஸ்கூல் முடிஞ்சதும் ஓட்டமா ஓடிப்போயி அம்மா புதுச் சட்ட தச்சு வந்திருச்சான்னு கேட்டா... இன்னும் வரவே இல்லையேன்னு சொல்லுவாங்க. தையல் கட பக்கம் 100 வாட்டி போயி என் சட்ட ஏதாவது தெயரயுதான்னு ஒளிஞ்சு நின்னு பார்ப்பேன். அன்று இரவு தான் என் துணியே தைக்க எடுப்பாரு. அவரு கிட்ட போயி அம்மா துணி கேட்டு வரச்சொன்னாங்க என்று பரிதாபத்தோடு சொல்வேன். ராத்திரி 11 மணிக்கு வாங்கிக்க சொல்லி சொல்லுவாரு. பிறகு ஒரு வழியா தச்சு துணி வீடு வந்திடும்.

பக்கத்துக்கு வீட்டுல அக்கா உள்ளங்கை குளிர மருதாணி வச்சி விடுவாங்க. மருதாணிய காலையிலதான் உரிக்கணும் இல்லைனா செவக்காதுன்னு சொல்லி அனுப்புவாங்க. தூக்கம் வராது. அப்பா வர்ற வர தூங்காம இருந்தா வெடி என்னென்ன வாங்கிட்டு வர்றாங்கன்னு பார்க்கலாம். ஆனா நான் அம்மாகிட்ட அப்பா வந்ததும் எழுப்பிவிடுங்கன்னு தூங்கிடுவேன். அப்பா 12 மணிக்கு வருவாங்க. என்ன எழுப்பி விடுவாங்க ஆனா தூக்க கலக்கதில ஒன்னும் தெரியாது. காலையில அம்மா 4 மணிக்கெல்லாம் எழுந்து குளிச்சிட்டு இட்லி சுட ஆரம்பிச்சிடுவாங்க.  வாசல் முன்னாடி அழகழகா கோலங்கள் கண்ணைச் சிமிட்டும். தெரு பசங்க யாரு முதல்ல வெடி போடுறதுன்னு போட்டிபோட்டுவாங்க. அஞ்சு மணி இருக்கும் பக்கத்து வீட்டு அண்ணே முதல்ல ஒரு சர வெடிய போட்டு தொடங்கி வைப்பாரு. தூங்குற எல்லா இளவட்டங்களும் முளிச்சிக்கும். எனக்கு வெடின்ன ரொம்ப பயம். யாராச்சும் அணுகுண்டு போடுறாங்க அப்படின்னு சொன்னாலே போதும் எங்க வீட்டுல அடுப்படி கீழ வெறகு வைக்கிற சின்ன எடவெளி இருக்கும் அதுக்குள்ளே போயி காது ரெண்டையும் பலமா பொத்திக்குவென்.  அம்மாகிட்ட வெடிச்சிடுச்சான்னு உறுதி பண்ணிகிட்ட பிறகு தான் வெளிய வருவேன். சரி எழுந்தாச்சு அடுத்து மருதாணி கை செவந்திருக்கான்னு பார்த்திட்டு குளிக்க போவேன்.

இன்றைக்கு தீபாவளி நெனச்சு பார்க்கவே சந்தோசமா இருக்கும். பொழுது லேசா விடியும். அண்ணே பெரிய வெடியெல்லாம் நைட்டே பிரிச்சு வச்சிருப்பான். அம்மா புது சட்டை எடுங்கன்னு கூப்பிடுவேன்.

அப்பாவும் தம்பியும் நல்லா தூங்கிட்டு இருப்பாங்க. அம்மா சட்டைக்கு மஞ்ச தேச்சு போட்டு விடுவாங்க. மணி ஆறடிக்கும் வெடி சத்தம் காத கிழிக்கும். அம்மா கேசரி கிண்டி ரெடியா வச்சிருப்பாங்க. அத ஒரு ருசி பார்த்துட்டு எதோ போருக்கு போகுற மாதிரி கையில பத்தி குச்சி வெடிகளோடு வீட்ட விட்டு வெளிய போவேன். அப்பப்பா என்ன ஒரு குஷி பத்து மணி வரைக்கும் வெடி வெடி வெடி தான் போங்க. கையெல்லாம் ஒரே வெடி மருந்தா இருக்கும். சட்டையில அங்கங்க ஓட்ட விழுந்திருக்கும். இட்லிகள் பல சாப்பிட்டுட்டு மீண்டும் போருக்கு சென்று விடுவேன். மதியம் ஆக ஆக ஒரு மாதிரியா இருக்கும். என் தம்பி பொட்டு வெடியும் துப்பக்கியுமா இங்கேயும் அங்கேயும் சுத்திக்கிட்டு இருப்பான். அப்பெல்லாம் டிவி கெடயாது. ரெண்டு பிஜிலி பாக்கெட்ட வெடிச்சிகிட்டெ மதியம் முழுவதும் போயிடும்.

சாயங்காலம் ஆகி இருட்ட ஆரம்பிக்கும் அப்பத்தான் வெளியில புது மாப்பிள்ள பொண்ணுங்க எல்லாம் தரச்சக்கரம், புஸ்வானம், மத்தாப்பெல்லாம் போட ஆரம்பிப்பாங்க. நான் இன்னும் கொஞ்ச நேரத்தில தீபாவளி முடிஞ்சிடுமேன்னு கவலைல இருப்பேன். வெலக்கூடின வெடியெல்லாம் அப்பத்தான் கரியாகும். தெருவே ஜெக ஜோதியா இருக்கும். ஒன்பது மணியாகும். கொஞ்சம் கொஞ்சமா வெடிச் சத்தம் குறைய ஆரம்பிக்கும். நான் மட்டும் படியில உட்கார்ந்து யாராவது வெடி போட மாட்டாங்களான்னு தவம் கிடப்பேன்.   மணி பத்த நெருங்கும் அப்பறம் தெரு முழுக்க வெடிக்காத வெடிகள பொறுக்கி தீயில போடுவேன். அது தஷு  புஷுன்னு கேட்க்கும். மணி பதினொண்ண தாண்டும் அவ்வளவு தான் தீபாவளி முடிஞ்சு போச்சு. வீட்டுக்குள்ள போகவே மனசில்லாம ஒரு வழியா வீட்டுக்குள்ள போயிடுவேன். இனி அடுத்த தீபாவளி தான். இன்னும் 365 நாளு கிடக்கு. மறு நாள் அதே புது சட்டய போட்டு ஸ்கூலுக்கு போவேன்.....

முற்றும்...

தீபாவளி குறித்து உங்களின் அனுபவங்கள் வரவேற்கப்படுகின்றன...

Saturday, 5 October 2013

என் தமிழனின் பெயர் !!!



காலைக் கதிரை தட்டியெழுப்பி ,
  கழனி கற்றுத் தந்த சந்ததி....!

பிறன் பசி போக்கியே 
   தன் பசி மறந்த சமூகம்..!

இன்னமும் எட்டாத அறிவியலை ,
   அன்றே சுவடிகளில் தந்த மதி நுட்பம்...!

முயன்று தமிழ் வளர்த்து 
   முறத்தால் புலி விரட்டிய
பெண் சிங்கங்களின் வீரக்கோட்டை..!

வந்தோரை வணங்கி வாரிக்கொடுத்தே 
  வளைந்து போன மரபு..!

மாசற்ற தாய்ப் பாலாய்..
  தூசற்று ஒளிர்ந்த நாகரிகத் தோற்றம்!!

அன்று தமிழால் புவியாண்டவன் ...!
  இன்று கம்பி வேலிகளுக்குள் கைதியாக...!!

சிலம்பு விளையாடிய கைகளில் 
  விலங்கு பூட்டப்பட்ட வளையங்கள்...!

நாகரிகத்தின் முன்னோடி..
  மானம் காக்கப் போராடுகின்றான்...

கண்ணகியின் பரம்பரை...
  கற்பிழந்து நிற்கிறது...!!

அட்சயப் பாத்திரம் தந்தவன்..
  ஒட்டிய வயிறுடன் மரிக்கிறான்..!!!

ஒட்டு மொத்த தமிழனையும் ,
  அனாதையாக்கிய மாயத் தீவு,,,,!!!

தன் இனம் அழிவதை -கண்முன்னே 
  கண்டு துடிக்கும் கட்டிடப் பட்ட கைகள்...!

வான் வெளியில் கட்டப்பட்ட ,
  பறவையின் எல்லைக் கோடுகளாய்..
பேச்சுரிமையற்று வீழ்ந்து போன உதடுகள்..!

விதை கிழிதெழும் விருட்சமாய்.........
அணை உடைக்கும் காட்டாறாய்.....
அனல் கக்கும் ஆதவனாய் மாறும் வரை,,,
  
   அகிலத்தில் என் தமிழனுக்கு 
          அடிமை என்று தான் பெயர்...!!!!!

Sunday, 29 September 2013

8 காதல் கடிதங்கள் கடிதம் 3 – செடி


பிரியமுள்ள பூங்குழலி,
           உடம்பும் உள்ளமும் சுகமா? உன் காதல் இங்கே உள்ளபடியால் நானும் சுகம். என் பெருங்கனவை வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன், பூங்குழலி. இருண்டவன் கண்ணுக்கு கண்டதெல்லாம் பேய் என்பது போல காதலிக்கிறவன் என் கண்ணுக்கு காண்பதெல்லாம் நீயாக தெரிகிறாய் பூங்குழலி. உனக்கும் இதே நிலைமை தானா அங்கே. இப்போதும் எப்போதும் உன்னருகிலே இருக்க வேண்டும் என என் மனது அடம் பண்ணுகிறது. அதற்கு பதில் என்ன சொல்லப் போகிறாய்.
நேற்றைய முன்தினம் முதன்முதலாய் நாம் இருவரும் தனிமையில் சந்தித்த போது ஏற்பட்ட மயக்கம் இன்னும் தெளியாமல் உன் பெயரையே முனுமுனுத்துக் கொண்டிருக்கிறேன். யாருமற்ற சலனமில்லாத இடம். உனக்கும் எனக்கும் துணையாக காற்றும் கதிரவனின் ஒளியும் மரங்களும் மட்டுமே. நீல நிற சுடிதாரில் நீ தேவதையாக மின்னினாய். உன் பாதம் இம்மண்ணில் பட்டு தேர்ப்போல மெள்ள அசைந்து என்னை நோக்கி நடந்து வந்தபோது நான் சொர்கத்தில் தான் நிச்சயம் இருந்திருப்பேன்.
என்ன பேசினோம் நாம்? பேசுவதில் கவனம் இருந்தால் தானே பேசியது நினைவிருக்கும். நாம் பேசியதை ஒட்டுக் கேட்ட அந்த மரத்தின் மஞ்சள் பூக்களை கேட்டுவிட்டேன். அவை வெட்கத்தில் சிவந்துவிட்டது. விடு பேசியது போகட்டும்.
       விதைத்து வேர் நீண்டு, துளிராகி, சிறு செடியாக இலை விடும் நேரத்தில் எவ்வளவு அழகு. அந்த அழகைப்போல் நம் காதலும் பேரழகு. மாசற்ற பேரழகு.
         இரவுகளின் உறக்கத்தில் உந்தன் கனவு தரும் இம்சைகளை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. உன்னை நினைத்து கொஞ்சம் பாவமாய் தான் இருக்கிறது. ஏன் என்றா கேட்கிறாய்? எப்படி தான் எந்தன் கனவு தரும் இம்சைகளை பொறுத்துக்கொள்கிறாயோ? காதலில், பொறுத்தார் நீடுழி வாழ்வர்.
         துளி நேரம் ஒய்வறியாத கடல், கரையினில் தன் அலைகளை அனுப்புவது போல் எப்போதும் என் காதல் உன்னை சேர்ந்துக்கொண்டேயிருக்கும். காதலில் திளைத்த இதயம் கவலை மறந்துப்போனது. சிறகுகள் முளைத்து வானில் பறந்துப்போகிறது. அந்த கடல் அளவு காதலை குடித்தாலும் தாகம் அடங்காது போல, மீண்டும் மீண்டும் உன்னை காண கண்கள் தேடுகிறது.
        சந்திக்கும் போது பேசவேண்டும் என ஆயிரம் சங்கதி வைத்திருந்தேன். ஆயிரத்தையும் தூரப்போட்டு வேறு ஏதோ பேசிவிட்டேன். ஆயிரம் லட்சமாகிவிட்டது. லட்சத்தை பேச, வரும் ஞாயிறு உட்சத்தில், நாம் தனியே சந்திக்கும் பட்சத்தில் சொல்கிறேன். மிச்சத்தை நம் பார்வை பரிமாறிக்கொள்ளும்.


                               உன் வருகைக்கு காத்திருக்கும்.

                                        அருள்மொழி.

Sunday, 22 September 2013

நிலமெல்லாம் நீ வேண்டும்!!!



நெல்லெல்லாம் சருகான
திசையெல்லாம் அனல் காற்று;

ஊற்றெல்லாம் புதரான
வழியெல்லாம் சுடும் காடு;

வற்றிப்போன கரையெல்லாம்
வெயில் வதக்கிய மீன் குஞ்சுகள்;

கண்ணுக்கெட்டிய தொலைவு வரை
கருப்பு வெள்ளையாய் எங்கும்
கூனி கிடக்கிறது பச்சை வயல்கள்;

பூத்துக்குலுங்கிய மரக்கிளைகள்
எலும்புக்கூடாய் நிற்க்கிறது;

நிழல்கள் இல்லாத பாதையில்
கருகிக் கிடக்கிறது இலைகள்;

ஊரின்றி அமையாது உலகு
நீரின்றி அடங்காது உசுரு
நிலமெல்லாம் நீ வேண்டும்!!!
வற்றாத ஊற்றாக
கிணறெல்லாம் நீ வேண்டும்.

எட்டாத கனியாக;
சொட்டாத தேனாக;
விண்ணோடு நிலைக்காமல்,
மண்ணோடு மழையாக நீ வேண்டும்.

வெயில் பொசுக்கிடும்
உழவனின் உடலின்
வேர்வையில் கலந்து
ஓவியம் தீட்டிட வேண்டும் நீ….

சிட்டுக் குருவிக்கும், சுட்டி அணிலுக்கும்,
தொட்டி மீனுக்கும், பட்டி ஆட்டுக்கும்
வற்றாத தேனாக வேண்டும் நீ….

மழையே மண்ணெல்லாம்

நீ வேண்டும்.

Saturday, 21 September 2013

சென்னையில் மழை





தீப்பிழம்பாய் எரிந்து  கிடந்த சாலைகள்,
 
தத்தளிக்கின்றன கரை கண்டிட....!

விறகுகளாய் வெறித்து நின்ற மரங்கள்,
 
பச்சை கவசம் பூண்டு பளபளப்பாய்...!

கடும் வெயில் பார்த்து காய்ந்து போன குடைகள்,
 
மழையில் குளிக்கும் கொண்டாட்டங்கள் இன்று..!

குளிர் அறையில் அமரத் துடித்த காலம் போய்,
 
வெளியில் வராதா வெயிலென
தேநீர் குவளைகளுடன் பேச்சுக்கள் செவிகளில்..!

 
நீர் கண்டிடாத குளங்கள்,
நிரம்பி ஆறாய் ஊருக்குள்...!

 
தரைதட்டி குரிகித் திரிந்த மீன்கள்,
குதித்தெழுந்து கூச்சலிடும் குறும்புகள் குளத்தருகில்...

 
பூமித்தாயின் வயிற்றுப் பசியால்,
ஒடுங்கிய பள்ளங்களில் எல்லாம்..
 
நிறைந்து நிற்கிறது ,
மேகத்தின் கண்ணீர்...!

 
கோடைகாலப் பாதுகாப்பு ,
பலப்படுகிறது ஒருபுறம்...
 
மரங்களுக்கு நீரூற்றி..!

வான் நீலம் எதிரொளிக்கும் நீரில்ளெல்லாம்,
 
பசுமையின் ஆதிக்கத்தால் பங்கேற்கிறது பச்சை நிறம்..!

மறைந்து கிடந்த மாசுக்களும்...
 
மட்காத கழிவுகளும்...
துரத்தப்படுகின்றன தூரல்களால்...!!

 
துயர் நீக்கப் பிறந்த தேவதையின் சின்னமாய்...
சிறுகச் சேர்த்து ஒருநாளில் செலவிடும் முரண்வாதிகளாய்..
 
மேல்நோக்கி முகம் பார்க்க,
தீராமல் முத்தமிடும் காதல் கடலாய்....
  
வானுடைத்துக் கொட்டுகிறது,,,
சென்னையில் மழை!!! 

அழகின் முழுமுதலே





உன் முகம்   பார்த்து  விரியாத கண்களே  இல்லை..
வெள்ளைப் பளிங்கு மாளிகையைப்  பார்த்து,
வியக்காதவர்,  எவரிருப்பார்  சொல்??

என்னையே,  எனக்கு  பிரதிபலித்துக்  காட்டும்,
உன் கண்ணாடிக் கண்கள்,
அம்மம்மா!!
உனக்காக  உருவெடுத்த பெயர் தான் “கயல்விழியா”??

எந்த கோணத்தில் பார்த்தாலும்,
அழகாகத்  தெரியும் ஒரே முக்கோணம்,
உன் மூக்குதானடி!!!!

நீரில் மலர்ந்திருந்த, 
இரு தாமரை இதழ்களைக்  காணவில்லையாம்..
கள்ளி,
அதை உன்  உதடுகளாக்கி  வைத்திருகிறாயா??

அழகே!

செவ்வண்ணப்  பாதங்களை ஏந்தும்,
காலணிகள், நானாக ஏங்கும், பேரழகி  நீ!!!

பெண்களாலே வர்ணிக்கப்படும்,
பெண்ணழகி  நீ !!!

தத்தித்  தத்தி நடக்கும்  குட்டி வாத்தைப்  போல் ,
சாய்ந்த  நடையழகி நீ!!!

வேறென்ன  சொல்ல ,,,

பிறைநேர்   நெற்றியழகி,
பிஞ்சுக்குழந்தை நிகர் பேச்சழகி!!!

கொடிமலர் இடையழகி,
இடை தொடும்  காற்குழலழகி!!!

உன் அழகிற்கு முற்றுப்புள்ளி  வைக்க  வாய்ப்பில்லை…
முற்றுப்புள்ளியற்ற  கவிதையை எழுத, எனக்கும் வழியில்லை…
வர்ணனைகளே, வர்ணிக்கக்கூடும்,
நீதான் என் “அழகின் முழுமுதலே “!!!