Tuesday 8 October 2013

8 காதல் கடிதங்கள் கடிதம் 4 - விருட்சம்


பிரியமுள்ள பூங்குழலி,

          ஆளும் கட்சி எதிர் கட்சியாகி மீண்டும் ஆளும் கட்சியாக வந்தபோது தான் என் நினைவுக்கு வருகிறது நாம் காதலிக்க ஆரம்பித்து ஆகிவிட்டன ஆண்டுகள் ஆறு. இமை மூடி பெருமூச்சு விட்டு கொஞ்சம் பின்னோக்கினால் நானும் நீயும் பள்ளி சீருடையில் செய்முறை வகுப்பில் எதிர் எதிர் மரபலகையில் உட்கார்ந்து படித்தது ஞாபகம் வருகிறது. வேதியல் செய்முறை வகுப்பில் நமக்குள்ளே வேதியல் மாற்றம். ஆகா…..

     ஆண்டுகள் ஆறானாலும் மாறாமல் தான் இருக்கிறது நம் காதல். நாம் எப்போதும் சந்திக்கும் இடத்தில் இருக்கும் மரம் எப்பெரியது? அந்த விருட்சத்தின் அடிமரம் எவ்வளவு அகலம். அதன் கிளைகள் எத்தனை. அது இது நாள் மட்டும் கொடுத்த பூவும் காய்களும் கனிகளும் எத்தனை. அதன் வேரின் நீளம் எவ்வளவு..

       அதுப்போல தான் நம் காதலும். பள்ளியில் ஆரம்பித்து இப்போது கல்லூரி கடைசி ஆண்டில் தொடர்கிறது. இத்தனை காலத்திலும் நம் காதல் தோய்வில்லாமல் வளர்ந்து வருகிறதென்றால் அது நமக்குள் இருக்கும் உண்மையான அன்பு, விட்டு கொடுத்தல் தான்.

      பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கையில்லை. பிரச்சனைகள் இல்லாத காதலும் இல்லை. ஆனால் எந்த சூழ்நிலையிலும் எனக்கு உன் மீதிருந்த நம்பிக்கையும் உனக்கு என் மீதிருந்த நம்பிக்கையும் நம்மை கைவிடவில்லை. காதலில் முக்கியம் நம்பிக்கை. அது தான் காதலின் உயிர்.

       நாம் சண்டைப்போட்டுக் கொள்ளும் நாளிலெல்லாம் நான் ஒன்று நினைப்பதுண்டு. எல்லா சண்டைகளும் இப்போதே வந்துவிடட்டும். பின் நானும் நீயும் கணவன் மனைவியாக வாழும் போது சண்டைகள் தீர்ந்து மகிழ்ச்சி மட்டுமே நமக்குள் இருக்க வேண்டும். என்ன நியாமான எண்ணம் தானே?

       என் மீதி வாழ்வு முழுதும் இவளோடு தான் கழிக்கப்போகிறேன் என்று முடிவெடுத்து அவளோடு இன்ப துன்பகளில் பங்கெடுத்து வாழ்வதே உண்மையான காதலின் அறிகுறி.

         காதலிப்பவர்கள் அனைவருமே உணரவது ஒன்றுள்ளது. அது நம்மை விடச் சிறந்த காதலர்கள் யாரும் இவ்வுலகில் இலர் என்பதே. அது தவறில்லை. காதலில் மட்டும் தான் காதலிப்பவர்கள் அனைவருமே சிறந்தவர்கள் ஆவார்கள். நானும் சொல்கிறேன் நம்மை விட இந்த பூமியில் சிறந்த காதலர்கள் இல்லை.

        அந்த சிறந்த காதல் எப்போது தெரியுமா இன்னும் சிறப்படையும், திருமணத்தில் சேரும் போது தான். எனக்கு உன்னை இப்பொழுதே திருமணம் செய்து பெருவாழ்வு வாழ ஆசை வருகிறது. புத்தனுக்கு வேண்டுமானால் துன்பத்திற்கு காரணம் ஆசையாயிருக்கலாம் ஆனல் எனக்கு ஆசையே இன்பம். உன்னோடு கலந்து உன் உணர்வோடு ஒன்றி அல்லும் பகலும் உனை ஒட்டியே உறவாடுவதே இன்பம். அதற்காய் ஆசைபடுகிறேன்.


பேராசைகளுடன்,

அருள்மொழி.

1 comment: