தீபாவளி வரப்போகுது…
அப்போது எனக்கு எட்டு வயது. தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே தேதியை நான்தான் கிழிப்பேன். ஒவ்வொரு நாளும் குறைந்து கொண்டே வரும் தீபாவளியை நோக்கி. புத்தாடை எடுப்பதற்காய் அப்பாவின் அழைப்பிற்காக ஒவ்வொரு நாளும் காத்திருப்பேன். நாட்கள் நெருங்க நெருங்க பொறுமையிழந்து அப்பாவிடம் புதுச் சட்டை எப்போ எடுக்கப் போவோம் என்று அடம் பிடிப்பேன். அப்பா சும்மா சொல்லுவார் "இந்த முறை சட்டை கிடையாது என்று" இரவெல்லாம் யாரிடமும் பேசாது அழுது தீர்த்த பிறகு அம்மா சொல்லுவாள் அப்பா துணி எடுக்க பணம் கொடுத்திருப்பதாக...
மறு நாளே நான் அண்ணா மற்றும் என் தம்பி மூவரும் அம்மா அப்பாவுடன் எங்க ஊரு போத்திஸ் கடைக்கு போவோம். கடைக்குள் நுழைந்தவுடன் ஒருவிதமான புதுத் துணியின் வாடையை நுகர்ந்து கொண்டே நான் அப்பாவுடனும், தம்பி அம்மாவுடனும் அண்ணன் தனியாகவும் என்ன நிறத்தில் எடுக்கலாம் என்று யோசனையில் திணறுவோம். வழக்கம் போல அப்பாவும் அம்மாவும் தங்களுக்கு எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஒரு வழியாக துணி எடுத்தாகி விடும். நான் முழுக்கால் சட்டை எடுத்திருப்பேன் அம்மா திட்டுவாள். இவனுக்கு அரைக்கால் சட்டை போதுமென்று அப்பாவிடம் கேட்க நானா கேட்பேன். கடையில் அழுது புரள்வேன். கடைசியில் நான் எடுத்த துணியுடன் கடையைவிட்டு நகருவோம். அன்றிரவு அந்த சட்டைத் துணியை பிரித்து எடுத்து பக்கத்து வீட்டு பிள்ளைகள் எல்லோரிடமும் காண்பித்து மகிழ்வேன். சரி அதை தையல் காரரிடம் கொடுத்து தைக்கணுமே. அடுத்த எதிர்ப்பார்ப்பு ஆரம்பித்து விடும்.
தையல் காரர் சீக்கிரம் அளவெடுப்பார் ஆனால் சீக்கிரம் தைப்பாரோ!!!
பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமிருக்கும் வேளையில், பலகாரச் சந்தா போட்டு வைத்திருந்த அம்மா அன்று குடம் நிறைய பலகாரங்கள் வாங்கி கைக்கு எட்டாத தூரத்தில் வைத்து விடுவாள். சீக்கிரம் வாயேன் தீபாவளியே என தவமாய்க் கிடப்பேன்.
நாளைக்கு தீபாவளி. சாந்திரம் ஸ்கூல் முடிஞ்சதும் ஓட்டமா ஓடிப்போயி அம்மா புதுச் சட்ட தச்சு வந்திருச்சான்னு கேட்டா... இன்னும் வரவே இல்லையேன்னு சொல்லுவாங்க. தையல் கட பக்கம் 100 வாட்டி போயி என் சட்ட ஏதாவது தெயரயுதான்னு ஒளிஞ்சு நின்னு பார்ப்பேன். அன்று இரவு தான் என் துணியே தைக்க எடுப்பாரு. அவரு கிட்ட போயி அம்மா துணி கேட்டு வரச்சொன்னாங்க என்று பரிதாபத்தோடு சொல்வேன். ராத்திரி 11 மணிக்கு வாங்கிக்க சொல்லி சொல்லுவாரு. பிறகு ஒரு வழியா தச்சு துணி வீடு வந்திடும்.
பக்கத்துக்கு வீட்டுல அக்கா உள்ளங்கை குளிர மருதாணி வச்சி விடுவாங்க. மருதாணிய காலையிலதான் உரிக்கணும் இல்லைனா செவக்காதுன்னு சொல்லி அனுப்புவாங்க. தூக்கம் வராது. அப்பா வர்ற வர தூங்காம இருந்தா வெடி என்னென்ன வாங்கிட்டு வர்றாங்கன்னு பார்க்கலாம். ஆனா நான் அம்மாகிட்ட அப்பா வந்ததும் எழுப்பிவிடுங்கன்னு தூங்கிடுவேன். அப்பா 12 மணிக்கு வருவாங்க. என்ன எழுப்பி விடுவாங்க ஆனா தூக்க கலக்கதில ஒன்னும் தெரியாது. காலையில அம்மா 4 மணிக்கெல்லாம் எழுந்து குளிச்சிட்டு இட்லி சுட ஆரம்பிச்சிடுவாங்க. வாசல் முன்னாடி அழகழகா கோலங்கள் கண்ணைச் சிமிட்டும். தெரு பசங்க யாரு முதல்ல வெடி போடுறதுன்னு போட்டிபோட்டுவாங்க. அஞ்சு மணி இருக்கும் பக்கத்து வீட்டு அண்ணே முதல்ல ஒரு சர வெடிய போட்டு தொடங்கி வைப்பாரு. தூங்குற எல்லா இளவட்டங்களும் முளிச்சிக்கும். எனக்கு வெடின்ன ரொம்ப பயம். யாராச்சும் அணுகுண்டு போடுறாங்க அப்படின்னு சொன்னாலே போதும் எங்க வீட்டுல அடுப்படி கீழ வெறகு வைக்கிற சின்ன எடவெளி இருக்கும் அதுக்குள்ளே போயி காது ரெண்டையும் பலமா பொத்திக்குவென். அம்மாகிட்ட வெடிச்சிடுச்சான்னு உறுதி பண்ணிகிட்ட பிறகு தான் வெளிய வருவேன். சரி எழுந்தாச்சு அடுத்து மருதாணி கை செவந்திருக்கான்னு பார்த்திட்டு குளிக்க போவேன்.
இன்றைக்கு தீபாவளி நெனச்சு பார்க்கவே சந்தோசமா இருக்கும். பொழுது லேசா விடியும். அண்ணே பெரிய வெடியெல்லாம் நைட்டே பிரிச்சு வச்சிருப்பான். அம்மா புது சட்டை எடுங்கன்னு கூப்பிடுவேன்.
அப்பாவும் தம்பியும் நல்லா தூங்கிட்டு இருப்பாங்க. அம்மா சட்டைக்கு மஞ்ச தேச்சு போட்டு விடுவாங்க. மணி ஆறடிக்கும் வெடி சத்தம் காத கிழிக்கும். அம்மா கேசரி கிண்டி ரெடியா வச்சிருப்பாங்க. அத ஒரு ருசி பார்த்துட்டு எதோ போருக்கு போகுற மாதிரி கையில பத்தி குச்சி வெடிகளோடு வீட்ட விட்டு வெளிய போவேன். அப்பப்பா என்ன ஒரு குஷி பத்து மணி வரைக்கும் வெடி வெடி வெடி தான் போங்க. கையெல்லாம் ஒரே வெடி மருந்தா இருக்கும். சட்டையில அங்கங்க ஓட்ட விழுந்திருக்கும். இட்லிகள் பல சாப்பிட்டுட்டு மீண்டும் போருக்கு சென்று விடுவேன். மதியம் ஆக ஆக ஒரு மாதிரியா இருக்கும். என் தம்பி பொட்டு வெடியும் துப்பக்கியுமா இங்கேயும் அங்கேயும் சுத்திக்கிட்டு இருப்பான். அப்பெல்லாம் டிவி கெடயாது. ரெண்டு பிஜிலி பாக்கெட்ட வெடிச்சிகிட்டெ மதியம் முழுவதும் போயிடும்.
சாயங்காலம் ஆகி இருட்ட ஆரம்பிக்கும் அப்பத்தான் வெளியில புது மாப்பிள்ள பொண்ணுங்க எல்லாம் தரச்சக்கரம், புஸ்வானம், மத்தாப்பெல்லாம் போட ஆரம்பிப்பாங்க. நான் இன்னும் கொஞ்ச நேரத்தில தீபாவளி முடிஞ்சிடுமேன்னு கவலைல இருப்பேன். வெலக்கூடின வெடியெல்லாம் அப்பத்தான் கரியாகும். தெருவே ஜெக ஜோதியா இருக்கும். ஒன்பது மணியாகும். கொஞ்சம் கொஞ்சமா வெடிச் சத்தம் குறைய ஆரம்பிக்கும். நான் மட்டும் படியில உட்கார்ந்து யாராவது வெடி போட மாட்டாங்களான்னு தவம் கிடப்பேன். மணி பத்த நெருங்கும் அப்பறம் தெரு முழுக்க வெடிக்காத வெடிகள பொறுக்கி தீயில போடுவேன். அது தஷு புஷுன்னு கேட்க்கும். மணி பதினொண்ண தாண்டும் அவ்வளவு தான் தீபாவளி முடிஞ்சு போச்சு. வீட்டுக்குள்ள போகவே மனசில்லாம ஒரு வழியா வீட்டுக்குள்ள போயிடுவேன். இனி அடுத்த தீபாவளி தான். இன்னும் 365 நாளு கிடக்கு. மறு நாள் அதே புது சட்டய போட்டு ஸ்கூலுக்கு போவேன்.....
முற்றும்...
தீபாவளி குறித்து உங்களின் அனுபவங்கள் வரவேற்கப்படுகின்றன...
siru vayathu anubavangal valam vanthana kankalil.... ikkatturaiyai padikkum pothu... arumai..
ReplyDeleteNandri karuthu pakirvirkku
Deleteenaku theepavali na kalaila nerama elunthu ennai thechu kulichu idliyum kari kolambum sapdrathu.. annangaloda sernthu puthu padathuku porathu.... veethiyila ponnungalam puthu thuni potu jolipaanga avangala sight adikrathu.... athellam oru kaalam....
ReplyDeleteSuperappu
Deleteதீபாவளி,
ReplyDeleteஎன் நினைவுகளின் சிறு குறிப்புகள்..
இந்த நாள் வரை எனக்கு, என் தங்கைக்கு மற்றும் என் அன்னைக்கு மட்டும் தான் புது துணி, அப்பா ஒரு புது லுங்கி மட்டுமே வங்கிக் கொள்வார். ஒரு சட்டை வாங்கச் சொல்லி அன்புச் சண்டைகள் முகம் காட்டி மறையும் எனக்கும் என் தந்தைக்கும். சிறு வயதில் இரண்டு நாட்களுக்கு முன்னரே , வாங்கிய பட்டாசுகள் அனைத்தையும் நானும் என் தங்கையும் சரி சமமாகப் பிரித்துக் கொள்வோம் . காலை எழுந்து எங்கள் தெருவில் முதல் பட்டாசு வைக்கும் எங்கள் தந்தைக்கு அருகில் நின்று வேடிக்கை பார்ப்பது என் நாளின் துவக்கம். வேடிக்கை என்னவென்றால் இரண்டு நாட்களுக்கு முன் பிரிக்கப் பட்ட பட்டாசுகள் தன் இருப்பிடத்தை விட்டு குட நகர்ந்திருக்காது . பக்கத்துக்கு வீட்டு தம்பிக்கு தாராளமாய் தருவதே எங்கள் வாடிக்கை. மூவரின் மகிழ்ச்சியில் திளைக்கும் அன்னை. அழகான நாட்கள், நினைவு படுத்தியமைக்கு நன்றிகள் நண்பரே.
கண்ணம்மா
Karuthuppahirvukku mikka nandri tholi
Delete