Sunday 7 April 2013

கலாச்சாரக் கேள்விகள்!


வாசக வாசகிகளே


நம் கலாச்சாரத்தை நாம் புரிந்துக் கொள்வது அவசியம் என்று நான் உணர்ந்ததன் பொருட்டு இப்படி ஒரு முடிவுக்கு வந்தேன். இந்த பகுதியின் தலைப்பு, "கலாச்சாரக் கேள்விகள்". ஒரு அம்மா மகளுக்குக்கான உரையாடலாக இதை அமைத்துள்ளேன்.

கலாச்சாரக் கேள்விகள்!


நேற்று இரவு என் மகள் புவியியல் படித்துக் கொண்டிருக்கயில் அவளுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது.

மகள்:

மா...... நான் புவியியலில் இந்திய நதிகள் பட்டியலில் "கோதாவரி" நதியைப்  பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறேன். பொதுவாக ஒரு நதி எப்படி உருவாகிறது என்பதை நான் அறிவேன். அது பொது அறிவு. ஆனால் இந்த நதிகளுக்கெல்லாம் எப்படி பெயர் இடுகிறார்கள்? எப்படி அந்த பெயர்கள் ஆண்டாண்டுகளாக நினைவில் வைத்துக் கொள்ளப்படிகின்றன? இந்த மாதிரி விளக்கங்கள் இந்த புவியியல் புத்தகத்தில் இல்லையே! ஏன்?

அம்மா:

ம்ம்..... பேஷ்! பரவாயில்லையே! என் மகளுக்கு வரிகளுக்கு நடுவே கூட படிக்கத் தெரிந்திருக்கிறதே! இதை ஆங்கிலத்தில் "Reading between the lines" என்று சொல்லுவார்கள்.


மகள்:

அம்மா! வியாக்கியானம் போதும். உங்களுக்கு விடைத் தெரியுமா தெரியாதா?


அம்மா:

தெரியும் கண்ணே! உன் கேள்வியிலேயே விடை இருப்பதை கவனித்தாயா? நீ படிப்பது புவியியல். உன் சந்தேகமோ நம் கலாச்சாரத்தில். மனித இன இயல் என்றும் இதனைக் கூறுவர். இதில் தான் நம் முன்னோர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தார்கள், எதற்கு என்ன பெயர் இட்டார்கள், காரணம் என்ன, என்பதற்கெல்லாம் அன்று முதல் இன்று வரை விடைக் கிடைக்கும். சரி! விடைக்கு வருவோம். நதிகள் ஒவ்வொன்றுக்கும் நம் கலாச்சார அடிப்படையில் ஒவ்வொரு கதை இருக்கிறது. அதை நம்புவதும் நம்பாததும் நம்மை பொறுத்து. உதாரணத்திற்கு நீ படித்துக் கொண்டிருந்த கோதாவரி நதியின் கதையையே எடுத்துக்கொள்வோமே! அந்த நதி எங்கே இருக்கிறது கூறு?


மகள்:

மகாராட்டிர மாநிலத்தின் நாசிக் நகரின் த்ரியம்பக் என்னும் கிராமத்திலுள்ள பிரம்மகிரி என்ற மலையில் துவங்கி ஆந்திர மாநிலத்தின் வழியே வங்காள விரிகுடாவில் விழுகிறது. சரியா?


அம்மா:

மிகவும் சரி! கோதாவரி பெயரைப் பிரித்து அதன் அர்த்தம் விளங்குகிறதா பார்?


மகள்:

முதல் எழுத்தான "கோ" என்பதற்கு இரண்டு பொருள் உள்ளது. ஒன்று அரசன்; மற்றொன்று பசு. மீதமுள்ளவற்றைக் கணிக்க முடியவில்லை அம்மா.


அம்மா:

நல்ல முயற்சி! விடை விரைவில் அறிவாய். பிரம்மகிரி மலையில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர்"கௌதமர்" என்ற முனிவர் அவர் மனைவி, அகல்யாவுடன் ஒரு குடிசையில் வாழ்ந்து வந்தார். அந்த மலையில் சுமார் பன்னிரண்டு ஆண்டுகளாக மழைப் பெய்யாமல் பொய்த்துக் கொண்டிருந்தது; விளை நிலங்கள் வாடிக் கிடந்தன; உணவுக்கு வழியின்றி அங்கு வசித்த முனிவர்கள் எல்லாம் தவித்தனர்.

இந்த நிலையை மாற்றுமாறு கௌதமர் வருண பகவானை வேண்டிக்கொண்டார். உடனே அவர் கௌதமர் முன் தோன்றி, "உனது நிலத்தின் ஒரு பகுதியிலிருந்து தண்ணீர் பீய்த்துக் கொண்டு வரும். அதை வைத்து விவசாயம் செய்து உன் குடும்பத்தைக் காத்துக்கொள்" என்று கூறி மறைந்தார். வருணர் கூறியது போலவே நடந்தது. இதைக் கண்ட மற்ற முனிவர்கள் பொறாமையில் பொங்கினர்.  "அவன் நிலம் மட்டும் செழிப்பாக இருக்கிறதே! அதை எப்படியாவது கெடுக்க வேண்டும்" என்று முடிவு செய்தனர். கௌதமரின் விளைச்சல்களைக் கெடுக்க எண்ணிய அவர்கள், ஒரு பசி மிகுந்த பசு ஒன்றை அவர் நிலம் நோக்கி ஓட்டிவிட்டனர். பசியால் துடித்துக் கொண்டிருந்த பசு, செழித்தப் பயிரைக் கண்டதும் பூந்து விளையாடத் தொடங்கியது. இதைக் கண்ட கௌதமர் அதை துரத்தும் பொருட்டு ஒரு உலர் புல்  கட்டைத்  தூக்கிக் கொண்டு கிளம்பினார். காய்ந்த அந்த புல், பசுவைத் தீண்டிய மறு கணம், பசு மயங்கி கீழே விழுந்து மடிந்தது. ஆம்! இது பிற முனிவர்களின் சூழ்ச்சி. தெய்வத்திற்கு நிகரான பசுவைக் கொன்ற பாவம் தன்னை என்ன செய்யுமோ என்று பதறிக்கொண்டிருந்த கௌதமரை சூழ்ந்த மற்ற முனிவர்கள், அவரைக் குற்றவாளியாக நடத்தி தண்டனையும் அறிவித்தனர். அவர் வனத்திற்கு சென்று சிவபெருமானுக்கு தவம் செய்து கங்கையைத் தரைக்குக் கொண்டுவந்து, அதில் புனித நீராடினால் தான் அவர் பாவம் தொலையும் என்று கூறினர். அவரும் அவ்வாறே செய்தார்.

அவர் வேண்டுகோளுக்கு இணங்கிய சிவன், கங்கையை பிரம்மகிரிக்கு அனுப்பி வைத்தார். கௌதமர் அதில் நீராடி தன் பாவத்தைப் போக்கிக்கொண்டார். கொஞ்சம் கங்கையை கையில் எடுத்து இறந்த பசுவின் சடலத்தின் மீது தெளித்தார். பசு உயிர்த் தரித்து துள்ளி குதித்து காட்டிற்குள் ஓடி மறைந்தது!


மகள்:

பொறுங்கள்! கங்கையால் தானே பிரச்சனைத் தீர்ந்தது? அப்படியானால் இவ்வாறு பிறந்த நதிக்கு கங்கை என்றல்லவா பெயர் வைத்திருக்க வேண்டும்? ஏன் கோதாவரி என்று இட்டார்கள்?


அம்மா:

கூறுகிறேன் மகளே! பசுவின் உயிரைத் திருப்பிக் கொடுத்த நதி ஆதலால் இது, "கோ-தா-வரி" என்று பெயர் பெற்றது. கோ என்றால் பசு. ஆகவே  "கோவைத் தந்த நதி" என்று பொருள். ஆயினும்  கங்கையின் அம்சம் மிகுந்திருப்பதால் நீ கூறியவாறு இந்த நதிக்கு கங்கை என்னும் பெயரையும் சூட்டி இருக்கலாம். ஆனால் மேற்கிந்தியாவில் ஏற்கனவே இருக்கும் கங்கையை என்ன செய்வது? எனவே இந்த நதி, "தக்ஷின கங்கை" என்று அழைக்கப்பட்டது. தென்னிந்தியாவின் கங்கை என்று பொருள். மேலும் இதனை "கௌதமி" என்றும் அழைப்பர். ஏன் தெரியுமா?


மகள்:

விளங்குகிறது. கௌதமருக்கு பெருமை சேர்க்கும் வகையில்! சரியா?


அம்மா:

சரி! என் மகள் புத்திசாலி தான்! மேலும் இந்த நதியில் நீராடினால், நீராடுபவர்களுக்கு நல்ல ஒழுக்கமுள்ள, சொல் பேச்சு கேட்கும் குழந்தைகள் பிறப்பார்கள் என்பது ஐதீகம்.


மகள்:

அப்படியானால் நீங்களும் குளித்திருப்பீர்கள் போலும்?


அம்மா:

குறும்புக்காரி! எனவே தான் கோதாவரி இந்தியாவின் ஏழு புனிதமான நதிகளுள் ஒன்றாகத் திகழ்கிறது.


மகள்:

மீதம் உள்ள 6-ஐ நான் வரிசைப்படுத்துகிறேன்.
1. கங்கை
2. யமுனை
3. சரஸ்வதியை
4. நர்மதை
5. சிந்து
6. காவிரி
மேலும் கோதாவரியின் துணை ஆறுகளையும் கூறுகிறேன் கேளுங்கள்! மஞ்சாரா, இந்திராவதி, பெண் கங்கா, வென்கங்கா.


அம்மா:

அருமை!  அருமை!


மகள்:

ம்ம்ம்... மா!! கதையும் அருமை! நன்றி அம்மா! நான் மீண்டும் படிக்கப் போகிறேன். நாளைப் பள்ளியில் இந்த கதையை அனைவருக்கும் கூறி அசத்துகிறேன்!!!


கேள்விகள் முளைத்துக் கொண்டே இருக்கும்......

-

-

-

ஜெய கீதா

4 comments:

  1. அருமையான பதிவு... சிறப்பான முயற்சி.. வாழ்த்துக்கள்.. வேறொரு பதிவில் ”சரஸ்வதியை” நதியைப் பற்றியும் எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்...

    ReplyDelete
  2. உமது முயற்சியை பாராட்டுவதற்கு வரிகள் இல்லை....
    கதையோடு கதை அருமை...
    வாழ்த்துக்கள்..
    "வியாக்கியானம் என்ற புது வார்த்தையை கற்றுக்கொண்டேன் - விளக்கம்"
    நன்றி

    ReplyDelete
  3. arumai ponga.....konja neram nanum kolanthaiya mari kathai ketten....

    ReplyDelete
  4. நல்ல தொடக்கம்... தொடர வாழ்த்துகள்....

    ReplyDelete