Wednesday 10 April 2013

வரலாறு முக்கியம் அமைச்சரே - 5




வேத காலம் முடிவு பெற்றதை சென்ற பகுதியில் கண்டோம். வேத காலத்தின் முடிவில் பிறந்தது தான் பௌத்தமும் சமணமும். இந்த மதங்கள் பிறந்ததால் தான் வேத காலம் முடிவு பெற்றது என்று சொல்லுவது பொருந்தும். இந்த முடிவுக்கான காரணத்தையும் முற்பகுதியில் கண்டோம். அவற்றுள் வரிசையில் வராத சிலவற்றை இங்கு காண்போம்.
1.
வேத சடங்குகள் மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தன.
2.
சடங்குகள் எதற்காக செய்யப்படுகின்றன என்று எவர்க்கும் தெரியாதிருந்தது. எனவே புதிய தலைமுறை புரியாதவற்றை ஏன் செய்ய வேண்டும் என்று யோசிக்கத் தொடங்கியது.
3.
வர்ண முறை அதன் உச்சத்திற்கு சென்றது. எனவே வர்ணங்கள் இல்லாத ஒரு மதத்தை நாடி இயல்பாக மக்கள் சென்றனர்.
4.
வேத காலத்தில் எல்லா மத இலக்கியங்களும் சமஸ்கிருதத்தில் இருந்ததால், தங்கள் பேச்சு வழக்கில் இருந்த இந்த புதிய மதங்கள் மக்களை ஈர்த்தன.
புத்தர்:

பௌத்த மதத்திற்கு உயிர் கொடுத்தவர் புத்தர். அவரை சாக்கியமுனி என்றும் ததகதா என்றும் அழைப்பர். அவர் 563 BC இல் நேபாளத்தில் உள்ள கபிலவஸ்து நகரின் லும்பினி கிராமத்தில் பிறந்தவர். தந்தை சுத்தோதனர் ஒரு சாக்கிய அரசர்.
தாயார் கோசல வம்சத்தில் பிறந்த மஹாமாயை. புத்தர் பிறந்த ஏழாவது நாள் அவர் தாயார் காலமானார். அது முதல் அவரை வளர்த்து வந்தது, அவரின் வளர்ப்புத் தாயான கௌதமி. புத்தர் தன்னுடைய பதினாறாவது வயதில் யசோதரா என்ற பெண்ணை மணந்துக்கொண்டார். மகன் ராகுலாவுடன் பதின்மூன்று ஆண்டுகள் தன்  திருமண வாழ்வில் திளைத்தார். அவர் வாழ்வில் அவர் சந்தித்த நான்கு மனிதர்களின் தாக்கம் அவரின் வாழ்க்கை திசையையே மாற்றியமைத்தது. அவர்கள் - வயதான முதியவர், உடல்நிலை சரியில்லாதவர், பிணம் மற்றும் துறவி. இவர்களின் வாழ்க்கை எந்த வகையில் புத்தரைத் தாக்கியது என்று தெரியவில்லை எனினும் அவர்களால் அவரின் வாழ்க்கை தாகம் அதிகரித்தது. இந்த வாழ்க்கையிலிருந்து தனக்கு என்ன தான் வேண்டும் என்று சிந்திக்கத் தொடங்கினார். விடையைத் தேடும் பொருட்டு, அவரின் அரச வாழ்க்கையைத் துறந்து தனது 29-வது வயது முதல் ஒரு நாடோடியாக மாறினார். தனது ஆசைக் குதிரையான கந்தகாவையும் , தேரோட்டி சநாவையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு தன் மாளிகையை விட்டு வெளியேறினார், உண்மையைத் தேடும் பொருட்டு.
சுமார் 6 வருடங்களுக்கு இப்படி நாடொடியாய்த் திரிந்தார். அந்த காலகட்டங்களில் அவர் தன் முதல் குருவாக "அலரா கலாமா"வை ஏற்றுக் கொள்ள, மனித துயரங்களைப் போக்க அறிவும் ஒழுக்கமும் மட்டுமே தீர்வு என்ற அவரின் போதனையை ஏற்க மறுத்து, அவரை விட்டுவிலகினார்.
பின் அவரது இரண்டாவது குருவான "ருத்ரகா ராமபுத்ரர்" உடன் இணைந்தார். பிறகு அவர் 5 துறவிகளுடன் ஒரு குழு அமைத்தார். அவர்கள் - கொண்டானா, வாப்பா, பதியா, மகானாமா மற்றும் அஸ்ஸாகி. அவர்கள் அனைவரும் இணைந்து தங்களைத் தாங்களாகவே வருத்திக் கொண்டு இறுதி மோட்சத்தை அடைய முனைந்தனர். விரதம் இருந்தனர். ஓயாது தவம் புரிந்தனர். இப்படியாய் இந்த 6 வருடங்களும் தன்னை அணு அணுவாய் சித்ரவதை செய்துக் கொண்ட புத்தர், நடமாடும் எலும்புக் கூடாய்த் தேய்ந்துப் போனார். இறுதியில் இவை அனைத்தும் முட்டாள் தனமாய்த் தோன்ற, அனைத்தையும் கை விட்டவர் அந்த ஐவரையும் விட்டு அகன்றார்.
இப்படி வாழ்க்கையின் தத்துவத்தை அறிய எல்லா முயற்சிகளையும் எடுத்த இவர், இறுதியில் தன்  35-வது வயதில் பீகார் மாநிலத்தின் மகதா பகுதியில் கயா என்ற இடத்தில் உள்ள ஓர் அரச மரத்தடியில் மோட்சம்(நிர்வாணம்) அடைந்தார். வாழ்க்கையின் தத்துவத்தைப் புரிந்துக் கொண்டார். தனது முந்தைய குழுவின் 5 துறவிகள் தங்கியிருந்த சாரநாத் பகுதிக்குச் சென்று தனது முதல் உபதேசத்தை அளித்தார்.அது , "தர்மச்சக்கர பரிவர்த்தனம்" என்று அழைக்கப்பட்டது. நீதி சக்கரத்தின் சுழல் என்று பொருள். இவ்வாறே உபதேசங்களில் காலத்தைக் கழித்த புத்தர், 483 BC-இல் தனது 80-வது அகவையில் உத்திர பிரதேசத்தின் குசிநகர பகுதியின் காசியா கிராமத்தில் இயற்கை எய்தினார் (மகாபரிநிர்வாணம் அடைந்தார்).
அப்படி என்ன தான் அவருக்குக் கிடைத்தது அந்த அரச மரத்தடியில்? உண்மை!! என்ன உண்மை ? என்ன தான் அவருடைய போதனைகள்?
புத்தரின் போதனைகள்:
நான்கு பெரும் உண்மைகள
1. இந்த உலகம் முழுவதும் வலிகளும் துயரங்களும் நிரம்பியிருக்கின்றன.
2. இந்த துயரங்களுக்குக் காரணம் ஆசை.
3. ஆசைகளைத் துறந்தால் வலிகளும் துயரங்களும் நம்மைத் தீண்டா.
4. ஆசைகளைத் துறக்க புத்தரின் "Eight Fold Path" பின்பற்ற வேண்டும்.
அவையாவன :
1. சரியான கோணம்
2. சரியான நோக்கம்
3. சரியான பேச்சு
4. சரியான செயல்
5. சரியானவாழ்க்கைத்தரம்
6. சரியான முயற்சி
7. சரியான திரட்டல்
8. சரியான நெறிகள்


புத்தரின்  நம்பிக்கை :

- ஆசைகளைத் துறந்தால் மறுபிறவி என்பது பொய்த்துவிடும்; மோட்சம் கிட்டும்.
- அவரைப் பொறுத்த மட்டில் ஆத்மா என்பது ஒரு மூட நம்பிக்கை .
- அகிம்சையில் அவருக்கு அதீத நம்பிக்கை.
- அவர், மனித வாழ்க்கையின் முற்பகுதியில் செய்த வினையின் பயனை அவன் பிற்பகுதியில் அறுவடை செய்கிறான் அன்று தீர்க்கமாக நம்பினார்.
புத்தரின் மறைவுக்குப் பின் அவரைப் பின்பற்றியவர்கள் பௌத்த மதத்தைப் பரப்பினர். அவர்களுள் சிலர் இங்கே வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர்.


சந்திப்பு
ஆண்டு
இடம்
ரட்சகர்  
போதனைகள் 
முதலாவது
483 BC
ராஜ் க்ரிஹா (பீகார் )
ஆசத் சத்ரு
புத்த போதனைகள் விநய மற்றும் சுத்த பிடக்கங்களாகப் பகுக்கப்பட்டன.
இரண்டாவது
383 BC
வைசாலி (பீகார் )
கலசோகா
பௌத்தத்தைப் பின்பற்றுபவர்கள் ஸ்தவிர்மதின்களாகவும்  மகாசங்கிகர்களாகாகவும் பகுக்கப்பட்டனர்
மூன்றாவது
250 BC
பாடலிபுத்ரா (பீகார்)
அசோகா
அபிதம்மம் என்னும் மூன்றாவது பிடகம் சேர்க்கப்பட்டது 
நான்காவது 
72 AD
குண்டல்வன் (காஷ்மீர்)
கனிஷ்கா 
பௌத்தமானது மகாயானம் மற்றும் ஹீனயானம் என்னும் இரு பிரிவுகளாய்ப் பிரிந்தது





புத்த இலக்கியங்கள் :

புத்த இலக்கியங்கள் சாதாரண மனிதனின் மொழியான 'பாலி'யில் அமைக்கப்பட்டவை. அவற்றை முப்பிடகங்கள் என்று அழைப்பர்.

1. விநய பிடகம்: பௌத்த துறவிகளின் ஒழுக்க முறைகளைக் கொண்டது.

2. சுத்த பிடகம் : புத்தரின் அசலான போதனைகளைக் கொண்டது. அளவில், மற்ற இரண்டைக் காட்டிலும் பெரியது.

3. அபிதம்ம பிடகம்: பௌத்த தத்துவங்களின் விளக்கவுரை.


இவற்றைத் தவிர, மகாவம்ச  மற்றும் தீபவம்ச இலக்கியங்கள் அன்றைய இலங்கையைப் பற்றிய தகவல்களைக் கொண்டவை.; ஜதகங்கள் என்பவை புத்தரின் பிறப்புகளைப் பற்றிய கற்பனைக் கதைகள். இதில் நாம் சிந்திக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. மறு பிறவிகளை நம்ப மறுத்த புத்தரையே கொண்டு இப்படிப்பட்ட கற்பனைக் கதைகள் எப்படி உருவாகின என்பது தான் தெரியவில்லை.

பௌத்த மதத்தின் முடிவு :

இப்படியாய் புத்தரின் மறைவுக்குப் பிறகு அவரைப் பின்பற்றியர்வர்களின்  (உண்மையில் பின்பற்றினார்களா?) சில மிகைப்படுத்தல்கள் இந்த மதத்தின் அழிவுக்கு வழி வகுத்தது  என்றே கூற வேண்டும். பிராமணர்களின் சடங்குகளுள் ஒன்றான சிலை வழிபாட்டுக்கு மெல்ல பௌத்தர்கள் இடம் கொடுத்தனர்(புத்தர் சிலையைக் கொண்டு ). புத்தரை மகாவிஷ்ணுவின் அவதாரமாக கருதிய மூட மக்களின் பிரச்சாரம், தாங்கள் பிராமணத்தை பின்பற்றுகிறார்களா அல்லது பௌத்தத்தையா என்ற குழப்பத்தின் உச்சம். பாலிக்கு பதிலாய் சமஸ்கிருதம் தலை ஓங்கிய கதை, பௌத்த துரவிகளின் தவறு பட்டியல்கள், மத்திய ஆசியாவின் ஹூன அரசன் மிஹிர்குலாவின் தாக்குதல் மற்றும் பன்னிரெண்டாம் நூற்றாண்டின் துருக்கியர்களின் தாக்குதல்- இப்படியாய்  பல காரணங்களால் பௌத்த மதம் முடிவுக்கு வந்தது. சரி ,சமண மதம் என்ன ஆயிற்று ?அதைப்  பற்றி அடுத்த பகுதியில் காண்போம்.

ஜெய கீதா

3 comments:

  1. புத்த மதத்தை இலங்கையில் பரப்பியது யார், எப்போது என்ற விவரம் மகா வம்சத்தில் குறிப்பிடப் பட்டுள்ளனவா... ராஜராஜ சோழன் புத்தமதத்தை இலங்கையில் பரப்பிய விவரம் மட்டுமே எனக்கு தெரியும்.

    ReplyDelete
  2. உங்கள் அடுத்த பகுதியில் மகா வீரரைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலுடன் உள்ளேன்...

    ReplyDelete
  3. ungal kelvikku viraivil vidai alikkiren...

    ReplyDelete