Monday 1 April 2013

என்னவேணும்னாலும் பேசலாம்...




இறுதிப் போர் நடைபெற்ற காலத்திலிருந்தே உள்ளே கொதித்துக் கொண்டிருந்த உணர்வை, அரசியல் நாடகங்களின் காரணமாக வெளிக்கொணர முடியாமல் தவித்தத் தமிழக இளைஞர்களின் மனநிலையை கொழுந்துவிட்டு எரிய செய்தது திலீபன், ஜோ.பிரிட்டோ, ஷாஜிபாய் ஆண்டனி, மணிகண்டன், சண்முகபிரியன், ரமேஷ், லியோ ஸ்டாலின், பால் கென்னட் ஆகிய எட்டு மாணவர்களின் அறப்போராட்டம். இந்த போராட்டத்திலும் அரசியல் சாயம் கலக்க ஒவ்வொரு கட்சியும் முனைவது தான் வேடிக்கைக் கலந்த வேதனையையளிக்கிறது.
ஆட்சியில் இருக்கும்போது அமைதி, ஆட்சியை இழந்துவிட்டால் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வரை இனப்போராட்டம் என்ற தனது வெற்றி சூத்திரத்தையே, டெசோ அமைப்பின் மூலமாக மீண்டும் தேர்ந்தெடுத்த தமிழின தலைவர் அவர்களுக்கு இம்முறை எதிர்மறை வினையே பரிசாய்க் கிடைத்தது. டெசோ அமைப்பின் மூலமாக உண்ணாவிரதத்திற்கு அழைப்புவிடுத்தார். அந்த நேரத்தில் மாணவர்களின் போராட்டம் வெடிக்க ஆரம்பிக்க, அதை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள நினைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவையும் தி.மு.கவின் அமைப்பு செயளாலர்கள் இருவரையும் போராட்டக் களத்திற்கு அனுப்பிவிட்டு, தி.மு.கவுடன் இணைந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவர் என்று திட்டமிட்டே ஊடகங்களில் செய்தியை பரப்பினர். ஆனால் அறவழிப் போராட்டத்தில் அரசியல் கலக்கவிடாமல் விரட்டியடித்தனர் மாணவர்கள். அதுவரை இந்த விவகாரத்தில் அமைதிக்காத்த தமிழக அரசு, எங்கே மாணவர்கள் தி.மு.கவுடன் இணைந்துவிடுவார்களோ என்ற பயத்தில் மாணவர்களை கைது செய்தது, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறையை அறிவித்தது. ஆனால் இவை எவையும் போராட்டத்தை சிறிதளவும் குறைக்கவில்லை, மாறாக போராட்டம் தீவிரமடையத் தொடங்கியது. தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் தங்கபாலுவின் மீது செருப்பை வீசிய செயல் மாணவர்களின் போராட்டத்தில் ஒரு கரும்புள்ளி.

ஈழத்தமிழர்கள் விவகாரத்தை மிகச்சரியான நேரத்தில் தன் கையில் எடுத்துக்கொண்டது அ.தி.மு.க. அரசு. மத்திய அரசின் கூட்டணியிலிருந்து தி.மு.க வெளியேறியதை கிண்டலடித்து, கொலைசெய்யப்படுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட பாலச்சந்திரனின் புகைப்படத்துடன், “தாத்தா இத நீ அப்பவே செஞ்சுயிருந்தா என் உயிர் போயிருக்காது இல்ல” என்ற அ.தி.மு.கவினரின் கட்-அவுட்டுகள் தேர்தல் நேர அரசியல் பேச ஆரம்பித்துவிட்டன. இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாட அனுமதி மறுப்பு, பொது வாக்கெடுப்பு வேண்டுமென்று சட்டசபையில் தீர்மானம், இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை வேறு இடத்தில் நடத்தவேண்டும் இல்லையேல் இந்திய பிரதமர் மாநாட்டை புறக்கணிக்க வேண்டுமென பிரதமருக்கு கோரிக்கை என அதிரடிக்கும் தமிழக முதல்வரின் செயல்கள் அனைத்தும் தேர்தல் நேர அரசியலோ என்ற ஐயமே மேலோங்கி நிற்கிறது.  மின்வெட்டு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என அ.தி.மு.கவின் மீது வெறுப்பில் இருந்த மக்கள் ஈழத்தமிழர்களின் விவகாரத்தில் முதல்வரின் செயல்பாட்டைக் கண்டு வரவேற்பளிக்கத் தொடங்கிவிட்டனர். அப்படியாயின் தி.மு.க கையிலெடுத்த அஸ்திரத்தை வைத்தே தி.மு.கவை வீழ்த்திவிட்டார் ஜெ. என்பதுவே உண்மை.

காங்கிரசுடன் இனியும் கூட்டணியிலிருந்தால் தமிழகத்தில் தி.மு.க அழிந்தேவிடும் என்ற நிலையில் கூட்டணியிலிருந்து வெளியேறியிருக்கிறது தி.மு.க. அதில் அவர்களுக்கு சிறிதளவும் திருப்தி இல்லை என்பதை “தி.மு.க வெளியேறியதால் இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைத்துவிட்டதா...? 2007-ல் தி.மு.க வெளியேறியிருந்தாலும் இதே நிலைமைதான் ஏற்பட்டிருக்கும்” என்ற அறிக்கையின் மூலமாக தெளிவாக நமக்குரைக்கிறார் நம் தமிழின தலைவர். இவ்வளவு நடந்த பிறகும் இன்னும் விடாத அந்த பதவி ஆசையை என்னவென்று சொல்வது.

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் “நேர்ப்பட பேசு” நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரசின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்  அத்தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் விடுதலை புலிகளுக்கும் தொடர்பிருக்கிறதென்றும். அத்தொலைக்காட்சி நிறுவனமே மாணவர்கள் போராட்டத்தை தூண்டியது என்றும் குற்றம் சாட்டினார். காங்கிரஸ் கட்சியின் இன்னொரு தலைவரான பீட்டர் அல்போன்ஸ் வெளிநாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடாதென கூற, ஐ.நா சபையில் ஈரானுக்கெதிராக மட்டும் இந்தியா செயல்பட்டது ஏன் என எதிர்கேள்வி எழ, ஈரான் எங்கேயோ இருக்குற நாடு அதனால் பிரச்சனை எதுவும் ஏற்ப்படபோவதில்லை ஆனால் இலங்கை அப்படியா...என்று கூறுகிறார். இப்படி கேடுக்கட்ட நிலையில் தான் இருக்கிறது தமிழகத்தில் காங்கிரஸ். கேரள மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் இத்தாலி வீரர்களை தண்டிக்க வீரியம் காட்டிய பிரதமர் காலங்காலமாக தாக்கப்படும் தமிழக மீனவர்களுக்கெதிராக ஒரு கண்டனக்குரல் கூட எழுப்பாததன் காரணம் என்ன? ஒரு நாட்டு மக்களைக் கொல்லும் மற்றொரு நாட்டிற்கு ராணுவப் பயிற்சியளிக்கும் ஒரே நாடு இந்தியாவாகத்தான் இருக்கும்.

1965-ல் இந்தி திணிப்புக்கெதிரான மாணவர்களின் போராட்டம் காங்கிரஸ் அரசை ஆட்சியிலிருந்து வீழ்த்தியது. இன்று நடைபெற்று வரும் மாணவர்களின் போராட்டம் அதற்கு சற்றும் சளைத்ததல்ல. காங்கிரசுடன் யார் கூட்டணி வைத்தாலும் தமிழகத்தில் மண்ணைக் கவ்வ வேண்டியநிலை ஏற்பட்டுவிடும் என்பதால் ஒவ்வொரு கட்சியும் மண்டையை பிய்த்துக்கொண்டிருக்கிறது. இனியாவதொரு விதி செய்வோம். அதை எந்நாளும் காப்போம்.


சின்னப்பையன்

2 comments:

  1. நண்பா யோசித்துப் பார்த்தால் பிணத்தை விற்று காசு பார்க்கும் கும்பலை விட கேவலமானது தமிழகத்தின் அரசியல் கும்பல். என்னை நினைத்து நான் வெட்கப்பட்டு தலை குணிகிறேன்...

    ReplyDelete

  2. உன்னுடைய கட்டுரை மிக நன்றாக இருக்கிறது நண்பா...தமிழ் நாட்டுல காங்கிரஸ் 100 ஜென்மம் எடுத்தாலும் உள்ள ஒரு சீட்டு கெடைக்காது.
    DMK வும் அப்படித்தான். ADMK கெடச்ச வைப்ப தக்க வச்சுகிடுச்சு. தமிழ் நாட்டோட இன்னைக்கு நெலமைய ரொம்ப தெளிவா சொல்லியிருக்க........Welldone

    ReplyDelete