பிரிவு : நாவல்
பதிப்பகம் : பாரதி புத்தாலயம்
தமிழகத்தின்
தென் பிராந்திய பகுதிகளில் ஏதோ ஒரு கிராமத்தில் வாழ்ந்த பாமா என்னும் இந்த சகோதரி,
தன் வாழ்நாள் முழுவதும் தன்னை விடாமல் துரத்திக் கொண்டே இருந்த சாதிய வன்கொடுமைகளின்
தாக்கத்தால், தன் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை தொலைத்து நிராதராவாக நின்று கொண்டிருந்த
சூழலில், கிறிஸ்த்துவ திருச்சபைகளை சேர்ந்த மாற்கு என்னும் சகோதரரின் உதவியுடன், தனக்கு
ஏற்பட்ட அவலங்களில் இருந்து தன்னை மீட்டெடுப்பதற்கு மருந்தாக எழுத்தை நாடினாள். தன்
சோகங்களை பேனாவுக்குள் இட்டு நிரப்பி வார்த்தைகளாக வடிவம் கொடுக்க, அதை வாசித்துப்
பார்த்த நண்பர்கள், கண்டிப்பாக இதனை அச்சேற்றி புத்தக வடிவில் கொண்டுவர விருப்பம் தெரிவித்தனர்.
முதலில் அந்த ஆலோசனையை ஏற்க அஞ்சிய பாமா அவர்கள், பின்பு நண்பர்களின் வற்புறுத்தலால்
அதற்கு ஒப்புக் கொள்ள, கருக்கு என்ற நாவல் உதயமாகி, தமிழ் இலக்கிய பெருவெளியில் பல
சர்ச்சைகளையும், சலனங்களையும் ஏற்படுத்தியது.
இது
முதன்முதலில் நாவலாக வெளிவந்த காலகட்டம் 1998. மொத்தத்துக்கு 100 பக்கங்களுக்கு மிகாமல்
குறுநாவலின் வடிவம் கொண்டது இந்த கருக்கு. ஆனால் இந்த நாவலில் இடம் பெற்ற சாதிய கொடுமைகளின்
சுமையைப் பார்க்கும் போது நாவலின் கணம் கூடித்தான் போகிறது. நாவல் வெளிவந்த போது தன்
சொந்த கிராமத்திலேயே பயங்கரமான எதிர்ப்பை சம்பாதித்தார். தங்கள் இனத்தையும் தங்கள்
ஊரையும் அசிங்கப்படுத்தி விட்டாள் என்று கூவி பாமாவை வசைபாடத் தொடங்கியது அவர்களது
சமூகம். அதே நேரத்தில் நாவலில் இடம் பெற்றிருந்த சொல்லாடல் தமிழ் இலக்கியத்திற்கு புதிது.
கிராமங்களில் இயல்பாக மக்களால் பேசப்படும் பேச்சுவழக்கில் எந்த விதமான மொழி பிறழ்வும்,
கலப்பும் இன்றி அப்படியே எழுதியதால், அந்த மொழிநடையை உட்கிரகித்துக் கொள்வதில் சிலருக்கு
சிக்கல் ஏற்பட்டது. அதனாலும் ஆரம்ப காலத்தில் நாவலுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
பின்னர் அதன் கணம் பொருந்திய கருத்தியலை புரிந்து கொண்டு பலதரப்பிலும் அதைப் பற்றி
சிலாகிக்க தொடங்க. ஒரு புதிய மொழி நடையுடன் கருக்கு பிரகாசிக்கத் தொடங்கியது.
இந்த
கருக்கு நாவல், தலித் சமூகத்தைச் சேர்ந்த பாமா என்ற சகோதரியின் வாழ்வில் நடைபெற்ற தீண்டாமை
கொடுமைகளைகளால் கட்டியமைக்கப்பட்டது மட்டுமல்ல. அதன்வழியே ஒரு சமூகத்தின் இழிநிலையை
மக்களுக்கு எடுத்துக்காட்டுவதாகவும் அமைந்திருக்கிறது. இதனை மூன்று பிரிவுகளாக ஆசிரியர்
கையாண்டுள்ளதாகவே தோன்றுகிறது. பள்ளி செல்லும் பிராயத்தில் தீண்டாமை கொடுமை அவரை எவ்வாறு
தீண்டியது. அப்போது ஊரில் நிலவிக் கொண்டிருந்த சூழல் என்ன என்பதையும், வெளியூர் சென்று
கல்வி கற்கும் போது ஏற்பட்ட அனுபவங்கள் என்ன என்பதையும், படித்து பட்டம் பெற்று வேலை
செய்த கால கட்டங்களிலும், கன்னியாஸ்திரி மடங்களில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற
எண்ணத்தில் முயற்சித்தப் போதும் அனுபவித்த கொடுமைகள் என்ன என்பதையும் அந்த வழி சற்றும்
குறையாமல் எழுத்தில் வடித்துள்ளார் ஆசிரியர்.
பள்ளி
செல்லும் காலத்தில், பள்ளி முடிந்து வீட்டுக்கு கிளம்புவதற்கு முன்னர் பள்ளியிலேயே
மாணவ மாணவிகள் சிறிது நேரம் விளையாடிக் கொண்டிருக்க, அவர்களின் விளையாட்டு மதில் சுவர்
பக்கம் சாய்ந்து வளர்ந்திருக்கும் தென்னை மரத்தின் மீது திரும்புகிறது. அதன் மீது ஏறி
விளையாடத் தொடங்குகின்றனர். விளையாட்டின் சுவராஸ்யத்தில் அனைவரும் அந்த சிறிய தென்னை
மரத்தில் பிஞ்சு விட்டிருந்த தேங்காய் மீது கைவைக்க.. அது பாமா கைவைக்கும் போது மரத்திலிருந்து
கீழே விழுந்துவிடுகிறது. அனைவரும் பயந்து ஓடிவிட, பாமாவும் ஓடி விடுகிறாள். அடுத்த
நாள் காலை ப்ரேயர் ஹாலில் தலைமையாசிரியர் “உன் சாதிப் புத்திய காட்டிட்டியே.. ஏண்டி
இளநீய புடுங்குனே.. ஸ்கூலுக்குள்ள வராத.. வெளிய போ…” என விரட்டுகிறார். பாமா தான் அறிந்து
ஏதும் தவறு செய்யவில்லை என்பதற்கு சாட்சியாக அவர் உதிர்க்கும் கண்ணீர் மட்டுமே அங்கு
நிற்கிறது. இது அவர் வாழ்க்கையில் நேரிடையாக ஏற்பட்ட முதல் அவமானம். அதுவும் நன்கு
படித்து பட்டம் பெற்ற ஒரு தலைமையாசிரியரின் வாயில் இருந்த வந்த அந்த வார்த்தைகளை அவரால்
அவ்வளவு எளிதாக மறக்க முடியவில்லை.
தீண்டாமை
என்பதை அறியாத அந்த பிஞ்சு வயதில், அவர் தீண்டாமை, தொட்டா தீட்டாம்… என்கின்ற வார்த்தைகளை
உள்வாங்கிக் கொண்டது வேறொரு சந்தர்ப்பத்தில்… பள்ளி விட்டு வரும் வழியில் தெருவோரம்
இருக்கும் பலகாரக் கடைகளையும் வித்தை காட்டுவோரையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே
வீடு வந்து சேர்வது பாமாவின் வழக்கம்.. அன்றும் வழக்கம் போல் வீடு நோக்கி வந்துகொண்டிருக்கும்
போது, தலீத் சமூகத்தைச் சேர்ந்த வயதான பெரியாள் ஒருவர் தனது வலதுகையில் இருந்த ஒரு
பொட்டணத்தை அந்த நூல் சரடைப் பிடித்து தூக்கி வந்து கொண்டிருந்தார். அதைப் பார்த்த
சிறுமி பாமாவுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வருகிறது. அந்தப் பொட்டணத்தை உற்றுப் பார்த்தால்
அது ஒரு வடை மடிக்கப்பட்ட பொட்டணம் என்பதற்கு சான்றாக அதில் எண்ணெய் அப்பிக் கொண்டிருக்க..
அதை நூல் சரடை பிடித்துக் கொண்டே சென்று நாக்கியர் கையில் கொடுத்து விட்டு கூனி கும்பிட்டு
நிற்கிறார் அந்த முதியவர்.
பாமாவுக்கோ
சிரிப்பு தாளமுடியவில்லை. இவ்வளவு வயதாகியும் சின்ன பிள்ளை மாதிரி நூலைப் பிடித்து
பொட்டணத்தை பிடித்து விளையாடிக் கொண்டு அவர் வந்த விதத்தை தன் வீட்டில் சென்று ஸ்லாகித்துச்
சொல்ல.. வீட்டில் தாய், அண்ணன் என்று யார் முகத்திலும் சிரிப்பில்லை… “நாமெல்லா அத
தொடக்கூடாதாம்.. தொட்டா தீட்டாம்…” என்று முகத்தில் அடித்தாற் போல் பாமாவின் தாய் சொல்லிவிட்டு
விருட்டென்று வீட்டுக்குள் செல்ல பாமாவுக்கும் அதற்குமேல் சிரிப்பு வருவதில்லை. பெரியவர்
நூல் பிடித்து தூக்கி வந்த அந்த காட்சியை கண்ட நாளில் தான் பாமா தெரிந்து கொண்டாள்,
“தீண்டாமை பெருங்குற்றம்” என்பது இன்னும் நூல் அளவில் தான் இருக்கின்றது என்பதை.
சில
நேரங்களில் பாமா தன் பாட்டியுடன் உயர் சாதியினரின் வீட்டுக்குச் வேலைக்குச் செல்லும்
போது, அங்குள்ள பத்து வயது நிரம்பாத சிறுபிள்ளைகள் கூட தன் பாட்டியை பேர் சொல்லி அழைப்பதும்,
அதை பாட்டி மாத்திரம் அன்றி அந்த வீட்டாரம் கண்டு கொள்ளாமல் இருப்பதைப் பார்த்தும்
நெஞ்சம் அதிர்ந்திருக்கிறாள். மேலும் அவர்கள் கூலியாகக் கொடுக்கும் கஞ்சியைக் கூட வாங்க,
வீட்டு கால்வாயின் ஓரம் சட்டியை வைத்துவிட்டு காத்திருப்பதும், அதில் பழங் கஞ்சியை
ஊற்றும் அந்த வீட்டுப் பெண்மணி, சட்டியில் தன் கை ஒட்டாதவாறு அகன்று நின்று அதை ஊற்றுவதும்
மனதை போட்டு பிசைய.. அது அவளுக்குள் கேள்வியாக.. அதற்கு பாட்டியின் பதில் இதுதான்.
“நாமெல்லாம் தாழ்த்தப்பட்ட சனங்க தான.. காலங்காலமா நமக்கு கஞ்சி ஊத்துற மகராசங்க..
அவுங்கள அப்புடி பேசக்கூடாது….”
இதில்
கவனிக்கவேண்டிய ஒரு முக்கியமான விசயம்.. நாம் அடுத்த மக்களை அடக்கி ஆளப் பிறந்தவர்கள்
என்கின்ற எண்ணமும், நாம் அடங்கிப் போகப் பிறந்தவர்கள் என்கின்ற எண்ணமும் இரு தரப்பிலும்
சிறுவயதிலேயே மனதில் அறியாமல் விதைக்கப்படுகின்றது என்பதுதான். இந்த தவறு இன்றுவரை
கூட நடந்து வருவதுதான், நாமெல்லாம் நாகரீகம் அடைந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வதை கேள்விக்
குறியாக்குகிறது.
இவை
தவிர்த்து படிக்க வெளியூர் செல்லும் இடங்களிலும், வேலைக்கு சேரும் இடங்களிலும், கன்னியாஸ்திரியாக
போகும் இடங்களிலும் இவர் தன் அடையாளங்களை மறைத்து வாழும் சூழலும் ஏற்படுகின்றது. தான்
ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவள் என்பது தெரிந்துவிட்டால் பிறர் தன்னைப் பார்க்கும்
கேலியான பார்வைகளில் இருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் ஒடுங்கிப் போகும் காலகட்டமும்
நாவலில் கடந்து செல்கிறது.
பால்ய
பிராயத்தில் கிறிஸ்துவ சபைகளில் கடவுள் மீது நம்பிக்கை கலந்த பயம் ஏற்படுத்துவதற்காக
கூறும் சில கட்டுக்கதைகள் எப்படி பயத்தை உண்டாக்கியது என்பதும், அதில் இருந்து அவர்கள்
மீண்டு வருவதும் கலகலப்பான பக்கங்கள். குறிப்பாக கோயில் தோட்டத்தில் யாரும் அறியாமல்
பறித்த மலர்களை ப்ளக் பாய்ண்டில் சொறுகி, ஷாக் அடித்ததை கடவுள் கொடுத்த தண்டனையாக இருக்கும்
என்று எண்ணுவதும், கோயிலில் கொடுக்கப்படும் நன்மய கையால் தொட்டால் கை முழுவதும் ரத்தம்
ஒட்டிக்கொள்ளும் என்று பயமுறுத்தியதையும், கடிக்கக்கூடாது என்று சொல்வதையும் சோதித்துப்
பார்க்கும் இடங்களை கூறலாம்.
மேலும்
சாலியருக்கும் பறையருக்குமான கல்லறை தொடர்பான சண்டையின் போது போலீசின் அட்டூழியமும்
வாச்சாத்தியின் சம்பவத்தை நினைவுகூற வைப்பவை. அந்த காலகட்டத்தில் போலீசுக்கு பயந்து
ஒரு மாத காலமாக ஆண்களே ஊரில் இல்லாததால், தாங்களே வேலைக்குச் சென்று குடும்பத்தைக்
காப்பாற்றிய பெண்களின் சாமர்த்தியமும் பாராட்ட வேண்டியது. மேலும் பள்ளர், பறையர் இரண்டு
சமூகமுமே தாழ்த்தப்பட்ட சமூகமாக இருப்பினும் ஓயாமல் அவர்களுக்கு இடையே நடக்கும் சண்டைகளால்
ஆதாயம் அடைவது யார் என்னும் விடை தெரியா கேள்வியையும் நாவல் எழுப்பிச் செல்கிறது.
குறை
என்று பார்த்தால், கன்னியாஸ்திரி மடங்களில் சேர்ந்து பிற்பாடு நாம் நினைத்தது எதையும்
இங்கு செயல்படுத்த முடியாது என்ற வெறுப்பில் வெளியேறும் பாமாவுக்கு, வாழ்க்கையின் மீதான
நம்பிக்கையும் பிடிப்பும் ஒரேயடியாக போய்விட்டது என்பது ஏற்றுக்கொள்வதற்கு சற்று கடினமாக
இருப்பதால் அவை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை. மேலும் எழுதிய விசயங்களே
சில இடங்களில் மீண்டும் எழுதப்பட்டிருப்பதும் வாசிப்பிற்கான ஒரு தடையாக உள்ளது. மேலும்
நிலவியல் சார்ந்த குறிப்புகள், கதை எங்கு நடந்தது என்பது போன்ற விவரணைகள் தெளிவாக கொடுக்கப்படாமல்
தவிர்க்கப்பட்டிருப்பது ஏன் என்ற குழப்பமும் தோன்றுகிறது. மேலும் ஒடுக்கப்பட்ட மக்களின்
வாழ்க்கையை அப்படியே சொல்வதாகக் கொண்டாலும், பிற சாதிய மக்களை கேலி செய்வது போல் அமைந்திருக்கும்
சில இடங்கள் கண்டிப்பாக அவர்களை கோபப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டுள்ளதோ என்றும்
ஐயுறத் தோன்றுகிறது. அதை தவிர்த்து இருக்கலாம் என்பது என் எண்ணம்.
சாதியத்
தீண்டல்களை நீங்கள் உங்கள் வாழ்வில் நேரடியாக அனுபவித்தவர் இல்லை என்றாலும் பிறருக்கு
நிகழ்ந்ததைப் பார்த்தது இல்லை என்றாலும் கூட நீங்கள் கண்டிப்பாக இந்த நாவலை வாசிக்கவும்.
ஏனென்றால் சாதிய தீண்டாமையின் கூறுகள் நம் கண்ணில் மண் தூவி எப்படி கிளை விரித்திருக்கின்றது
என்பதை கண்டுகொள்ள இந்த ”கருக்கு” நாவல் கண்டிப்பாக உதவக்கூடும். உதாரணத்துக்கு உங்கள்
ஊரில் அதிக அறிமுகம் இல்லாத ஒருவர் உங்களிடம் பேசும் போது, “தம்பி எந்த தெரு…” என்று
கேட்டிருக்கிறாரா… அந்த கேள்வியின் உள்நோக்கம் நீங்கள் எந்த சாதியை சேர்ந்தவர் என்று
கண்டு கொள்வதுதான். மேலும் உங்கள் ஊரின் சுற்றமைப்பை எடுத்துப் பாருங்கள். அதில் பழங்காலத்தில்
கட்டப்பட்ட பள்ளிகூடங்கள், கோயில்கள், நகராட்சி அலுவலகங்கள், தபால் நிலையங்கள் இவை
எல்லாம் எந்தெந்த தெருக்களைச் சுற்றி பெரும்பாலும் அமைந்திருக்கிறது என்பதைப் பார்த்தாலே
சாதி நம் கண் மறைவில் எப்படி மறைந்திருக்கிறது என்பதை நாம் கண்டுகொள்ளக் கூடும்.
தீண்டாமை கொடுமைய எப்படியாவது அழிச்சிரனும் நண்பா..... நல்ல மதிப்புரை... வாழ்த்துகள்...
ReplyDelete